கண்டங்களை ஆராய்தல்: அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆஸ்திரேலியா | 8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கண்டம், உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தொலைதூரத்தில் தனித்து அமைந்துள்ளதால் இது கடைசியாக கண்டறியப்பட்ட கண்டமாகும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கண்டம், உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தொலைதூரத்தில் தனித்து அமைந்துள்ளதால் இது கடைசியாக கண்டறியப்பட்ட கண்டமாகும்.

இது உலகின் மிகப்பெரிய தீவாகவும் மிகச்சிறிய கண்டமாகவும் உள்ளது. கண்டப்பகுதி முழுவதும் ஒரே நாடாக கருதப்படும் ஒரே கண்டம் ஆஸ்திரேலியாவாகும் - இங்கு தனித்துவமான பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. எனவே இக்கண்டத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆஸ்திரேலியா கண்டத்தை 1770இல் கேப்டன் ஜேம்ஸ்  குக் என்ற ஆங்கில மாலுமி கண்டுபிடித்தார்.


அமைவிடம் மற்றும் பரப்பளவு

ஆஸ்திரேலியா 10° 4' தென் அட்சம் முதல் 39°08' தென் அட்சம் வரையிலும் மற்றும் 113° 09 கிழக்கு தீர்க்கம் முதல் 153°39' கிழக்குத் தீர்க்கம்ரேகை வரையிலும் பரவியுள்ளது. மகரரேகை இக்கண்டத்தை ஏறத்தாழ இரண்டு சம் பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 7.68 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும்.


அரசியல் பிரிவுகள்

ஆஸ்திரேலியா 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைக் கொண்டது. 1) நியூ சவுத் வேல்ஸ் 2)குயின்ஸ்லாந்து 3) தெற்கு ஆஸ்திரேலியா 4) டாஸ்மேனியா 5) விக்டோரியா 6)மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவை மாநிலங்களாகவும், வடக்கு யூனியன் பிரதேசம் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகர் பகுதி (கான்பெரா) ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவும் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான அரசியல் அமைப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தலைநகரம் கான்பெரா. சிட்னி, பிரிஸ்பேன், அடிலைட், ஹோபார்ட், மெல்பெர்ன், பெர்த் மற்றும் டார்வின் ஆகியன ஆஸ்திரேலியாவின்பிறமுக்கிய நகரங்களாகும்.


இக்கண்டம் 8222 தீவுகளைக் கொண்டுள்ளது. ரோட்னெஸ்ட் தீவு, மேக்னடிக் தீவு, பிட்ஸ்ராய் தீவு, ப்ரேசர் தீவு, பிலிப் தீவு, லார்ட்ஹோவ் தீவு, கங்காரு தீவு மற்றும் ஒய்ட்சன்டே தீவு ஆகியவை முக்கிய தீவுகளாகும்.


இயற்கையமைப்புப் பிரிவுகள்

ஆஸ்திரேலியா அதிக வேறுபாடற்ற நில அமைப்புகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். நிலத்தோற்ற அமைப்பின் அடிப்படையில் மூன்று இயற்கை பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி

2. மத்திய தாழ் நிலங்கள்

3 கிழக்கு உயர் நிலங்கள்



மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி : (The Great Australian Plateau)

ஆஸ்திரேலியாவின் மேற்கில் அமைந்துள்ள பீடபூமி ஒரு மிகப்பெரிய இயற்கையமைப்பு பிரிவாகும். இது இக்கண்டத்தின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளது. இதன் பரப்பளவு 27 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும். இப்பீடபூமி மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிராந்தியத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய ஒரு வறண்ட நிலமாக உள்ளது. இது மணல் மற்றும் பாறைகளாலான சமமான மேற்பரப்பை உடையது.

உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறையான அயர்ஸ் பாறை (Ayers Rock) அல்லது உலுரு பாறையானது (Uluru Rock) இந்த வறண்ட பிராந்தியத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 863 மீட்டர் உயரம் கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். பின்னாக்கல்' (Pinnacle) என்று அழைக்கப்படும் சுண்ணாம்புப் பாறைத்தூண்கள் இப்பிரதேசத்தில் அதிகம் காணப்படுகிறது.



மெக்டோனல் மற்றும் மஸ்கிரேவ் மலைத்தொடர்கள் இப்பீடபூமி பகுதியில் அமைந்துள்ளன. மரங்களற்ற நல்லார்பார் சமவெளி (Nullarbor Plain) இப்பீடபூமியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனமான பெரிய விக்டோரியா பாலைவனம் மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அமைந்துள்ளது.


மத்திய தாழ் நிலங்கள் (Central Lowlands)

மத்திய தாழ் நிலங்கள் வடக்கில் கார்பெண்டாரியா வளைகுடாவிலிருந்து தெற்கே இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. இத்தாழ் நிலங்களின் மத்தியில் ஆஸ்திரேலியாவின் பெரிய உள்நாட்டு வடிகால் படுகை அமைந்துள்ளது. ஐர் ஏரி (Lake Eyre) இப்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் நீர் ஏரியாகும். முர்ரே டார்லிங் ஆற்று தொகுப்பு மத்திய தாழ்நிலங்களின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பெரிய ஆர்ட்டீசியன் படுகைகள் மத்திய தாழ்நிலங்களின் தென்பகுதியில் காணப்படுகின்றன


கிழக்கு உயர் நிலங்கள் ( Eastern Highlands)

கிழக்கு உயர் நிலங்கள் சுமார் 3860 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆஸ்திரேலியாவின் கிழக்கு எல்லை பகுதியில் காணப்படுகிறது. இது வடக்கிலுள்ள யார்க் முனையிலிருந்து (Cape York) தெற்கில் டாஸ்மேனியா வரை நீண்டுள்ளது. இவ்வுயர் நிலங்கள், மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பிரிப்பதால் இவை பெரும் பிரிப்பு மலைத்தொடர் (The Great Dividing Range) என்றும் அழைக்கப்படுகிறது.


இவை பெரும் பிரிப்பு மலைத்தொடர் (The Great Dividing Range)

ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைத் தொடர் ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைத் தொடராகும். இம்மலைத்தொடர் பனியால் சூழப்பட்டுள்ளது. இம்மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் கோசியஸ்கோ (Mt.Kosciuszko) 2230 மீட்டர் ஆகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவை அதன் முக்கிய இயற்கை நிலத்தோற்றங்கள் சிறப்பு செய்கின்றன. அவை

1. பெரிய ஆர்ட்டீசியன் வடிநிலப்பகுதி

2. பெரிய பவளத்திட்டு தொடர்


பெரிய ஆர்ட்டீசியன் வடிநிலப்பகுதி (Great Artesian Basin)

புவியினுள் இருந்து வேகமாக வெளியேறும் நீரூற்றுகள் ஆர்டீசியன் நீரூற்றுகள் எனப்படுகின்றன. இவ்வகை நீரூற்றுகளைக் கொண்ட புவிப்பகுதி ஆர்டீசியன் வடிநிலம் ஆகும். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய ஆர்ட்டிசியன் படுகை உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான படுகையாகும். பெரிய ஆர்ட்டீசியன் வடிநிலப்பகுதி, பெரும்பிரிப்பு மலைத்தொடருக்கு மேற்கே அமைந்துள்ளது. இது குயின்ஸ்லாந்தின் சில பகுதிகள் மற்றும் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு யூனியன் பிரதேசத்தின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. இது 17 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது இப்பிரதேசத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.



பெரிய பவளத்திட்டு தொடர் (The Great Barrier Reef)

ஆஸ்திரேலியாவின் பெரிய பவளத்திட்டு தொடர் பசிபிக் பெருங்கடல் பகுதியில் குயின்ஸ்லாந்தின் பது கிழக்கு கடற்கரையை ஒட்டிய வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இது சிறிய பவள நுண்ணுயிர்களால் உருவானது. இது சுமார் 2300 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும்.



வடிகாலமைப்பு

ஆஸ்திரேலியா குறைந்தபட்ச சராசரி மழைப்பொழிவைப் பெறுகிறது. இந்நாடு வெப்பம் மிகுந்து வறண்டு காணப்படுவதால் நீர் ஆவியாதல் அதிகமாக உள்ளது. இதனால் குறைந்த நீரே ஆறுகளின் மூலம் கடலில் கலக்கின்றது. முர்ரே மற்றும் அதனுடைய துணை ஆறுகள் ஆஸ்திரேலியாவின் முக்கிய ஆறுகளாகவும், முக்கிய வடிகாலமைப்பாகவும் உள்ளன. இவ்வடிகாலமைப்பு ஆஸ்திரேலியாவின் மத்திய தாழ் நிலங்களின் உட்பகுதியில் அமைந்துள்ளது இவ்வடிநிலப்பகுதி சுமார் ஒரு மில்லியன் ச.கி.மீ அதிகமான பரப்பளவையும், ஆஸ்திரேலியாவின் 14% பரப்பளவையும் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் மத்திய தாழ் நிலங்களில் அமைந்துள்ள பெளர்க்கி  (Bourke) என்னும் இடத்தில் இக்கண்டத்தின் அதிகபட்சமாக 53°  செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக -22° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

முர்ரே நதி ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதியாகும். இது ஆஸ்திரேலியாவில் ஆல்ப்ஸ் மலைத் தொடரிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை 2508 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்கிறது. டார்லிங், அலெக்சாண்டிரியா, முர்ரம் பிட்ஜ் (Murrum Bidgee), லாச்லன் மற்றும் ஸ்வான் ஆகியன இக்கண்டத்தின் பிற முக்கிய ஆறுகளாகும்.


காலநிலை

ஆஸ்திரேலியா உலகின் இரண்டாவது பெரிய மிக வறண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மகரரேகை ஆஸ்திரேலியாவை இரு சம்பாகங்களாகப் பிரிக்கிறது. மகரரேகையின் வட பகுதி வெப்பமான அயன மண்டலத்தில் அமைந்துள்ளது. இதன் தென் பகுதி குளிர்ந்த மித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. வடக்கு கடலோர பகுதி பருவக்காற்று காலநிலையைக் கொண்டுள்ளதால் இப்பகுதி கோடையில் அதிக மழைப்பொழிவை பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் தென்கிழக்கு வியாபார காற்றின் மூலம் அதிக மழையைப் பெறுகின்றன. வறண்ட வெப்ப பாலைவன காலநிலை மத்திய தாழ்நிலங்களிலிருந்து மேற்குக் கடற்கரை பகுதி வரை நிலவுகிறது. இப்பகுதிகளில் ஆண்டு சராசரி மழையளவு 25 செ.மீ.க்கும் குறைவாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள பெர்த் மற்றும் அடிலைட்பகுதிகளை ஒட்டியுள்ள பிரதேசங்களில் மத்திய தரைக்கடல் காலநிலை நிலவுகிறது. மேலைக் காற்றுகளினால் ஆண்டு முழுவதும் டாஸ்மேனிய தீவு மழையைப் பெறுகிறது.


தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் (Flora and Fauna)

ஆஸ்திரேலியா ஒரு அரைவறண்ட காலநிலை பிரதேசமாக இருப்பதால், தாவர வகைகள் மரங்களற்ற, பரவலான புதர் மற்றும் சிறு செடிகளுடன் காணப்படுகிறது. ஒரு பறவைநிலைக் கண்னோட்டத்துடன் பார்க்கும் பொழுது, ஆஸ்திரேலியா மிகவும் சாதாரண தாவர அமைப்பு பெற்றுள்ளதை புரிந்துகொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள தாவரங்களும், மரங்களும் வறண்ட நிலைக்கு ஏற்றவாறு நீர் இன்றி நீண்ட காலம் வாழக்கூடியவை. இவை வறண்ட நிலத் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நீண்ட கால வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை ஆகும். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அதிகம் காணப்படக்கூடிய மரவகை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய யூக்கலிப்டஸ் ஆகும். காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் இக்கண்டத்தின் பரப்பளவில் 16 சதவீதத்தைக் காடுகளைக் கொண்டுள்ளன. யூக்கலிப்டஸ், அகேசியா மற்றும் மெல்லுக்கா (சதுப்பு நிலக்காடுகள்) ஆகியவைகள் ஆஸ்திரேலியாவின் முக்கிய மர வகைகளாகும்.

இக்கண்டத்தில் காணப்படும் 80 சதவீத விலங்கினங்கள் உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. ஆஸ்திரேலியாவில் சுமார் 400 வகை பாலூட்டி இனங்களும் சுமார் 140 வகையான வயிற்றில் பையுடைய பாலூட்டி இனங்களும் உள்ளன. இவ்வகையான விலங்கினங்கள் தங்களுடைய குட்டிகளைத் தங்கள் வயிற்றில் உள்ள பைகளில் சுமந்து செல்கின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். கோலா, பிலேட்டிபஸ் வாலபி மற்றும் டிங்கோ ஆஸ்திரேலியாவின் பிற முக்கிய விலங்கினங்களாகும். சிரிக்கும் கூக்காபரா, ஈமு, ரெயின்போ லோரிகிட் ஆகியவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பறவை இனங்களாகும்.


உங்களுக்குத் தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணி புரியும்  மக்களை ஜாகருஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்கள் அபாரிஜின்கள் ஆவர்.


பொருளாதார நடவடிக்கைகள்

வேளாண்மை, வளம் சார்ந்த தொழில்கள், மீன்பிடித்தல், உற்பத்தி தொழிலகங்கள், வணிகம் மற்றும் சேவைப்பிரிவு ஆஸ்திரேலியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாகும். கோதுமை ஆஸ்திரேலியாவின் முதன்மையான தானியப் பயிராகும். நெல், கரும்பு, மத்திய தரைக்கடல் வகைப் பழங்களான திராட்சை, ஆரஞ்சு மற்றும் வாதாம் பழம், பெர்த், அடிலைட் மற்றும் மெல்பெர்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. டாஸ்மேனியா 'ஆப்பிள் தீவு' என்று அழைக்கப்படுகிறது. நெல், புகையிலை, பருத்தி போன்றவை டாஸ்மேனியாவின் வடக்கு பகுதியில் பயிரிடப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் வேளாண்மையுடன் செம்மறியாடு வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ், மக்காச்சோளம் மற்றும் பார்லி ஆகியவையும் ஓரளவிற்கு பயிரிடப்படுகின்றன. ஆஸ்திரேலியா திராட்சை மற்றும் பழத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றதாகும். வெப்ப மண்டல சவானா புல்வெளிகளில் கால்நடை வளர்ப்பும், மிதவெப்ப மண்டல புல்வெளிகளில் ஆடுகள் வளர்ப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மெரினோ வகை செம்மறி ஆடுகள் தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. பால் உற்பத்திக்கான கால்நடை பண்ணைகள் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள நகரங்களுக்கு அருகில் வளர்க்கப்படுகின்றன. ஜெர்சி, இல்லவர்ரா மற்றும் அயர்ஷையர் மாட்டு வகைகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் புகழ்ப் பெற்றவையாகும்.

மீன்பிடித்தல் ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடல் மீன் பிடிப்பு நன்கு நடைபெறுகிறது. இங்கு உள்நாட்டு மீன்பிடிப்பும் காடுகள் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளும் மிக குறைவு.

உங்களுக்குத் தெரியுமா?

ஆடு வளர்ப்புத் தொழில் ஆஸ்திரேலியாவில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஆட்டு உரோமம் ஆஸ்திரேலியாவின் பணப்பயிர்" என அழைக்கப்படுகிறது.


கனிம வளங்கள்

கனிமங்கள் ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும். இவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. பாக்சைட், லிமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் ஆஸ்திரேலியா உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு, தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இரண்டாவது முன்னணி உற்பத்தியாளராகவும், இரும்புத்தாது மற்றும் யுரேனியம் உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காவது பெரிய உற்பத்தியாளராகவும் இந்நாடு திகழ்கிறது. மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் நிலக்கரி வயல்கள் தென்கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் நியூகேஸ்டல் முதல் சிட்னி வரை நீண்டு காணப்படுகிறது. இரும்புத்தாது மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது.

பாக்சைட் தாதுவானது கார்ப்பென்டீரியா வளைகுடா, பெர்த் மற்றும் டாஸ்மேனியாவை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பாஸ் நீர்சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன் பகுதிகளில் கிடைக்கிறது. யுரேனியம் தாது வட யூனியன் பிரதேசத்தில் உள்ள ராம் காடுகள் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் இருந்து பெறப்படுகிறது. மேற்கு பாலைவனப் பகுதியில் கால் கூர்லி மற்றும் கூல் கார்லி பகுதிகளில் தங்கம் கிடைக்கின்றது. காரியம், துத்தநாகம், வெள்ளி, டங்ஸ்டன், நிக்கல் மற்றும் செம்பு போன்றவை ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலிலிருந்து பெறப்படுகின்றன.


தொழிலகங்கள்

உணவு மற்றும் பானவகை உற்பத்தித் தொழிலகங்கள் ஆஸ்திரேலியாவின் முதன்மையான தொழிற்சாலைகளாகும். நிதி, கப்பல் கட்டுதல், தகவல் மற்றும் தொழில் நுட்பம், சுரங்கம், காப்பீட்டுத் துறை, விமானம் மற்றும் தொலைத்தொடர்புத் தொழிலகங்கள் முக்கிய தொழிலகங்களாகும்.

செயல்பாடு

ஆஸ்திரேலியாவின் 8 பாலைவனங்களை புவி வரைபட உதவியுடன் பட்டியலிடவும்.

உங்களுக்குத் தெரியுமா

ஆஸ்திரேலியாவில் உள்ள மித வெப்ப மண்டல * புல்வெளிகள் 'டவுன்ஸ் ' என்று அழைக்கப்படுகிறது.


போக்குவரத்து

ஆஸ்திரேலியாவில் பலவகையான போக்குவரத்து அமைப்புகள் காணப்படுகின்றன. இந்நாடு சாலைப் போக்குவரத்தைப் பெரிதும் நம்பியுள்ளது. ஆஸ்திரேலியா 30 க்கும் மேற்பட்ட நல்ல ஓடுதளங்களுடன் கூடிய விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் பயணிகள் இரயில் போக்குவரத்து நகரங்களில் நன்கு வளர்ச்சியடைந்திருந்தாலும், நகரங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கிடையிலுமான இரயில் போக்குவரத்துச் சற்றே வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.


மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 25.2 மில்லியன்களாகும். இது உலக மக்கள் தொகையில் 0.33% மட்டுமேயாகும். ஆஸ்திரேலியாவின் மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மூன்று நபர்களாகும். நாட்டின் நகர்ப்புற மக்கட்தொகை 85.7 சதவீதமாகும். தென் கிழக்குப் பகுதிகள் மக்களடர்த்தி மிகுந்த பகுதியாகும்.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல்: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா