பொருளாதாரம் - நுகர்வோர் உபரி | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

நுகர்வோர் உபரி

இக்கருத்து குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை அடிப்படையாகக் கொண்டது.

நுகர்வோர் உபரி

நுகர்வோர் எச்சம் (அல்லது நுகர்வோர் உபரி) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் ஆவர். காலப்போக்கில் பிரெஞ்சு பொறியியல் பொருளாதார அறிஞர்களான ஜுல் டுபூட் (Jule Dupuit) மற்றும் ஜீவன்ஸ் ஆகியோர் 1884ல் இக்கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினர். ஆனால் நுகர்வோர் எச்சம் என்ற இக்கருத்தை சீர்படுத்தி வழங்கியவர் மார்ஷல் ஆவார். இக்கருத்து குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை அடிப்படையாகக் கொண்டது. 


இலக்கணம்

மார்ஷலின் நுகர்வோர் எச்ச இலக்கணம் : "ஒரு பொருளை வாங்காமால் இருப்பதைவிட, வாங்குவதே மேல் என முடிவுசெய்து, கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம்" எனப்படும்.


அனுமானங்கள் விளக்கம்

1. பயன்பாட்டை அளவிட முடியும். 

2. பணத்தின் இறுதி நிலை பயன்பாட்டில் மாற்றமில்லை . 

3. பதிலீட்டுப் பண்டங்கள் இல்லை .

4. நுகர்வோரின் சுவை, வருமானம் மற்றும் செயல்பாட்டில் மாற்றமில்லை. 

5. ஒரு பண்டத்தின் பயன்பாடு மற்றொரு பண்டத்தை சார்ந்திருப்பதில்லை.


விளக்கம்

நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். நுகர்வோர் ஆப்பிளை வாங்க விரும்புகிறார் என எடுத்துக் கொள்வோம். அதற்கு அவர் ₹4 தர தயாராக உள்ளார். ஆப்பிளின் உண்மை விலை ₹2 ஆக உள்ளது. எனவே நுகர்வோர் எச்சமானது ₹2 ஆகும். (4,- 2) ஆகவே நுகர்வோர் எச்சம் என்பது அவர் தர தயாராக இருந்த அதிக விலைக்கும் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வேறுபாடே ஆகும்.

நுகர்வோர் எச்சம் = கொடுக்க நினைத்த விலை-உண்மையில் கொடுத்த விலை 

அல்லது 

நுகர்வோர் எச்சம்   =  தகுவிலை - உண்மை விலை


கணித முறைப்படி

நுகர்வோர் எச்சம் = TU - (PXQ) 

இதில் TU = மொத்தப் பயன்பாடு

P = விலை

Q = பண்ட அளவு

கீழ்க்கண்ட அட்டவணை 2.3ன் மூலம் நுகர்வோர் எச்சத்தைக் கணக்கிடலாம்.

அட்டவணை 2.3-ல் நுகர்வோர் ₹6, 5, 4, 3 மற்றும் 2-ஐத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆப்பிள்களுக்குத் தர தயாராக உள்ளார். ஆப்பிள்களுக்காக ₹20ஐ அவர் தர தயாராக உள்ளார் (தகுவிலை). ஆனால் அவர் 5 ஆப்பிள்களுக்காக உண்மையில் கொடுத்த விலை ₹10 ஆகும் (₹2X5). எனவே

நுகர்வோர் எச்சம் = மொத்தப் பயன்பாடு - (உண்மை விலை X பண்ட அலகுகள்)

= TU - (PXQ) 

= 20 - (2X5) 

= 20 - 10 = 10

நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்தின் மூலமும் விளக்கலாம்.


வரைபடம் 2.3ல் X அச்சில் தேவையின் அளவையும், Y அச்சில் விலையையும் குறிக்கிறோம். DD1 என்பது நுகர்வோர் பல்வேறு பண்ட அலகுகளின் மூலம் பெறும் பயன்பாட்டைக் குறிக்கும். விலை OP ஆக இருக்கும்போது தேவை அளவு OQ ஆக உள்ளது. எனவே உண்மை விலை OPCQ (OPXOQ) ஆகும். தகுவிலை (மொத்தப் பயன்பாடு) ODCQ ஆகும். இதன் மூலம்,

நுகர்வோர் எச்சம் = ODCQ – OPCQ = PDC 

= 20 – 10 = 10 (நிழலிட்ட பகுதி)


குறைபாடுகள்

1. பயன்பாட்டை அளவிட முடியாது. ஏனெனில் பயன்பாடு என்பது உளவியல் அடிப்படையானது. 

2. பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு நிலையாக இருப்பதில்லை. 

3. தகுவிலை என்பது உள்ளுணர்வு சார்ந்ததாகும். அதை நுகர்வோர் மட்டுமே உணர்வார்.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு