Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | கிரிப்ஸ் தூதுக்குழு

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - கிரிப்ஸ் தூதுக்குழு | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

கிரிப்ஸ் தூதுக்குழு

நேச நாடுகளுக்கு 1941ஆம் ஆண்டு மோசமானதாக விளங்கியது. பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது.

கிரிப்ஸ் தூதுக்குழு


தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்

நேச நாடுகளுக்கு 1941ஆம் ஆண்டு மோசமானதாக விளங்கியது. பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தென்கிழக்கு ஆசியாவிற்குள் ஜப்பான் படைநடத்திச் சென்றதேயாகும். இந்நிகழ்வு முத்துத் துறைமுகம் (Pearl Harbour) என்ற அமெரிக்க துறைமுகம் 1941 டிசம்பர் 7இல் தாக்கப்பட்ட சமகாலத்தில் நடந்தேறியது. அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத்தலைவரான ஷியாங் கே - ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப்போக்கை நிறுத்த முனைந்தனர். அவர்களின் கண்காணிப்பு கவனத்திற்குள் இந்தியா சென்றதால், அவர்கள் பிரதமர் சர்ச்சிலை இந்திய மக்களின் முழு ஒத்துழைப்பைப் பெறக்கோரி அழுத்தம் கொடுத்தனர்.

ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ - சீனா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின. தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரிட்டிஷாரையும், இந்திய தேசிய காங்கிரசையும் கவலை கொள்ளச் செய்தது. பிரிட்டிஷ் படைகள் எதிர்த்து நிற்கமுடியாமல் ஓடிப் போயின. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இந்திய வீரர்கள் ஜப்பானியப் படைகளின் தயவில் விடப்பட்டனர். பின்னர் உருவான இந்திய தேசிய இராணுவம் இந்நிலையில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது. அது பற்றி விரிவாக இப்பாடத்தில் காண்போம் (தொகுதி 7.3). சர்ச்சில் கல்கத்தாவும், மதராசும் ஜப்பானியர் பிடியில் விழக்கூடும் என்று அஞ்சினார். காங்கிரஸ் தலைவர்களும் அவ்வாறே அச்சம் கொண்டதால் போர் நடவடிக்கைகளில்ஒ த்துழைக்க வழிவகை செய்யும் ஒரு கௌரவமான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர்.

இச்சூழலில் டிசம்பர் 1941இல் கூடிய காங்கிரஸ் செயற்குழு போருக்குப் பின் விடுதலையையும், உடனடியாக முக்கியப் பிரிவுகளில் அதிகாரப் பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் தாங்கள் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

 

கிரிப்ஸ் வருகை

சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவக் குழு மார்ச் 1942இல் இந்தியா வந்தடைந்தது.சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியின் சார்பில் பங்கு வகித்தமையே கிரிப்ஸ் குழு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவிற்குப் புறப்படும் முன்பாக அவர் பிரிட்டிஷாரின் கொள்கை நிலைப்பாடு இந்தியாவைப் பொறுத்தமட்டில் 'விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசுமுறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கு முன்பாக வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .

 

கிரிப்ஸின் முன்மொழிவு

கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக் குழுவை உருவாக்குதலையும் ஆதரித்தார். அரசியல் சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டும் ஏற்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. மேலும் அதில் பாகிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏதாவது ஒரு மாகாணத்திற்குப் புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாகக் கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இவ்வரைவு பழைய வரைவுகளிலிருந்து எந்த மாற்றத்தையும் உள்ளடக்கியதாக யாருக்கும் தெரியவில்லை . இது பற்றி பின்னர் நேரு குறிப்பிடுகையில், "நான் முதன்முறையாக இவ்வரைவை வாசித்த போது, கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்" என்றார்.


 

கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல்

டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும். மேலும் அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் சுதேசி அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது. இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். அதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.

 

முத்துத்துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட வேளையில் காங்கிரஸ் முன்னிருந்த சவால்கள்

துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய இயக்கத்தையும் குறிப்பாக காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் சர்ச்சில் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் சீனாவும் கடும் செல்ல நெருக்கடி கொடுத்தார்.

இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது. அந்நிலை இருவேறு வகைகளில் ஏற்பட்டிருந்தது : ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலனிய அரசு இழுத்தடித்தது என்றால் மறுபுறம் சுபாஷ் சந்திர போஸ் அச்சு நாடுகளோடு கைக் கோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார். ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942இல் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்