இந்தியாவில் நிர்வாக அமைப்பு | அரசியல் அறிவியல் - தேர்தல் ஆணையம் | 12th Political Science : Chapter 6 : Administrative Machinery in India
தேர்தல் ஆணையம்

நாட்டில் நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திய அரசமைப்பால் நேரடியாக உருவாக்கப்பட்ட நிரந்தரமான, சுயாட்சியான அமைப்பு தேர்தல் ஆணையம். அரசமைப்பு உறுப்பு 324, நாடாளுமன்ற இரு அவைகள், மாநிலச் சட்டமன்றங்கள், குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர் தேர்தல்களைக் கண்காணித்தல்,வழிகாட்டுதல், கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்களை தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாக வழங்குகிறது. இவ்வாறு, இந்திய தேர்தல் ஆணையம் மத்திய - மாநில அரசுகள் இரண்டுக்குமான பொது அமைப்பாக இயங்குகிறது.
மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கான தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதையொட்டி மாநிலத் தேர்தல் ஆணையங்கள் அமைத்துக்கொள்ள அரசமைப்பு வழி வகுத்துள்ளது.