Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

உற்பத்தி | முதல் பருவம் அலகு 1 | பொருளியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் | - பயிற்சி வினா விடை | 7th Social Science : Economics : Term 1 Unit 1 : Production

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு -1 : உற்பத்தி

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு -1: உற்பத்தி : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க 

1. உற்பத்தி என்பது 

அ) பயன்பாட்டை அழித்தல்

ஆ) பயன்பாட்டை உருவாக்குதல் 

இ) மாற்று மதிப்பு

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) பயன்பாட்டை உருவாக்குதல் 


2. பயன்பாட்டின் வகைகளாவன 

அ) வடிவப் பயன்பாடு

ஆ) காலப் பயன்பாடு 

இ) இடப் பயன்பாடு

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும் 


3. முதன்மைக் காரணிகள் என்பன 

அ) நிலம், மூலதனம்

ஆ) மூலதனம், உழைப்பு 

இ) நிலம், உழைப்பு

ஈ) எதுவுமில்லை 

விடை: ஆ) மூலதனம், உழைப்பு 


4. தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர் 

அ) பரிமாற்றம் செய்பவர்

ஆ) முகவர் 

இ) அமைப்பாளர்

ஈ) தொடர்பாளர் 

விடை: இ) அமைப்பாளர் 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ----- என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும். 

விடை: பயன்பாடு

2. பெறப்பட்ட காரணிகள் என்பது _ மற்றும் ஆகும். 

விடை : முதலீடு, அமைப்பு 

3. -------- என்பது நிலையான அளிப்பினை உடையது. 

விடை: நிலம்

4.  _ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.

விடை: உழைப்பு 

5. --- என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.

விடை: மூலதனம்


III. பொருத்துக.

1. முதன்மை உற்பத்தி – அ. ஆடம் ஸ்மித்

2. காலப் பயன்பாடு – ஆ. மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் 

3. நாடுகளின் செல்வம் - இ தொழில் முனைவோர்

4. மனித மூலதனம் – ஈ. எதிர்கால சேமிப்பு

5. புதுமை புனைபவர் – உ. கல்வி, உடல்நலம்

விடைகள் 

1. முதன்மை உற்பத்தி – ஆ. மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் 

2. காலப் பயன்பாடு – ஈ. எதிர்கால சேமிப்பு 

3. நாடுகளின் செல்வம் - அ. ஆடம் ஸ்மித் 

4. மனித மூலதனம் – உ. கல்வி, உடல்நலம் 

5. புதுமை புனைபவர் – இ. தொழில் முனைவோர்


IV. குறுகிய விடையளி 

1. உற்பத்தி என்றால் என்ன? 

உற்பத்தி

நுகர்வோரின்பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். 


2. பயன்பாடு என்றால் என்ன? 

பயன்பாடு: 

பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும். 


3. பயன்பாட்டின் வகைகளை எழுதுக. 

பயன்பாட்டின் வகைகள்: 

* வடிவப் பயன்பாடு 

* இடப் பயன்பாடு

* காலப் பயன்பாடு 


4. உற்பத்திக் காரணிகளைக் கூறுக. 

உற்பத்திக் காரணிகள்: 

முதல் நிலை உற்பத்திக் காரணிகள்: 

* நிலம்

* உழைப்பு 

மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள்: 

* முதலீடு

* அமைப்பு 


5. உழைப்பு வரையறு. 

உழைப்பு:

"வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு".

- ஆல்பிரட் மார்ஷல். 


6. வேலை பகுப்பு முறை - வரையறு. 

வேலை பகுப்பு முறை:

ஓர் உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைபகுப்பு முறை எனப்படும். 


7. மூலதனத்தின் வடிவங்கள் யாவை? 

மூலதனத்தின் வடிவங்கள் : 

பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம்: 

இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் 

பணி மூலதனம் (அல்லது) பணவியல் வளங்கள்: 

வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள் 

மனித மூலதனம் (அல்லது) மனிதத் திறன் வளங்கள்

கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள். 


8. தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.

தொழில் முனைவோரின் பண்புகள்: 

* இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்  

* உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்

* புதுமைகளை உருவாக்குதல்


V. விரிவான விடையளி

1. உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக.

உற்பத்தியின் வகைகள்:

உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை 

1. முதன்மை நிலை உற்பத்தி: 

* இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாட்டு நிலை முதன்மை நிலை உற்பத்தி எனப்படும். இதில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் 'வேளாண்மைத்துறை உற்பத்தி' எனவும் கூறுவர். 

* வேளாண் தொடர்புடைய செயல்கள், வனப்பாதுகாப்பு, மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளம் பிரித்தெடுத்தல் ஆகியவை முதன்மை நிலை உற்பத்தி ஆகும்., 

2. இரண்டாம் நிலை உற்பத்தி:

* முதன்மை நிலையின் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி, புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் செயல்பாடு இரண்டாம் நிலை உற்பத்தி எனப்படும். இதை தொழில்துறை உற்பத்தி' எனவும் கூறுவர். 

* நான்கு சக்கர வாகனங்கள், ஆடைகள், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, பொறியியல் மற்றும் கட்டடப் பணிகள் இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும். 

3. மூன்றாம் நிலை உற்பத்தி: 

* முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருட்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் 'சேவைத்துறை உற்பத்தி' எனவும் கூறுவர். ‘

* வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிர்வாகம், கல்வி, உடல்நலம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை நிறுவனங்கள். 


2. நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க? 

நிலம்: 

'நிலம்' என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும். 

நிலத்தின் சிறப்பியல்புகள்: 

நிலம் இயற்கையின் கொடை:

நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும். 

நிலத்தின் அளிப்பு நிலையானது:

நிலத்தின் அளவை மாற்ற முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. 

நிலம் அழிவில்லாதது:

மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிந்து போகக்கூடியது. ஆனால் நிலம் அழிவில்லாதது. 

நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி:

எந்த உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படை. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள், பயிர்கள் விளைவிக்க உதவுகிறது. 

நிலம் இடம் பெயரக் கூடியதன்று:

நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

நிலம் ஆற்றல் வாய்ந்தது:

மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்களை, நிலம் கொண்டுள்ளது. இயற்கை மாற்றங்களால் செழிப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம். நிலத்தை முழுமையாக அழிக்க இயலாது. 

நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்:

ஓரிடத்தில் அதிக உற்பத்தி, மற்றொரு இடத்தில் குறைவான உற்பத்தி என வேறுபாடு உள்ளது. 


3. வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக. 

வேலை பகுப்பு முறையின் நன்மைகள்:

* ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் ஒருவர் அந்த வேலையில் திறன் மிக்கவராக மாறுகிறார். 

* நவீன இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.

* காலமும் மூலப்பொருட்களும் திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன. 

வேலை பகுப்பு முறையின் தீமைகள்: 

* ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதால் வேலை சுவையற்றதாகவும், களிப்பற்றதாகவும் மாறுகிறது. மனிதத் தன்மையை அழிக்கிறது. 

* ஒரு பகுதி வேலையை மட்டும் மேற்கொள்வதால் குறுகிய தேர்ச்சி மட்டுமே கிடைக்கும். 

* கைவினைப் பொருட்களின் வளர்ச்சி பாதிக்கும். ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை. 


4. மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக. 

மூலதனத்தின் சிறப்பியல்புகள்: 

* மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி

* மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது. 

* மூலதனமின்றியும் உற்பத்தி நடைபெறும். 

* மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.

* மூலதனம் ஆக்கமுடையது.

* மூலதனம் பலகாலம் (ஆண்டுகள்) நீடிக்கும். 

* மூலதனத்தை பயன்படுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதே.


VI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது) 

1. மாணவர்களை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச் செய்தல், 

2. மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஓட்டச் செய்தல்.


VII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது) 

1. மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல். மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல். ஆசிரியரும், மாணவர்களும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.




7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : முதல் பருவம் அலகு -1 : உற்பத்தி