பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - நார்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

நார்கள்

தாவரவியல் : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

நார்கள்

தாவரவியலின்படி நார் என்பது ஒரு நீண்ட, குறுகிய மற்றும் தடித்த சுவருடைய செல்லாகும். தாவர நார்கள் அவற்றின் உபயோகத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.



பருத்தி

தாவரவியல் பெயர்: காஸிபியம் சிற்றினம்

குடும்பம்: மால்வேசி

பருத்தியானது உலகத்தின் மிக முக்கியமான உணவல்லாத பணப்பயிராகும்.

தோற்றம் மற்றும் விளையுமிடம்

இது உலகத்தின் மிகப்பழமையான, பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்று. ஏறத்தாழ 8000 ஆண்டுகளாகப் புது உலகிலும், பண்டைய உலகிலும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. வணிகப் பருத்தி நான்கு பருத்தி சிற்றினங்களில் இருந்து கிடைக்கிறது : இரண்டு புது உலகிலிருந்தும், இரண்டு பண்டைய உலகிலிருந்தும் தோன்றின. (1) கா.ஹிர்சூட்டம் (2) கா.பார்ப்படென்ஸ் ஆகியவை புதிய உலகச் சிற்றினங்கள், (3) கா. ஆர்போரிடம் (4) கா.ஹெர்பேசியம் ஆகிய இரண்டும் பண்டைய உலகச் சிற்றினங்களாகும். இந்தியாவில் குஜராத், மகாராஷ்ட்ரா , ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பருத்தி அதிகம் பயிரிடப்படுகிறது.

பயன்கள்

பல வகையான நெசவுத் துணிகள், உள்ளாடைத் தயாரிப்புகள், பொம்மைகள் தயாரிப்புகள் மற்றும் மருத்துவமனைகளிலும் இது பயன்படுகிறது.


சணல்

தாவரவியல் பெயர்: கார்கோரஸ் சிற்றினம்

குடும்பம்: மால்வேசி

தோற்றம் மற்றும் விளையுமிடம்

சணல் (1) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் (2) கா. ஒலிடோரியஸ் என்ற இரண்டு சிற்றினங்களிலிருந்து கிடைக்கிறது. கா.ஒலிடோரியஸ் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது, ஆனால் கா.கேப்சுலாரிஸ் இந்தோ-பர்மாவைப் பூர்விகமாகக் கொண்டதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் கங்கைச் சமவெளிகள் மற்றும் பங்களாதேஷில் முக்கியமாக விளைவிக்கப்படும் பணப்பயிராகும்.

பயன்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாகும் நார்ப்பொருட்களில் ஒன்று. சணல் தொழில் இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சணல் இயற்கையான, மறுசுழற்சி செய்யக்கூடிய, மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான பொதிகட்டும் பொருள். துணிகளைப் போர்த்தவும் மூட்டை கட்டவும் பயன்படுகிறது. சணல் உற்பத்தியில் 75% காலுறை தயாரிக்கவும், பைகள் செய்யவும் பயன்படுகிறது. போர்வைகள் , கம்பளிப்போர்வைகள், திரைச்சீலைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சமீபகாலமாக நெசவு நாராகப் பயன்படுத்தப்படுகிறது.


தேங்காய் நார்

தாவரவியல் பெயர்: கோகோஸ் நியுசிபெரா

குடும்பம்: அரிகேசி

வணிகத் தேங்காய் நார் தேங்காயின் கனி நடு உறையிலிருந்து கிடைக்கிறது. இதன் லேசான நிறை, நீள்தன்மை உப்பு நீரைத் தாங்கும் திறன் மற்றும் கடத்தாத்திறன் போன்ற பண்புகள் நன்கு அறியப்பட்டது.

தோற்றம் மற்றும் விளையுமிடம்

எண்ணெய் விதைக்களில் நாம் ஏற்கனவே தேங்காயின் தோற்றத்தைப் படித்து விட்டோம். இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மிகுந்த தேங்காய்நார் உற்பத்தி செய்யும் நாடுகள். கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவின் அதிகத் தேங்காய் நார் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

பயன்கள்

மிதியடிகள், குஷன் இருக்கைகள், பைகள், பொதி கட்டும் பொருட்கள், நீர் ஊடுருவாப், ஒலி ஊடுருவா பலகைகள், வெப்பக்காப்புப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தோட்டக்கலையில் தேங்காய் நார் பீட் உபயோகிப்பதால் தேங்காய்நாருக்குத் தேவை கூடியுள்ளது. மக்கக்கூடிய தாவரத்தொட்டிகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தோட்டக்கலைப் பொருட்களைத் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.


12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்