Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | காந்தியடிகளும் மக்கள் தேசியமும்

தேசியம் | காந்திய காலகட்டம் - காந்தியடிகளும் மக்கள் தேசியமும் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

காந்தியடிகளும் மக்கள் தேசியமும்

குஜராத்தின் போர்பந்தரில் ஒரு வசதியான குடும்பத்தில் 1869 அக்டோபர் 2ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். அவரது தந்தையார் காபா காந்தி, போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தார்.

காந்தியடிகளும் மக்கள் தேசியமும்


(அ) காந்தியடிகள் உருவாகிறார்

குஜராத்தின் போர்பந்தரில் ஒரு வசதியான குடும்பத்தில் 1869 அக்டோபர் 2ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். அவரது தந்தையார் காபா காந்தி, போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தார். அவரது தாயார் புத்லிபாயின் தாக்கம் இளையவரான காந்தியின் நடவடிக்கைகளில் பெரிதும் இருந்தது. பதின்ம பள்ளிப் (மெட்ரிகுலேசன்) படிப்பை முடித்த காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக 1888இல் இங்கிலாந்துக்குக் கடல் பயணம் மேற்கொண்டார். 1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞர் பட்டம் பெற்ற பின்பு அவர் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாய முறையில் நம்பிக்கை கொண்டவராக இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்தியா திரும்பியவுடன் பம்பாயில் வழக்குரைஞராக பணியாற்ற காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்த குஜராத்தி நிறுவனம் ஒன்று சட்ட உரிமை வழக்குகள் தொடர்பாக காந்தியடிகளின் சேவையை நாடியது. இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தென்னாப்பிரிக்காவில் தான் முதன்முறையாக அவர் இனவெறியை எதிர்கொண்டார். டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில் பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காந்தியடிகள் இதை எதிர்த்துப்போராட உறுதி பூண்டார்.

காந்தியடிகள் டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது போன்ற கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திய அவர், அந்த நாட்டின் சட்டங்களை மீறும் விதமாக நடந்த அநீதிகள் தொடர்பாக நிர்வாகத்தினருக்கு மனுக்களை அளித்தார். டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலை வரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது. இரவு 9 மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது. இத்தகைய நியாயமற்ற சட்டங்களை எதிர்த்து அவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

காந்தியடிகளுக்கு டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் ஆகியோரின் எழுத்துக்களுடன் அறிமுகம் கிடைத்தது. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது (The Kingdom of God is Within You) என்ற டால்ஸ்டாயின் புத்தகம், ‘அண்டூ திஸ் லாஸ்ட் (Unto the Last) என்ற ஜான் ரஸ்கின் எழுதிய புத்தகம் தாரோவின் சட்டமறுப்பு (Civil Disobedience) ஆகிய புத்தகங்களால் காந்தியடிகள் பெரும் தாக்கத்திற்குள்ளானார். ரஸ்கின் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பையும் (1905) டால்ஸ்டாய் பண்ணையையும் (1910) நிறுவினார். சமத்துவம், சமூக வாழ்க்கை , செய்யும் தொழில் மீது மரியாதை ஆகிய நற்பண்புகள் இந்தக் குடியிருப்புகளில் ஊக்கப்படுத்தப்பட்டன. சத்தியாகிரகிகளுக்கு இவை பயிற்சி களங்களாகத் திகழ்ந்தன.


தென்னாப்பிரிக்காவில் ஒரு செயல் உத்தியாக சத்தியாகிரகம்

காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்தியாகிரகத்தை மேம்படுத்தினார். நியாயமற்ற சட்டங்களுக்கு எதிராக அமைதிப் பேரணிகளை நடத்திய பரப்புரையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாங்களாகவே முன்வந்து கைதானார்கள். குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட அவர் சத்தியாகிரக சோதனைகளை மேற்கொண்டார். குடிப்பெயர்ந்தோரை பதிவு செய்யும் அலுவலகங்கள் முன் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டபோதிலும் சத்தியாகிரகிகள் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. காந்தியடிகளும் இதர தலைவர்களும் கைதானார்கள். பெரும்பாலும், ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்து தெருவோர வியாபாரிகளாக மாறிய இந்தியர்கள், காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்துசெய்யப்பட்டது.

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்