Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | தாவர வாயு பரிமாற்றம்

சுவாசித்தல், ஈடுசெய்யும் புள்ளி - தாவர வாயு பரிமாற்றம் | 11th Botany : Chapter 14 : Respiration

11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்

தாவர வாயு பரிமாற்றம்

சுவாசித்தல் என்ற வார்த்தை பெபிஸ் (1966) என்பவரால் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுவாசித்தல் என்பது ஒரு உயிரியல் நிகழ்ச்சி, இதில் பலதரப்பட்ட உணவுப் பொருட்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றமடைந்து இந்த நிகழ்ச்சியின் போது O2 உள்ளெடுக்கப்பட்டு CO2 வெளியிடப்படுகிறது.

வாயு பரிமாற்றம் (Gaseous exchange)

 

1. சுவாசித்தல் (Respiration)


சுவாசித்தல் என்ற வார்த்தை பெபிஸ் (1966) என்பவரால் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுவாசித்தல் என்பது ஒரு உயிரியல் நிகழ்ச்சி, இதில் பலதரப்பட்ட உணவுப் பொருட்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆக்ஸிஜனேற்றமடைந்து இந்த நிகழ்ச்சியின் போது O2 உள்ளெடுக்கப்பட்டு CO2 வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக ஆற்றல் உருவாகிறது, சுவாசித்தலின் போது ஆக்ஸிஜனேற்றமடையும் கரிமப் பொருள்கள் சுவாசத் தளப்பொருள்கள் எனப்படும். இவற்றுள் குளுக்கோஸ் ஒரு பொதுவான சுவாசத் தளப்பொருள் ஆகும். C-C பிணைப்புகளைக் கொண்ட சிக்கலான கரிமச் சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றத்தின் போது செல்லுக்குள் ஆற்றலாய் வெளியிடப்படுகிறது. சுவாசித்தலின் போது வெளியிடப்படும் இந்த ஆற்றல் ATP (அடினோசின் ட்ரை ஃபாஸ்பேட்) வடிவத்தில் சேமித்து வைக்கப்படுவதோடு வெப்பமாகவும் வெளியேற்றப்படுகிறது. சுவாசித்தல் உயிரினங்களின் அனைத்து உயிருள்ள செல்களிலும் நடைபெறும். சுவாசித்தலின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சிக்குத் தலைகீழாக ஒத்து காணப்படும். 

C6H12O6 + 6O2 6CO2 + 6H2O + ஆற்றல்

(686 K cal or 2868 KJ)

(1K cal = 4.184 KJ)

சுவாசத் தளப்பொருளின் தன்மையைப் பொறுத்து பிளாக்மேன் சுவாசித்தலை இவ்வாறு பிரிக்கிறார்.

1. மிதவை சுவாசித்தல் (Floating respiration)

2. புரோட்டோபிளாஸ்ம சுவாசித்தல் (Protoplasmic respiration)

கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு அல்லது கரிம அமிலம் சுவாச தளப்பொருளாகப் பயன்படுத்தப்படும் வினை மிதவை சுவாசித்தல் எனப்படும். இது ஒரு பொதுவான சுவாசித்தல் முறையோடு மட்டுமின்றி இம்முறையில் எந்தவொரு நச்சு பொருளும் உருவாவதில்லை . அதே சமயம் சுவாசத்தின் போது புரதம் சுவாசத் தளப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டால் அது புரோட்டோபிளாஸ்ம சுவாசித்தல் எனப்படும். புரோட்டோபிளாஸ்ம சுவாசித்தல் அரிதாக நடைபெறும் ஒரு முறையாகும். இம்முறையில் புரோட்டோபிளாசத்தில் உள்ள அமைவு மற்றும் செயல் புரதங்கள் சிதைவடைந்து நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியங்கள் வெளியிடப்படுகின்றன.

 

2. ஈடுசெய்யும் புள்ளி (Compensation point)


அதிகாலை மற்றும் அந்திப் பொழுதில் ஒளியின் செறிவு குறைவாக இருக்கும். சவாசித்தலின் போது வெளியிடப்படும் CO2 ஒளிச் சேர்க்கையின் போது பயன்படுத்தப்படும் CO2 வை எந்தப் புள்ளியில் ஈடுசெய்கிறதோ அதாவது நிகர வாயு பரிமாற்றம் நிகழாமல் இருந்தால் இதுவே ஈடுசெய்யும் புள்ளி எனப்படும். அந்தச் சமயத்தில் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் ஆக்ஸிஜன் சுவாசித்தலின் போது பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜனின் அளவிற்குச் சமமாக இருக்கும். 


இரண்டு பொதுவான காரணிகள் ஈடுசெய்யும் புள்ளியுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவை CO2 மற்றும் ஒளி ஆகியவையாகும். (படம் 14.2). இதனை அடிப்படையாக வைத்து இரண்டு வகையான ஈடுசெய்யும் புள்ளிகள் அறியப்பட்டுள்ளது. அதாவது CO2 ஈடுசெய்யும் புள்ளி மற்றும் ஒளி ஈடுசெய்யும் புள்ளி. C3 தாவரங்களின் CO2 ஈடுசெய்யும் புள்ளியின் மதிப்பு 40-60 ppm (parts per million) ஆகும். ஆனால் C4 தாவரங்களில் இது 1-5 ppm ஆக உள்ளது. 

 

11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்