Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: தொழிற்பெயர்

பருவம் 2 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: தொழிற்பெயர் | 7th Tamil : Term 2 Chapter 3 : Kalai vannam

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்

இலக்கணம்: தொழிற்பெயர்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் : இலக்கணம்: தொழிற்பெயர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கற்கண்டு 

தொழிற்பெயர்


உழவர் செய்யும் தொழில் உழுதல். தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல். இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்

(.கா.) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல் , பொறுத்தல்

தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்

விகுதி பெற்ற தொழிற்பெயர்

நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களைக் கவனியுங்கள். இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.

இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.

(எ.கா.) 

தருதல்   -  தல் 

கூறல்     -  அல் 

ஆட்டம்  -  அம் 

விலை     -   

வருகை  -  கை 

பார்வை வை 

போக்கு    -  கு

நட்பு          - பு 

மறைவு  -  வு 

மறதி   தி 

உணர்ச்சி - சி 

கல்வி        -  வி 

செய்யாமை  -  மை

முதனிலைத் தொழிற்பெயர் 

வானில் இடி இடித்தது 

சோறு கொதி வந்தது

இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) 

செல்லமாக ஓர் அடி அடித்தான்

அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்

இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்

உணவின் சூடு குறையவில்லை .

இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) விடு - வீடு, மின் - மீன், கொள் - கோள், உடன்படு - உடன்பாடு


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம்