Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | இலக்கணம்: புணர்ச்சி

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: புணர்ச்சி | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

இலக்கணம்: புணர்ச்சி

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : இலக்கணம்: புணர்ச்சி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஆறு

கற்கண்டு

புணர்ச்சி


தமிழ், அமுதம் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துச் சொல்லிப் பாருங்கள். தமிழமுதம் என்று ஒலிக்கிறது அல்லவா?

இவற்றுள் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும் அதனுடன் வந்து சேரும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இவ்விரு சொற்களும் சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைகின்றன. இவ்வாறு நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) சிலை + அழகு = சிலையழகு (லை=ல்+ஐ)

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) மண் + அழகு = மண்ணழகு

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு

வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)

இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.)

உடல் + ஓம்பல் = உடலோம்பல் (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று. புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரியவோ மறையவோ இல்லை.)

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும். (எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும். (எ.கா.) வில் + கொடி = விற்கொடி

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும். (எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு. (எ.கா.) நாடகம் + கலை = நாடகக்கலை

இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது. தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து தோன்றியது.

 

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்