Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | மாசில்லாத உலகம் படைப்போம்

பருவம் 3 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - மாசில்லாத உலகம் படைப்போம் | 4th Tamil : Term 3 Chapter 2 : Maasila ulagam padaipom

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம்

மாசில்லாத உலகம் படைப்போம்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம்

2. மாசில்லாத உலகம் படைப்போம்


ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவரது கைகளில் ஓர் அழைப்பிதழ் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மாணவர்களின் முகத்தில் பளிச்சிட்டது.

மெல்ல எழுந்த முகிலன், "அது என்ன அழைப்பிதழ் ஐயா? என்று  கேட்டான்.

மாணவர்களே! நமது மாவட்டக் கல்வித்துறை சார்பில் அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது. உங்களுடைய புதுமையான படைப்புகளை அவ்விழாவில் காட்சிப்படுத்தலாம்.சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் உண்டு. நம் பள்ளிமாணவர்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இது!"என்றபடி கையிலுள்ள அழைப்பிதழை முகிலனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் ஆசிரியர்.முகிலன் படிப்பதை ஆர்வமுடன் கேட்ட மாணவர்கள், 'நாம் என்னென்ன மாதிரியெல்லாம் உருவாக்கலாம்' என்று சிந்திக்கத் தொடங்கினர்.

அரியலூர் மாவட்டக் கல்வித் துறை நடத்தும் மாபெரும் அறிவியல் திருவிழா 2020

நாள் : 28.02.2020

மாணவச் செல்வங்களின் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் அறிவியல் ஆர்வத்தினை, ஆய்வுச் சிந்தனையைப் படைப்புகளாக மாற்றிடுங்கள்! பரிசுகளை வென்றிடுங்கள்!

தலைப்பு

மாசில்லாத உலகம்

மகிழ்வான உலகம்!

குறிப்பு

ஆய்வுகள் மாணவர்தம் சொந்த முயற்சியாகவும் இதுவரை வெளிவராத புதிய முன்னெடுப்பாகவும் அமைதல் வேண்டும்.

எதிர்கால அறிவியல் அறிஞர்களுக்கு

வாழ்த்துகள்!

இவண்,

அரியலூர் கல்வி மாவட்டம்

அவர்களின் முகக்குறிப்பை உணர்ந்த ஆசிரியர்,"வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பரிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுரிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்" என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

நாள்கள் நகர்ந்தன. அறிவியல் விழா நாளன்று ....

விழா அரங்கின் வாசலில் நெடிதுயர்ந்து நின்றது ஓர் உருவம். முழுவதும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் அவ்வுருவம் செய்யப்பட்டிருந்தது. பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓர் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மார்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது. தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல அவ்வுருவம் பேசத் தொடங்கியது.


“அன்புக்குரியவர்களே!

நான் யாரென்று தெரிகிறதா? நீங்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்த மின்னணுப் பொருள்களின் கழிவுகளால் உருவாக்கப்பட்டவன்தான் நான். இப்போது உங்கள்முன் பேசுகிறேன். நீர், நிலம், காற்று, ஒலி போன்றவற்றில் ஏற்படும் பல்வேறு மாசுகளைப் பற்றி, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவையெல்லாம் மனிதர்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. அவைபோலவே, சற்றும் குறையாத பாதிப்புகள் என்னாலும் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒவ்வொரு நாளும் உங்களால் தூக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும், சுற்றுச் சூழலையும் பெரிதும் சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றன. இவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எங்களை முறையாக வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்வதொன்றே இச்சிக்கலுக்குத் தீர்வாகும். அதனை வலியுறுத்தவே ஓர் அரக்கனின் வடிவில் நான் வந்துள்ளேன்.

எனவே, மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்துங்கள். கண்ட இடங்களில் எங்களைத் தூக்கி எறிந்திடாமல், முறையாக மறு சுழற்சிக்கு உட்படுத்துங்கள். அப்போதுதான் நாம் எந்தத் துன்பமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடமுடியும்.

"மாசில்லாத உலகம் படைப்போம்! மகிழ்வான வாழ்வு பெறுவோம்!"

என்று தங்குதடையின்றிப் பேசிக்கொண்டிருந்தது அவ்வுருவம்.

அரங்கினுள் நுழைந்த அனைவரும், மிகப்பெரிய அந்த அரக்க உருவத்தைப் பார்த்து வியந்தபடியும், அது கூறிய கருத்துகளைக் கேட்டுச் சிந்தித்தபடியும் சென்றனர். அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குரிய விருது, முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.

மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் முகிலனின் புதுமையான படைப்பைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

கணினியில் உரைகள், வசனங்கள், முழக்கத் தொடர்கள் கேட்டல்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம்