இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நவீன கல்வி முறை | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : இந்தியாவில் கல்வி வளர்ச்சி

நவீன கல்வி முறை

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தொடர்ந்து சமயப்பரப்புக் குழுவினரின் வருகையால் இந்தியாவில் நவீன கல்வி முறை தொடங்கியது எனலாம். அவர்களது முயற்சியின் விளைவாக, இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நவீன கல்வி முறை

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தொடர்ந்து சமயப்பரப்புக் குழுவினரின் வருகையால் இந்தியாவில் நவீன கல்வி முறை தொடங்கியது எனலாம். அவர்களது முயற்சியின் விளைவாக, இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும், இந்தியக் கல்வியையும் பயிற்றுவித்தன.

கிறித்துவ சமயப்பரப்புக் குழுவின் பங்கு

வணிகம் செய்வதற்காக வந்த ஐரோப்பியர்கள், இந்தியாவில் வர்த்தக நிறு வனங்களை நிறுவினர். அவர்கள் நிலங்களைப் பெற்று, கோட்டைகளைக் கட்டினர். பின்னர், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும்,சமயத்தையும் இந்திய மக்களிடையே பரப்ப விரும்பினர். உள்ளூர் மக்களுக்கேற்றவாறு கல்வி வழங்கினால் தான் நிர்வாகத்தையும், சமயக் கருத்துக்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதி அவர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர். இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பியர் போர்ச்சுகீசியர்களேயாவர். இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். மேலும் பல தொடக்கப் பள்ளிகளும் தொடங்கப்பட்டது. 1575ஆம் ஆண்டு கோவாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியில், கிறித்துவம், தர்க்கம், இலக்கணம், மற்றும் இசை ஆகியன கற்பிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஜான் கிர்னாண்டர் என்பவர் ஆர்வமுள்ள முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். அவரின் இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பானது கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்குக் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பாகும். 1812ஆம் ஆண்டு டாக்டர் C.S. ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.


போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்களும் இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர். அங்கு இந்திய ஆசிரியர்களைக் கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகள் துவங்கப்பட்டு, அங்கு பிரெஞ்சு மொழிகள் கற்பிக்கப்பட்டன. இரண்டு ஜெர்மன் பிஷப்புகளான சீகன்பால்கு மற்றும் புளுட்ச்சோ ஆகியோர் திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியைத் தொடங்கினர். கி.பி.1600இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பின்னர் ஆங்கிலக் கல்வி வழங்குவதற்காக கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாளடைவில் மதராஸ் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் சமஸ்கிருத கல்லூரிகள் துவங்கப்பட்டன. கல்கத்தாவின் முதல் பேராயரான டாக்டர் மிடில்டன் என்பவர் ஒரு மிஷினரி கல்லூரியைக் கல்கத்தாவில் தொடங்கினார். பின்னர் இது பிஷப் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் தான் வட்டார மொழிக் கல்வியினைத் தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் 1827இல் அவர் ஓய்வு பெற்ற பின், அவரது ஆர்வலர்கள் நிதி சேகரித்து ஆங்கில கல்வியை வழங்கும் கல்லூரியைப் பம்பாயில் நிறுவினர். அது பின்னர் எல்பின்ஸ்ட ன் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவில் கல்வி பரப்புவதற்குச் , சமயப்பரப்புக் குழுவினர் நன்கு முயன்றனர். அவர்களின் முயற்சியால் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் இந்தியக் கல்வியையும் வழங்கின.



ஆங்கிலேயரின் ஆட்சியில் கல்வி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை நாம் நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

(i) ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம்

(ii) 1813 முதல் 1853 வரையிலான காலம்

(iii) 1854 முதல் 1920 வரையிலான காலம்

(iv) 1921 முதல் 1947 வரையிலான காலம்


(i) ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம்

தொடக்க காலங்களில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது. ஏனெனில் கல்வியானது அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை . கிழக்கிந்திய கம்பெனியின் 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக்குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.

உங்களுக்குத் தெரியுமா

1813இல் கிழக்கிந்திய நிறுவனம் – இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

(ii) 1813 முதல் 1853 வரையிலான காலம்

இரண்டாவது கட்டமானது கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலமாக கருதப்பட்டது. முதலாவது பிரிவினரான கீழ்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளைப் பயிற்று மொழியாக்கவும் விரும்பினர். இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாட்டுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவைப் பரப்புவதை ஆதரித்தனர். அவர்கள் கீழ்திசைவாதிகளின் கொள்கைகளை எதிர்த்தனர். மூன்றாவது பிரிவினர், பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்.

இந்த கருத்து வேறுபாடுகள் 1835ஆம் ஆண்டின் மெக்காலே - வின் குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது. உயர் கல்வியில் கீழ்த்திசை மொழியைத் தவிர்த்து, ஆங்கிலக் கல்வியானது உயர் வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன இருந்த போதிலும், 1854 ஆம் ஆண்டு வரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.


(iii) 1854 முதல் 1920 வரையிலான காலம்

ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம். இது 1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. 1882ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.

உங்களுக்குத் தெரியுமா

உட்ஸ் கல்வி அறிக்கை (1854) இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் "மகாசாசனம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும். ஆனால் இது இந்தியர்களின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் விலக்கி வைத்து மாநிலக் கல்வியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.

(iv) 1921 முதல் 1947 வரையிலான காலம்

நான்காவது காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும். 1935ஆம் ஆண்டுச் சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி, மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது. இக்கல்விக் கொள்கை சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.


 

உங்களுக்குத் தெரியுமா

வார்தா கல்வித் திட்டம் (1937)

1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கினார். காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணியாக அகிம்சை கொள்கை இருந்தது. அக்கல்வித் திட்டத்தின் மூலம் அகிம்சைக் கொள்கையை எதிர்கால குடிமக்களிடையே மேம்படுத்த அவர் விரும்பினார். அதன்மூலம் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவது அவசியமென கருதினார். காந்தியடிகள் இத்திட்டத்தின் மூலம் சுரண்டலையும், சமூக மையப்படுத்துதலையும் நீக்கிவிட்டு வன்முறையற்ற சமூகநிலையை உருவாக்க விரும்பினார்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : இந்தியாவில் கல்வி வளர்ச்சி