Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | முதுகுநாணுள்ளவை (Chordata)

விலங்குலகம் - முதுகுநாணுள்ளவை (Chordata) | 9th Science : Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : விலங்குலகம்

முதுகுநாணுள்ளவை (Chordata)

முதுகுநாணுள்ளவைகளில் முதுகுநாண், முதுகுப்புற நரம்புவடம் மற்றும் இணை செவுள் பைகள் ஆகியசிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. நீண்ட, கோல் போன்ற முதுகுநாண் இவ்வுயிரியின் முதுகுப்புறத்தைத் தாங்கியுள்ளது.

முதுகுநாணுள்ளவை (Chordata)

முதுகுநாணுள்ளவைகளில் முதுகுநாண், முதுகுப்புற நரம்புவடம் மற்றும் இணை செவுள் பைகள் ஆகியசிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. நீண்ட, கோல் போன்ற முதுகுநாண் இவ்வுயிரியின் முதுகுப்புறத்தைத் தாங்கியுள்ளது. மேலும், இது உணவுப்பாதையையும் நரம்புத் திசுவையும் பிரிக்கிறது. அனைத்து முதுகுநாணிகளும், மூவடுக்கு மற்றும் உண்மையான உடற்குழி கொண்டவையாகும். இத்தொகுதி, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன்முதுகு நாணிகள் மற்றும் முதுகெலும்புள்ளவைகள் ஆகும்.

 

1. முன்முதுகுநாணுள்ளவை (Prochordata)

இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. முதுகுநாண் அமைப்பின் அடிப்படையில் இவை இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, வால்முதுகுநாணிகள் (யூரோ கார்டேட்டா) மற்றும் தலைமுதுகு நாணிகள் (செபாலோ கார்டேட்டா) என்பவையாகும்.

துணைத்தொகுதி வால்முதுகுநாணிகள்

தனித்து வாழும் லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள் காணப்படுகின்றன. முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை. உடலைச் சுற்றிலும் டியூனிக் என்னும் உறை உண்டு . .கா. அசிடியன்.


துணைத்தொகுதி தலைமுதுகு நாணிகள்

இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகுநாணிகள். இவற்றின் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது. தலை முதல் வால் வரை உள்ள நீண்ட நிலையான முதுகுநாண் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. .கா. ஆம்பியாக்ஸிஸ்.


 

2. முதுகெலும்பிகள் (Vertebrata)

இவ்வின விலங்குகளின் முதுகெலும்புத் தொடர் இவற்றின் சிறப்பம்சமாகின்றது. வளர்நிலை அமைப்பிலுள்ள முதுகுநாண், முதிர் உயிரியில் அச்சு எலும்பினாலான முதுகெலும்புத் தொடராக மாற்றியமைக்கப்படுகின்றது. இது உடலின் பிரதான சட்டகமாக அமைகிறது. முதுகெலும்பிகள் ஆறு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வகுப்பு: வட்டவாயுடையன

வட்டவாயுடைய உயிரிகள் தாடையற்ற முது கெலும்பிகளாகும் (வாய்த் துவாரம் தாடைகளால் சூழப்படாத நிலை). உடல் விலாங்கு மீன் போன்று நீளமானது. வட்டவடிவ வாயுடையவை. தோல் வழவழப்பாகவும், செதில்களற்றும் காணப்படும். இவை மீன்களின் மேல், புற ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடத்துகின்றன. .கா: ஹேக் மீன், லாம்ப்ரே .


வகுப்பு: மீன்கள்

மீன்கள் குளிர் இரத்தப் பிரானிகளான (Poikilothermic), நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். இவை தாடைகளைப் பெற்றவை. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது. இணைத் துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன. உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது. அதன் சுவாசம் செவுள்கள் வழியாக நிகழ்கிறது. இதயம் ஆரிக்கிள், வென்டிரிக்கிள் என இரு அறைகளைக் கொண்டது. இரண்டு முக்கியமான மீன்வகைகள் உள்ளன

 i. குறுத்தெலும்பு மீன்கள்: இவற்றில் எலும்புச் சட்டகம் குறுத்தெலும்பினால் ஆனது .கா: சுறா, ஸ்கேட்ஸ்.

ii.  எலும்பு மீன்கள்: எலும்புச் சட்டகத்தைக் கொண்டவை. .கா: கெண்டை , மடவை .


மேலும் அறிந்துகொள்வோம்

மிகச்சிறிய முதுகெலும்பியான பிலிப்பைன் கோபி / குட்டை பிக்மி கோபி (dwaf pygmy goby) வெப்பமண்டலப் பகுதியில் வாழும் மீனினமாகும். இவை தென்கிழக்காசியாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பு நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இவை 10 மி.மீ மட்டுமே நீளம் கொண்டவை.

வகுப்பு: இரு வாழ்விகள்

இவை முதன்முதலில் தோன்றிய நான்கு கால்களை உடைய உயிரினங்களாகும். நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவலமைப்பினைப் பெற்றுள்ளன. உடலானது தலை, உடல் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தோலானது ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்று செதில்களற்றதாக உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


சீனாவின் ராட்சத சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் (Andrias davidians) உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வியாகும். இது ஐந்து அடி மற்றும் பதினொரு அங்குல நீளமும், 65 கிலோ எடையும் உடையது. இது மத்திய மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகின்றது.

சுவாசமானது செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை வழியாக நடைபெறுகிறது. இதயமானது இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வென்டிரிக்கிள் என மூன்று அறைகளைக் கொண்டது. முட்டைகள் நீரில் இடப்படுகின்றன. வளர் உருமாற்றத்தில் தலைப் பிரட்டை (Tadpole) எனும் லார்வா முதிர் உயிரியாகிறது. .கா: தவளை, தேரை.

வகுப்பு: ஊர்வன

நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு ஊர்வனவாகும். தோலின் மேற்புறத்தில் சொரசொரப்பான முட்கள் போன்ற செதில்கள் உள்ளன. இவற்றில் சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது. இதயத்தில் மூன்று அறைகள் காணப்படும். ஆனால், முதலைகளில் மட்டும் நான்கு அறைகள் உண்டு. தடித்த தோல் போன்ற ஓடுடைய முட்டைகளை இடுகின்றன. .கா. ஓணான், பல்லி, பாம்பு, ஆமை.


வகுப்பு: பறப்பன

முதுகெலும்பிகளில், பறறைகளே முதலில் தோன்றிய வெப்ப இரத்த (Homeothermic) உயிரிகளாகும். இவை பறப்பதற்கேற்ற சிறப்பான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றின் கதிர் வடிவம் கொண்ட உடலானது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது. இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாக உள்ளன. பின்னங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், நீந்துவதற்கும் ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன. காற்றறைகளைக் கொண்ட நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. எலும்புகள் மென்மையானவை. எலும்புகளினுள் காற்றறைகள் (Pneumatic bones) உண்டு . எனவே, இவற்றின் எடை குறைவாக இருக்கும். முட்டைகளில் அதிகளவு கருவுணவு உண்டு. முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை. .கா: கிளி, காகம், கழுகு, புறா, நெருப்புக்கோழி.


மேலும் அறிந்துகொள்வோம்

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா (Chalcophaps indica)


வகுப்பு: பாலூட்டிகள்

பாலூட்டிகள் வெப்ப இரத்த விலங்குகள் ஆகும். இவற்றின் உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது.

உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகள் மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகள் உண்டு. உடலானது தலை, கழுத்து, வயிறு மற்றும் வால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாலூட்டும் சுரப்பிகள், பெண் உயிரிகளில் காணப்படுகின்றன. வெளிக்காது மடல் இவற்றில் காணப்படுகிறது. இதயம் நான்கு அறைகளுடையது. முட்டையிடும் பாலூட்டிகளைத் தவிர (பிளாட்டிபஸ்) மற்றவை குட்டிகளை ஈனுகின்றன. தாய்-சேய் இணைப்புத்திசு இவற்றின் சிறப்பம்சமாகும். .கா: எலி, முயல், மனிதன்.


மேலும் அறிந்துகொள்வோம்

முதுகெலும்புடைய விலங்குகளில் 35 மீட்டர் நீளமும் 120 டன் எடையும் கொண்ட ராட்சத நீலத் திமிங்கிலமே மிகப் பெரிய விலங்காகும்.


 

 

 

நினைவில் கொள்க

உயிரினங்களை அவற்றின் ஒற்றுமை, வேறுபாடுகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இனத் தொடர்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தல் வகைப்படுத்துதல் எனப்படும்.

செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் விலங்குகள் ஒரு செல் உயிரிகள் அல்லது பலசெல் உயிரிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

விலங்குகளில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆரச்சமச்சீர் முறையில் உடல் உறுப்புகள் மைய அச்சைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

இருபக்க சமச்சீர் முறையில் உடல் உறுப்புகள் மைய அச்சிற்கு இருபுறமும் அமைந்துள்ளன.

 உடற்குழி என்பது திரவத்தினால் நிரம்பிய உடல் துளை ஆகும். இது செரிமானப்பகுதியை உடல் சுவரிலிருந்து பிரிக்கின்றது.

முதுகு நாண் இல்லாத விலங்குகள் முதுகு நாணற்றவை என்றும் அழைக்கப்படுகின்றன.

முதுகுநாண் உள்ள விலங்குகள் முதுகு நாணுள்ளவை என்றும் அழைக்கப்படுகின்றன.

முதுகெலும்பிகளின் முன்னோடி முன்முதுகுநாணுள்ளவை ஆகும்

 

A-Z சொல்லடைவு

உடற்குழி அற்றவை : உண்மையான உடற்குழி அற்ற விலங்குகள்.

இருவாழ்விகள் : தவளைகள், தேரைகள், நியூட்டுகள் மற்றும் சாலமாண்டர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முதுகெலும்புள்ளவைகளின் தொகுதி.

வளைதசைப்புழுக்கள் : மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கண்டங்களுடைய புழுக்களின் தொகுதி.

பறவைகள் : பறவைகளை உள்ளடக்கிய முதுகெலும்பிகள்.

உடற்குழி கொண்டவை : உண்மையான உடற்குழி கொண்ட விலங்குகள்.

வகைப்பாடு : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுவான பண்புகளுடைய உயிரினங்களைக் கொண்ட விலங்குகளை வரிசைப்படுத்துதல்.

பாலூட்டிகள் : உரோமம், பால்சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டதும் தங்களது இளம் உயிரினங்களுக்கு பாலூட்டக்கூடியதுமான முதுகெலும்புள்ள வெப்பஇரத்த விலங்குகள்.

பொய் உடற்குழியுடையவை : உண்மையான எபித்தீலிய உறைகளற்ற திரவம் நிரம்பிய பொய் உடற்குழி உடையவை.

தேரை : தவளைகளைவிட மென்மையான தோலைக்கொண்ட, குதிப்பதற்குப் பதிலாகத் தாவிச் செல்லும் தரைவாழ் உயிரிகள்.

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : விலங்குலகம்