Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: அதிசயமலர்

தமிழ்நதி | இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: அதிசயமலர் | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

செய்யுள்: அதிசயமலர்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : செய்யுள்: அதிசயமலர் - தமிழ்நதி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

நிருவாகம் – எ

அதிசய மலர்

- தமிழ்நதி



நுழையும்முன்

குண்டுமழை பொழிந்தது; நிலங்கள் அழிக்கப்பட்டன; மனிதர்கள் சிதறி ஓடினர். அழிக்கப்பட்ட தாய்மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. வண்டுகள் பூவைத் தேடி வருகின்றன. அந்தப் பூ நம்பிக்கைகளைத் தருகிறது. நாளை அங்கே பெருங்காடு உருவாகலாம். பெருமழை பெய்யலாம். அந்தப் பூவின் புன்னகை, நாடு பற்றிய நம்பிக்கையைச் சிதறிய மனிதரிடையே பரப்புகிறது.

இறுகிப் படிந்த துயரத்தோடும் 

எஞ்சிய மனிதர்களோடும் மீண்டிருக்கிறோம்


ஞாபகத்தில் மட்டுமே மரங்கள் மீந்திருக்கும் 

பொட்டல் வெளியில் 

போரின் பின் பிறந்த குழந்தையென 

முகையவிழ்ந்து சிரிக்கிறது 

அதிசய மலரொன்று 


ஆட்களற்ற பொழுதில் உலவிய 

யானைகளின் எச்சத்திலிருந்து 

எழுந்திருக்கலாம் இச்செடி 


எவருடையவோ 

சப்பாத்தின் பின்புறம் 

விதையாக ஒட்டிக் கிடந்து 

உயிர் தரித்திருக்கலாம் 


பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் 

மலரை அடையாளம் கண்டு 

எங்கிருந்தோ வருகிறது 

வண்ணத்துப்பூச்சியொன்று 

பறவைகளும் வரக்கூடும் நாளை


இனி செடியிலிருந்து பெருகும் காடு 

அது கொணரும் பெருமழை


அதிசய மலரின் 

இதழ்களிலிருந்து தொடங்கும் புன்னகை 

பேரூழி கடந்து பிழைத்திருக்கும் மனிதரிடை 

பரவிச் செல்கிறது!


ஏதொன்றையேனும் பற்றிப் பிடிக்காமல் 

எப்படித்தான் கடப்பது


நூல்வெளி

இக்கவிதை 'அதன் பிறகும் எஞ்சும்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இதைப் படைத்த தமிழ்நதி (கலைவாணி) ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), ஈழம் கைவிட்ட தேசம், பார்த்தீனியம் (நாவல்) முதலிய பல்வேறு படைப்புகளைப் படைத்துள்ளார். புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.


12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்