Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு

குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு - குமரகுருபரர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

கவிதைப்பேழை

கல்வி அழகே அழகு

நுழையும்முன்

மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர். அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன. ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதைக் கூறும் நீதிநெறி விளக்கப்பாடல் ஒன்றை அறிவோம்.

 

*கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்*

- குமரகுருபரர்

 

சொல்லும் பொருளும்

கலன் - அணிகலன்

முற்ற – ஒளிர

பாடலின் பொருள்

ஓளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

 

நூல் வெளி


குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில