Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: நெடுநல்வாடை

நக்கீரர் | இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: நெடுநல்வாடை | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

செய்யுள்: நெடுநல்வாடை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : செய்யுள்: நெடுநல்வாடை - நக்கீரர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

இயற்கை – உ

நெடுநல்வாடை

- நக்கீரர்



நுழையும்முன்

'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை! என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை, மாற்றம் பெறுகிறது. முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க*

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை

கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள். [1-12]

பாவகை : நேரிசை ஆசிரியப்பா 


சொல்லும் பொருளும் 

புதுப்பெயல் - புதுமழை; 

ஆர்கலி - வெள்ளம்; 

கொடுங்கோல் - வளைந்த கோல்; 

புலம்பு - தனிமை; 

கண்ணி - தலையில் சூடும் மாலை; 

கவுள் - கன்னம்; 

மா - விலங்கு.


திணை: வாகை 

வாகைத் திணை - வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத்திணை.

துறை : கூதிர்ப்பாசறை 

கூதிர்ப்பாசறை – போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

பாடலின் பொருள்

தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. 

விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு .



இலக்கணக் குறிப்பு

வளைஇ - சொல்லிசை அளபெடை

பொய்யா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

புதுப்பெயல் - பண்புத்தொகை

கொடுங்கோல் - பண்புத்தொகை


உறுபிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ 

கலங்கு - பகுதி

இ - வினையெச்ச விகுதி


புணர்ச்சி விதி 

இனநிரை = இனம் + நிரை

விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் - இனநிரை 

புதுப்பெயல் = புதுமை + பெயல் 

விதி : ஈறுபோதல் - புது + பெயல் 

விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் 

கசதப மிகும் - புதுப்பெயல்


நூல்வெளி

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; 188 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.


12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை