Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: ஒளியின் அழைப்பு

ந. பிச்சமூர்த்தி | இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒளியின் அழைப்பு | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கவிதைப்பேழை: ஒளியின் அழைப்பு

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கவிதைப்பேழை: ஒளியின் அழைப்பு - ந. பிச்சமூர்த்தி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம் – அ

கவிதைப் பேழை 

ஒளியின் அழைப்பு

- ந. பிச்சமூர்த்தி



நுழையும்முன்

புவிஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம். வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன. போட்டியின்றி வாழ்க்கையில்லை; வலிகளின்றி வெற்றியில்லை. ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும்தான்!



பிறவி இருளைத் துளைத்து

சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி

எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது 

ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி 

எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது 

எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி 

பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது 

அதுவே வாழ்க்கைப் போர் 

முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.

- ந. பிச்சமூர்த்தி 

சொல்லும் பொருளும்

விண் - வானம்; 

ரவி - கதிரவன்; 

கமுகு -பாக்கு

பாடலின் பொருள்

கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது. பெருமரத்தின் நிழலை வெறுத்தது. உச்சிக்கிளையை மேலே உயர்த்தியது. விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (அமுதை) தேடியது. மீண்டும் மீண்டும் உயர்ந்து உயரே கதிரவன் ஒளிக்கதிர்களாகிய விரல்களின் அழைப்பைக் கண்டதும், பெருமரத்தின் இருட்டில் இருந்துகொண்டே தன் கிளைகளை வளைத்து, நீட்டியது.

அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுகிறது. இதுதான் வாழ்க்கைப்போர். வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு, போரிட்டே ஆக வேண்டும். பெருமரத்துடன் முட்டி மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம். முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும். கமுகுமரம் கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது. நம்பிக்கை, தன்முனைப்போடு கூடிய போட்டியில் கமுகு வென்றது. பெருமரத்தை விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது.


இலக்கணக் குறிப்பு

பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர்உருவகங்கள்.

பகுபத உறுப்பிலக்கணம்

வேண்டி = வேண்டு + இ 

வேண்டு - பகுதி

இ - வினையெச்சவிகுதி

போகிறது = போ+கிறு+அ+து

போ - பகுதி; கிறு - நிகழ்கால இடைநிலை;

அ - சாரியை

து - ஒன்றன்பால் வினைமுற்று விகுதி. 

மலர்ச்சி = மலர் + ச் + சி

மலர் - பகுதி; ச் - பெயர் இடைநிலை;

சி – தொழிற்பெயர் விகுதி

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.


நூல் வெளி 

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுகிறார். புதுக்கவிதையை "இலகு கவிதை, கட்டற்ற கவிதை விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். 

ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார். ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார். இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் முதல் சிறுகதை - ஸயன்ஸுக்கு பலி என்பதாகும். 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷ, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே