Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: படை வேழம்

செயங்கொண்டார் | கலிங்கத்துப்பரணி | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: படை வேழம் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

கவிதைப்பேழை: படை வேழம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: படை வேழம் - செயங்கொண்டார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

கவிதைப்பேழை

படை வேழம்


நுழையும்முன்

தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக்கொண்டவர்கள், அவர்தம் வீரமும் போர்அறமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக்கு உணர்த்துவன. அதனைப் போற்றிப் பாடும் சிற்றிலக்கியமான கலிங்கத்துப்பரணியின் பாடல்கள் சிலவற்றை அறிவோம்.


கலிங்கப் படையின் நடுக்கம்

எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை

அதுகொல் என அலறா இரிந்தனர்

அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே (1)

 

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்

"வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

இருவர் ஒருவழி போகல் இன்றியே (2)

 

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே* (3)

 

மழைகள் அதிர்வன போல் உடன்றன

வளவன் விடுபடை வேழம் என்றிருள்

முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்

முதுகு செயும்உப காரம் என்பரே (4)

- செயங்கொண்டார்

 

சொல்லும் பொருளும்

மறவி - காலன்

வழிவர் - நழுவி ஓடுவர்

கரி - யானை

தூறு - புதர்

பிலம் - மலைக்குகை

மண்டுதல் - நெருங்குதல்

அருவர் - தமிழர்

இறைஞ்சினர் - வணங்கினர்

உடன்றன - சினந்து எழுந்தன

முழை - மலைக்குகை

பாடலின் பொருள்

சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைச் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிசிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கன் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

 

நூல் வெளி

செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.

கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது.

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு