Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்

கலித்தொகைப் பாடல் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகைப் பாடல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஐந்து

கவிதைப்பேழை

பாடறிந்து ஒழுகுதல்


நுழையும்முன்

அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள் ஆகும். இச்சொற்களின் பொருளை மேலோட்டமாக அனைவரும் அறிவர். ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் நுட்பமான பொருள் உண்டு. அதளை விளக்கும் கலித்தொகைப் பாடல் ஒன்றை அறிவோம்.

 

'ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்*

- நல்லந்துவனார்

 

சொல்லும் பொருளும்

அலந்தவர் – வறியவர்

செறாஅமை – வெறுக்காமை

நோன்றல் – பொறுத்தல்

போற்றார் - பகைவர்

கிளை – உறவினர்

பேதையார் - அறிவற்றவர்

மறாஅமை - மறவாமை

பொறை - பொறுமை

பாடலின் பொருள்

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல், பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

 

நூல் வெளி

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்; நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கவி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது