Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: தாவோ தே ஜிங்

லா வோட்சு | இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: தாவோ தே ஜிங் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கவிதைப்பேழை: தாவோ தே ஜிங்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கவிதைப்பேழை: தாவோ தே ஜிங் - லா வோட்சு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

கவிதைப் பேழை

தாவோ தே ஜிங்

- லா வோட்சு


நுழையும்முன்

இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை. ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன. உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார். எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும்; இல்லையும் வேண்டும் என்ற கருத்தைக் கூறுவது இவர் படைத்த இக்கவிதை.



ஆரக்கால் முப்பதும் 

சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன; 

ஆனால், சக்கரத்தின் பயன் 

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது. 

பாண்டம் பாண்டமாகக் 

களிமண் வனையப்படுகிறது; 

ஆனால், பாண்டத்தின் பயன் 

அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது. 

வீட்டுச் சுவர்களில் 

வாயிலுக்காகவும் சன்னலுக்காவும் 

வெற்றுவெளியை விடுகிறோம்; 

ஆனால், வாயிலும் சன்னலும் 

வெற்றுவெளி என்பதால் பயன்படுகின்றன. 

எனவே, ஒரு பக்கம் 

இருத்தலின் பலன் கிடைக்கிறது; 

இன்னொரு பக்கம் 

இருத்தலின்மை யைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.


பாடலின் பொருள்

சக்கரம் பல ஆரங்களைக் கொண்டதாயினும் அவற்றிடையே உள்ள வெற்றிடத்தை மையமாக வைத்தே சுழல்கிறது;

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானையாயினும் அதன் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது; வீட்டிலுள்ள சாளரமும் கதவும்கூடச் சுவரின் வெற்றிடமே; அதுவே நமக்குப் பயன்பாடு. சுவர்களுக்கிடையே உள்ள வெற்றிடமே அறையாக நமக்குப் பயன்படுகிறது.

நம் பார்வையில் படும் உருப்பொருள்கள் உண்மை எனினும், உருவம் இல்லாத வெற்றிடமே நமக்குப் பயன் உடையதாகிறது. வெற்றிடமே பயன் உடையதாகுமெனில் நாம் வெற்றி பெறத் தடை ஏதும் உண்டோ ?

(வாழ்க்கை மிகவும் விரிவானது. அதன் சில பகுதிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். உணர்கிறோம். நாம் பயன்படுத்தாத அந்தப் பகுதிகளும் சுவை மிகுந்தவை; பொருள் பொதிந்தவை. வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து, நம் வாழ்க்கையைப் பொருளுடையதாக்குவோம்.)

பகுபத உறுப்பிலக்கணம் 

இணைகின்றன = இணை+கின்று+அன்+அ 

இணை - பகுதி 

கின்று - நிகழ்கால இடைநிலை 

அன் - சாரியை 

அ - பலவின்பால் வினைமுற்று விகுதி

தத்துவ விளக்கம் 

இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது. குடம் செய்ய மண் என்பது உண்டு. குடத்திற்குள்ளே வெற்றிடம் என்பது இல்லை. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும். வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது. இவை முரண்களாகத் தெரிந்தாலும் இவை முரண்களல்ல. அதை வலியுறுத்தவே இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்கிறார் கவிஞர். ஆரங்களைவிட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது. குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது. சுவர்களைவிட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது. ஆகவே, 'இன்மை' என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது அவர் கருத்து.

இலக்கணக் குறிப்பு 

பாண்டம் பாண்டமாக - அடுக்குத்தொடர்

வாயிலும் சன்னலும் - எண்ணும்மை


நூல் வெளி

லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர். சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர். அக்காலம், சீனச் சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது. லாவோட்சு "தாவோவியம்" என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர். ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார். லாவோட்சுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார். தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது. பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி. மணி.

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே