Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | மக்கள் தொகை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

மக்கள் தொகை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலுள்ள 121 கோடி மக்கள் தொகையில் 7.21 கோடி மக்கள் தொகையுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

மக்கள் தொகை

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலுள்ள 121 கோடி மக்கள் தொகையில் 7.21 கோடி மக்கள் தொகையுடன் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அறிக்கையின் படி தனித்த தேசிய இனமாக இயங்க கூடிய நாடுகளின் மக்கள் தொகையை விட தமிழ்நாட்டின் மக்கள் தொகைக் கூடுதலாக உள்ளது.

அட்டவணை 11.3 மக்கள் தொகை


 (ஆதாரம்: 2017-ல் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்ட உலக மக்கள் தொகை பட்டியல்)


1. மக்கள் அடர்த்தி

மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2001ல் 480 ஆகவும், 2011ல் 555 ஆகவும் உள்ளது. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு 12ஆவது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தேசிய சராசரி 382 ஆகும்.


2. நகரமயமாதல்

இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு 31.5% ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48.4% ஆக உள்ளது. இந்திய அளவில் மொத்த மக்கள் தொகையில் 6 சவீதத்தைக் கொண்டுள்ளது தமிழகம். நகரமக்கள் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் 9.61 சதவீதத்தைக் கொண்டு உள்ளது.


3. பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை) 

சமச்சீர் பாலினவிகிதம் என்பது பெண்கள் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் பாலின விகிதம் 995 ஆகும். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போதும் இந்திய அளவிலும் இந்த விகிதம் மிக அதிகமாகும். பாலின விகிதத்தில் கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

அட்டவணை 11.4 சுகாதாரம் மற்றும் சமூகக் குறியீடுகள்



4. குழந்தை இறப்பு விகிதம் (1வயதுக்குள்

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு வீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாகவுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின் படி 2016ம் ஆண்டில் தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விதிதம் 17 ஆகும். இது தேசிய சராசரி 34ல் பாதி அளவாகும்.


5. மகப்பேறு இறப்பு விகிதம் (MMR)(1 லட்சம் மகப்பேறில்) 

நிதி ஆயோக் அறிக்கையின் படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 79 எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 159ல் சரிபாதி அளவாகும். மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 61 (முதலிடம்), மகாராஷ்டிரா 67ஆகவும் இரண்டாம் இடத்தில் உள்ளது.


6. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் 

சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே ஆயுட்காலம் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவு. இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் 67.9 ஆண்டுகள் (ஆண் - 66.4 ஆண்டுகள் பெண் - 69.6 ஆண்டுகள்) ஆகும். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஆயுட்காலம் 70.6 ஆண்டுகளாக (ஆண் - 68.6 ஆண்டுகள், பெண் - 72.7 ஆண்டுகள்) உள்ளது.


7. எழுத்தறிவு நிலை

தமிழ்நாட்டின் எழுத்தறிவு நிலை மற்ற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் உள்ளது.


11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்