Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்

முதல் பருவம் அலகு 3 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும் | 7th Social Science : Geography : Term 1 Unit 3 : Population and Settlement

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு 3 : மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்

மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்

கற்றலின் நோக்கங்கள் * மனித இனம், அவற்றின் வகைப்பாடுகளை அறிதல் * பல்வேறு வகையான மதங்களை அறிந்துகொள்ளுதல் * முக்கியமான மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் * குடியிருப்புகள் அமைய சாதகமான சூழ்நிலைகளை பற்றி புரிந்துகொள்ளுதல் * கிராம மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் தன்மையை புரிந்துகொள்ளுதல் * குடியிருப்பின் வகைப்பாடுகளை பற்றி கற்றறிதல்.

அலகு – III 

மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்



கற்றலின்  நோக்கங்கள்

* மனித இனம், அவற்றின் வகைப்பாடுகளை அறிதல் 

* பல்வேறு வகையான மதங்களை அறிந்துகொள்ளுதல் 

* முக்கியமான மொழிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் 

* குடியிருப்புகள் அமைய சாதகமான  சூழ்நிலைகளை பற்றி புரிந்துகொள்ளுதல்

* கிராம மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் தன்மையை புரிந்துகொள்ளுதல்  

* குடியிருப்பின் வகைப்பாடுகளை பற்றி கற்றறிதல். 


அறிமுகம்

மக்கட் புவியியல் என்பது மக்களின் விகிதம், பிறப்பு, இறப்பு, வளர்ச்சி விகிதம், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய கற்றலாகும். மக்கள் தொகை அதிகரித்தல், குறைதல் என்பது மக்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாகும். மக்கள் ஓரிடத்திலிருந்து  மற்றொரு இடத்திற்குச் செல்வது இடம்பெயர்தல் எனப்படும்.

இனங்கள்

மானுட பிரிவை அவர்களின் பௌதீக மற்றும் உயிரியல் பண்புகளின் அடிப்படையில் பிரிப்பதே மனித இன வகையாகும். ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள், மனித இனம் என்று அழைக்கப்படுகிறது. பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய மனித இனங்கள்

• காக்கச  இனம்  (ஐரோப்பியர்கள் )

• நீக்ரோ இனம் (ஆப்பிரிக்கர்கள் ) 

• மங்கோலிய இனம் (ஆசியர்கள்) 

• ஆஸ்ட்ரலாய்டு இனம் (ஆஸ்திரேலியர்கள்)


காக்கச  இனம்  

காக்கச  இன மக்கள்  என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள், ஆவர். இவ்வின மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான  மூக்கும் உடையவர்களாவர். இவர்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.


மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.


நீக்ரோ  இனம் 

நீக்ரோ  இனம் மக்கள் கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள்  முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள். இவர்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.


மங்கோலிய இனம் 

மங்கோலிய இன மக்கள்  பொதுவாக ஆசியஆப்பிரிக்க இனத்தர்களாவர். அவர்கள் வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் தட்டையான  மூக்கை  உடையவர்களாவார்கள். இவர்கள் ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.


ஆஸ்ட்ரலாய்டு இனம் 

ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் அகலமான மூக்கு , சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். 


இந்தியாவின் இனங்கள்

மனித நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.   திராவிடர்களின் தோற்றம் பண்டைய சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தோன்றின என நம்பப்படுகிறது. பிற்காலத்தில் இந்தோ-ஆரியர்களின் வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை திராவிட மொழிகளாகும். பெரும்பாலும் இவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மதம்

மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டதாகும். இது மனிதர்களை மனித சமுதாயத்துடன் சேர்க்கிறது.  மதம் ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வின்  அடையாளமாகவும் திகழ்கிறது. 



மதங்களின்  வகைப்பாடு 

(அ) உலகளாவிய மதங்கள் 

கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் 

(ஆ) மனித இனப்பிரிவு மதங்கள்

ஜூடோயிசம், இந்து மதம் மற்றும் ஜப்பானிய ஷிண்டோயிசம் 

(இ) நாடோடிகள் (அல்லது) பாரம்பரிய மதங்கள்

அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன்



மொழி

சமுதாய அமைப்பில் மொழியானது  கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசியல், பொருளாதார சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள மொழி வழி வகுக்கிறது.

உலகின் முக்கிய மொழிகள்

• தமிழ் 

• இந்தி 

• சீனமொழி 

• ஆங்கிலம்

• ஸ்பானிஷ் 

• போர்ச்சுக்கீஸ்

• ரஷ்யன் 

• அராபிக் மொழி

• ஜெர்மன் 


இந்திய மொழிகள்

இந்தியா பல வகையான மொழிகளளையும் கலாச்சாரத்தையும் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலமும் தனக்கேயுரிய மொழி அடையாளத்தை கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது . வட இந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி,ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பேசப்படுகின்றன. தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கியமான மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகிறது.

இன்றைய மொழிப் பயன்பாடு மாறியுள்ளது. மொழி இது பெரும்பாலும் தொடர்புக் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் பல மொழிகளளை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தொழில் நுட்பங்கள் உலகத்தை மனித சமூகத்திற்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கின்றன.



குடியிருப்பு

குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். கிராமக் குடியிருப்பு என்பது ஒரு சமுதாய மக்கள், அவர்கள் தங்களின் முதன்மைத் தொழிலான வேளாண்மை, மரம் வெட்டுதல் , மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வதைக் குறிக்கும். நகர்ப்புற குடியிருப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்களான, தொழிற்சாலை, வாணிபம் மற்றும் வங்கிப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். கிராமப்புற குடியிருப்பில் மக்கள் தொகையின் அளவு மற்றும் அடர்த்தி குறைவாகவும், நகர்ப்புற குடியிருப்பில் அதிகமாகவும் காணப்படுகிறது.

தலம் மற்றும் சூழலமைவு 

தலம் மற்றும் சூழலமைவு என்பது ஒரு குடியிருப்பின் உண்மையான அமைவிடத்தைக் குறிப்பதாகும். ஒரு குடியிருப்பின் அமைவிடமானது நம் அன்றாடத் தேவைகளுக்கான, நீர் அளிப்பு, வேளாண் நிலம் கட்டுமானப் பொருட்கள், எரிபொருள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அமைகிறது.


பண்டைய குடியிருப்பின் வகைகள்


முற்காலத்தில் ஒரு குடியிருப்பானது அங்கேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டது. ஒரு வீட்டின் அமைப்பானது அங்குள்ள சுற்றுச் சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. விவசாயப் பிரதேசங்களில் வீடுகளின் சுவர்கள் களிமண்ணாலும், கூரைகள் வைக்கோலாலும் அல்லது மற்ற செடிகளின் புட்களாலும் வேயப்பட்டிருந்தது. கூரை அமைப்பதற்கான சட்டங்களுக்கு அங்குள்ள மரங்களையே பயன்படுத்திக் கொண்டனர். இம்மாதிரியான பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக் காற்றுப் பகுதிகள் இருந்தன. வீட்டின் அளவானது அங்குள்ளவர்களின் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தது.


குடியிருப்பின் அமைப்புகள்

குடியிருப்பு, குழுமிய குடியிருப்பு, சிதறிய குடியிருப்பு என வகைப்படுத்தப்படுகிறது.



குழுமிய குடியிருப்புகள்

குழுமிய குடியிருப்பை மையக் குடியிருப்பு எனவும் அழைக்கலாம். இவ்வகையான குடியிருப்பில் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. இவ்வகைக் குடியிருப்புகள் ஆற்றுப் சமவெளிகளிலும் வளமான சமவெளியை ஒட்டியும் அமைந்திருக்கும். இந்தியாவில் குழுமிய குடியிருப்புகளை, வடக்குச் சமவெளிகள் மற்றும் தீபகற்ப கடற்கரைச் சமவெளிகளிலும் காணலாம்.



சிதறிய குடியிருப்பு

சிதறிய குடியிருப்புகளை பொதுவாக அதிக வெப்பப் பகுதிகளிலும், மலைப்பாதைகளிலும்,அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், புல்வெளிகளிலும், தீவிர சாகுபடிப் பிரதேசங்களிலும் காண முடியும். இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்தும் காணப்படும். இந்தியாவின் இவ்வகையான குடியிருப்புகளை கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதியிலும், கங்கைச் சமவெளியிலும், ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியிலும், இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரத்திலும் காணமுடியும்.



குடியிருப்புகளின் படிநிலை



கிராமப்புறக் குடியிருப்பு

நீர் நிலையை ஒட்டிய இடங்களாகிய ஆறுகள், ஏரிகள் மற்றும் ஊற்றுக்கள் அருகிலேயே பெரும்பாலும் கிராமப்புறக் குடியிருப்புக்கள் அமைந்திருக்கும். ஏனென்றால் வேளாண் தொழிலுக்கு ஏற்ற நிலங்களுடன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய இடங்களையே மக்கள் குடியேறத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் விவசாய தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும், கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள். கட்டிடப் பொருள்களான மரம், கல் மற்றும் களிமண் போன்றவை எளிதில் கிடைப்பதால் கிராமங்களை குடியிருப்பு அமைக்க சிறந்த இடமாக கருதுகிறார்கள். 


கிராமப்புறக் குடியிருப்புக்கு ஏற்ற காரணிகள்

• இயற்கையான நிலத்தோற்றம் 

• உள்ளூர் தட்பவெப்பநிலை

• மண் வளம் மற்றும் நீர் வளங்கள்

• சமூக நிறுவனங்கள் 

• பொருளாதார நிலை 



கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் (Pattern of Rural settlement)

கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் என்பது வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையேயான தொடர்பைக் குறிப்பதாகும். கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்பு அதன் நிலத்தோற்றம், தட்பவெப்பம், நீர் நிலைகள் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும். கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நீள்வடிவமான, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நீள்வடிவமான, குடியிருப்பு சாலைகள், இருப்புப் பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் நீள்வடிவ ,குடியிருப்பு எனப்படும். எடுத்துக்காட்டு இமயமலை, ஆல்ப்ஸ் மற்றும் ராக்கி மலைத்தொடர் ஆகிய பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள்..



செவ்வக வடிவக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் அகலம் குறைந்தும் காணப்படும். இவ்வகையான குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. (எ.கா) சட்லஜ். பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள். ஒரு மையப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளை வட்ட வடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இத்தகைய குடியிருப்புகள், ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றிக் காணப்படுகின்றன. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து ,சாலைகளின் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும். எடுத்துக்காட்டு நாமக்கல் நகர்ப்புற குடியிருப்புகள்.


யாத்திரைக் குடியிருப்பு

யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும். (எ.கா.) தமிழ் நாட்டில் உள்ள பழனியில் காணப்படும் குடியிருப்புகள்.


நீர் நிலைக் குடியிருப்புகள் (Wet Point Settlement)

இவ்வ கையான குடியிருப்புகள் வறண்ட நிலப் பிரதேசங்களில் நீர்நிலையையொட்டிய பகுதிகளில் காணப்படுகிறது.



வறண்ட நில குடியிருப்புகள் (Dry Point Settlement)

வறண்ட நிலா குடியிருப்பு என்பது அதை சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஆகும். நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும், உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் கேரளா கடற்கரையோரத்திலும் மற்றும் கிழக்கு கடற்கரை டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன. 


நகர்ப்புறக் குடியிருப்புகள்

நகர்ப்புறக் குடியிருப்புகளில் மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். நகரம், மாநகரம், பெருநகரம் ஆகியவை  நகர்ப்புறமாகக் கருதப்படுகிறது. 

நகர்ப்புற குடியிருப்புகளின் வகைகள்

நகர்ப்புறத்திற்கான வரையறையானது  ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் வேறுபடும். பொதுவான சில வகைப்பாடுகளாவன.

• மக்கள் தொகையின் அளவு

• தொழில் அமைப்பு

• நிர்வாகம்


நகரம் (Town)

குறைந்த பட்ச மக்கள் தொகையான 5000க்கும் அதிகமான  மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம். நகரங்கள் செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் நிர்வாக நகரம் , இராணுவம் நகரம் மற்றும் கல்வி நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.


மாநகரம் (City)

நகரங்கள் பெரியதாக வளர்ச்சியடையும் போது, அவை பெருநகரங்கள் என அழைக்கப்படுகின்றன. நன்கு வளர்ச்சி அடைந்த மத்திய வாணிப வட்டத்தைக் கொண்ட ,பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பே மாநகரமாகும். இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமானனோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம்.

மிகப் பெரிய நகரம் (Mega City)

10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். இது ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும். கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 

உலக சுகாதார நிறு வனத்தின் கூற்றுப்படி ஒரு ஆரோக்கியமான நகரத்திற்கு அவசியம் இருக்க வேண்டியவையாவன. 

• தூய்மையான பாதுகாப்பான சுற்றுச்சூழல்

• அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். 

• உள்ளாட்சியில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

• எளிதாக கிடைக்கக் கூடிய ஆரோக்கிய சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மீப்பெரு நகர் (Megalopolis)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மிகப்பெரிய நகரங்களின் மக்கள் தொகை பத்து மில்லியனுக்கு  மேலாகவும், பெரிய நகராக்கப் பரப்பையும் கொண்ட இடத்தைக் குறிப்பதே மீப்பெரு நகராகும். பாஸ்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் நன்கு அறிந்த மீப்பெரு நகரமாகும். இந்தியாவில் டில்லி, மும்பை , கொல்கத்தா மிகபெரிய நகர்ப்புறப் பகுதியே மீப்பெரு நகரமாகும். குஜராத்தின் காந்தி நகர், சூரத், வதோதரா, இராஜ்கோட் ஆகியவையே முக்கியமான மீப்பெரு நகரங்களாகும்.


இணைந்த நகரம் (Conurbation)

மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக நில விரிவாக்கம் அடைந்து,  தொழில் வளர்ச்சி அடைந்து சில நகரங்களையும் பெரு நகரங்களையும் நகர்ப்புறங்களையும் கொண்ட பிரதேசமே இணைந்த நகரமாகும். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை , ஹரியானாவின் குர்ஹான், பரிதாபாத், உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா ஆகியவை இணைந்த நகரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.


செயற்கைக் கோள் நகரம் (Satellite Town)


அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில், நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும். பொதுவாக செயற்கைகோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவில் உள்ள அநேக செயற்கைக்கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது. 


பொலிவுரு நகரம் (Smart City)


நகர்ப்புறப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாக கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுரு நகரங்களாகும். இந்தியாவில் உள்ள முதல் பத்து சிறப்புப் பொருளாதார நகரங்களாவன புவனேஷ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், லூதியானா, கொச்சி, அகமதாபாத், சோலாபூர், புதுடெல்லி மற்றும் உதய்ப்பூர் ஆகும். தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன. அவை சென்னை , மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர் கோயம்புத்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகும்.

கிராமம் 

கிராமத்தில் விவசாயம் முதன்மைத் தொழிலாகும்.

மக்களடர்த்தி குறைவு

கிராமங்கள் மற்றும் குடிசைகள்

விவசாய வேலைகள்

எளிதான,அமைதியான வாழ்க்கை

நகரம் 

நகர்ப்புறத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களான தொழிற்சாலைகள் ஆட்கொண்டிருக்கும்.

மக்களடர்த்தி அதிகம் 

பெருநகரங்கள் மற்றும்  நகரங்கள் 

விவசாயம் அல்லாத பிற வேலைகள்

வேகமான, சிக்கல் நிறைந்த வாழ்க்கை 



சுருக்கம் : 

பல்வேறு வகையான மரபுவழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம், உயிரியல் குழுக்களாக பிரிக்கப்படுவதே இனம் ஆகும். 

காக்கசா, நீக்ரோ, மங்கோலியர்கள், ஆஸ்ட்ரோலாய்டு ஆகியவை  முக்கியமான இன வகைகளாகும்.

மொழியானது  கலாச்சாரத்தின் நிலையான மதிப்புமிக்க அமைப்பாகும். மொழியினால் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க முடியும், வாழவைக்க முடியும். 

குடியிருப்பானது மக்கள் தொகையின்  அடிப்படையில் கிராமம் மற்றும் நகரம் என்று பிரிக்கப்படுகிறது. 

குழுமிய குடியிருப்பு ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் வளமான சமவெளிகளிலும் வளர்ச்சியடைகின்றன. 

சிதறிய குடியிருப்பு பொதுவாக உயர்ந்த தட்பவெப்பநிலை, மலைப்பாதை, அடர்ந்த காடு, புல்வெளிகள் மற்றும் விவசாயத்திற்கு உகந்ததல்லாத நிலங்களின் அருகில் காணப்படும். 

பொலிவுறு நகரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முன்னேற்றத்துடன் இருக்கும்.


Reference

1. Dr. S.D Maurya (2016) cultural Geography Sharda Pustak Bhawan publication, Allahabad. 

2. R.Y. Singh (2007) Geography of settlements Rawat publications, New Delhi 

3. Majid Husain (2002) Human Geography Rawat publications Jaipur ad New Delhi.



7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு 3 : மக்கள் தொகை மற்றும், குடியிருப்புகளும்