பொருள், வகைகள், இலாபத்தின் கருத்துக்கள் - இலாபம் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு

இலாபம்

தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும்.

இலாபம்

தொழில் முனைவோர் மற்ற மூன்று உற்பத்திக் காரணிகளின் (நிலம், உழைப்பு, மூலதனம்) பணிகளை உற்பத்தியில் ஒருங்கினைப்பதற்காக வழங்கப்படும் வெகுமதியே இலாபம் ஆகும்.

1. பொருள்

தொழில்முனைவோரின் தொழில் திறமையைப் பயன்படுத்துவதற்கான வெகுமதி இலாபம் ஆகும். வேறுவகையில் கூறினால், உற்பத்திப் பணிகளில் நிலம், உழைப்பு மற்றும் மூலதனம் ஆகிய காரணிகளுக்கு வழங்கிய ஊதியம் போக தொழில் முனைவோரிடம் எஞ்சியருக்கும் நிதி அளவு இலாபம் ஆகும். இவ்வாறு ஒருபுறம் கூறப்பட்டாலும், நடைமுறையில் அப்படி இல்லை என்பதற்கும் பல சான்றுகளைக் காணலாம்.

2. இலாபத்தின் வகைகள்

I. முற்றுரிமை இலாபம்: ஒரு நிறுவனம் முற்றுரிமை கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் பெறக்கூடியது. 

II. எதிர்பாராத இலாபம்: எதிர்பாராத காரணிகளால், அதாவது விலை அளவில் மாற்றம் ஏற்படும் போது இலாபம் தோன்றினால் அது இவ்வகை இலாபம் ஆகும் (wind fall profit). 

III. இயங்குவதற்கான வெகுமதி இலாபம் : தொழில் முனைவோர் அவருடைய பணி புரிவதற்காக வழங்கப்படும் ஊதியம் இலாபம் ஆகும். (வாரம், கூலி, வட்டி போன்றவை போல).

3. இலாபத்தின் கருத்துக்கள் 

அ) மொத்த இலாபம்: ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயிலிருந்து மொத்தச் செலவை கழிக்கும் போது கிடைக்கும் உபரி மொத்த இலாபம் ஆகும்.

மொத்த இலாபம் = TR-TC

ஆ) நிகர இலாபம் / தூய இலாபம் / பொருளாதார உண்மையான இலாபம் 

நிகர அல்லது தூய அல்லது பொருளாதார அல்லது உண்மை இலாபம் என்பது மொத்த இலாபத்திலிருந்து தொழில் முனைவோர் சொந்த உற்பத்திக் காரணிகளை (உள்ளுறு செலவுகள்) பயன்படுத்தியதற்கு எடுத்துக் கொண்டது போக மீதி உள்ளதே நிகர இலாபம் ஆகும்.

நிகர இலாபம் = மொத்த இலாபம் - உள்ளார்ந்த செலவுகள் (Implicit

Costs)

இ) இயல்பு இலாபம்: தொழில் நீடித்திருக்க எதிர்பார்க்கும் குறைந்தபட்ச இலாபம் இயல்பு இலாபம் எனப்படும்.

ஈ) மிகை இலாபம்: இயல்பு இலாபத்திற்கு மேல்பெறப்படும் தொகை மிகை இலாபம் ஆகும். 

மிகை இலாபம் = உண்மை இலாபம் - இயல்பு இலாபம்


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு