முதல் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் | 7th Science : Term 1 Unit 5 : Reproduction and Modification in Plants
அலகு 5
தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை

கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் மூலம் தாவரங்களில் ஒரு மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ளல்.
* மகரந்தச் சேர்க்கை மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளல்.
* தன் மகரந்தச்சேர்க்கைக்கும், அயல் மகரந்தச்சேர்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளல்.
* வேர், தண்டு மற்றும் இலைகளின் மாற்றுருக்களை அறிந்துகொள்ளல்.
* இந்த மாற்றுருக்கள் எவ்வாறு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பயன்தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளல்.
அறிமுகம்
பூக்கும் தாவரங்கள் வேர், தண்டு மற்றும் இலைகளைக் கொண்டுள்ளன என்பது நமக்குத் தெரியும். இவை தாவரத்தின் பாகங்கள் எனப்படுகின்றன. தாவரத்தில் காணப்படும் மலர்கள், கனிகள், மற்றும் விதைகள் போன்றவை இனப்பெருக்க உறுப்புகள் எனப்படுகின்றன. விதைகளின் மூலம் தாவரங்கள் வளர்கின்றன என்பதை முந்தைய வகுப்புகளில் நாம் படித்துள்ளோம். இப்பாடத்தில் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பான மலர் எவ்வாறு கனியாக மாறுகிறது என்பதைப் பற்றியும், வேர், தண்டு, இலைகளின் மாற்றுருக்கள் பற்றியும் அறிந்துகொள்ள இருக்கிறோம்.