Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

விசையும் இயக்கமும் | பருவம் 1 | அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 1 Unit 2 : Forces and Motion

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க.

• இயக்கம் மற்றும் ஓய்வு ஆகியவை ஒன்றுக்கொன்று சார்புள்ளவை.

• வேறொரு நிலையில் இருந்து பார்க்கும் போது, ஓய்வு நிலையில் உள்ள அனைத்துப் பொருள்களும் இயக்கநிலையில் உள்ளது போலும், இயக்க நிலையில் உள்ள பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளது போலும் தோன்றும்.

• தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்கள் மூலம் ஒரு பொருளின் மீது விசையானது செயல்படுத்தப்படுகிறது. இவ்விசையானது உயிருள்ள மற்றும் உயிரற்ற புறக்காரணிகளால் செயல்படுத்தப்படலாம்.

• பொருளின்மீது செயல்படுத்தப்படும் விசையானது, பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாற்றலாம்; இயங்கும் பொருளின் வேகத்தையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றலாம்; பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

• சில விசைகள் தொடு விசைகளாகவும், சில விசைகள் தொடா விசைகளாகவும் செயல்படக்கூடியவை.

• சராசரி வேகம் = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட காலம் (s=d/t)

• வேகத்தின் அலகு மீ/விநாடி

• இயக்கத்தினை அதன் பாதையைப் பொருத்தும் (கால ஒழுங்கு உடையவை மற்றும் கால ஒழுங்கு அற்றவை), வேகத்தைப் பொருத்தும் (சீரான இயக்கம் மற்றும் சீரற்ற இயக்கம்) வகைப்படுத்தலாம்.


செயல்பாடு 7

எளிய காற்றாடி

கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி நாம் ஒரு எளிய காற்றாடியை உருவாக்குவோம்.


• உங்களது பழைய பந்துமுனைப் பேனாவிலிருந்து 2 செ.மீ. நீளம் கொண்ட மைக்குழாயை வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் மையத்தில் படம் 1ல் காட்டியபடி துளையிட்டுக்கொள்ளவும்.

• ஒரு மெல்லிய கம்பியை 9 செ.மீ அளவில் எடுத்துக்கொண்டு, அதனைப் படம் 2ல் காட்டியபடி U வடிவில் வளைத்துக்கொள்ளவும்.

• துளையிட்ட மைக்குழாயை படம் 3ல் காட்டியவாறு U வடிவக் கம்பியில் செருகிக் கொள்ளவும்.

அதே பேனாவின் பெரிய மைக்குழாயில் கம்பியின் இருமுனைகளையும் படம் 4ல் காட்டியவாறு U வடிவக் கம்பியின் முனையில் கட்டவும்.

இப்போது படம் 5ல் காட்டியவாறு, மைக்குழாயின் வழியாகக் காற்றினை ஊதவும்.

வேகத்தை அதிகரிகரிப்பதற்கு கம்பியின் முனைகளின் நீளத்தினை மாற்றியமைத்து காற்றானது மைக்குழாயின் முனைகளை அடையுமாறு செய்யவும். எளிய காற்றாடியை வைத்து விளையாடினீர்களா? அதில் ஏற்படும் இயக்கங்களைக் கவனித்து இருப்பீர்கள். இப்போது கீழே உள்ள கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

1. குழாயின் வழியாகச் செல்லும் காற்றானது -----------------  இயக்கத்தினை மேற்கொள்கிறது.

2. மைக்குழாய்த் துண்டானது -----------------------  இயக்கத்தினை மேற்கொள்கிறது.

3. காற்றாடியானது ------------------ இயக்கத்தினை -------------- இயக்கமாக மாற்றுகிறது.



இணையச் செயல்பாடு


விசை மற்றும் இயக்கம்

விளையாடி பார்போமா விசை மற்றும் இயக்கம்.

படிநிலைகள்:

• Google தேடுபொறி / உலாவிக்குள் சென்று விசை பற்றி அறிந்து கொள்ள "FORCE AND MOTION" PhET என்று தட்டச்சு செய்யவும். ஒரு கயிறை இரு வண்ண ஆடை அணிந்த மனிதர்கள் இருபக்கம் இழுப்பது போல் திரையில் தோன்றும். அதைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும் ஒரு பக்க மனிதனை அழுத்தி, GO என்கிற பொத்தானை அழுத்தவும்.

• வலது பக்கத்தில் மனிதன் இருப்பதால் பொருள் வலது பக்கம் நோக்கி நகரும்.

• இப்பொழுது நீல நிற மனிதனை இடது பக்கத்தில் வைக்கும்பொழுது இருபக்க விசை சமமாக இருப்பதால் பொருள் நகர்வதில்லை.

• இதைப் போல இருபக்கமும் மனிதர்களைச் சமமாகவும் அதிகமாகவும் வைத்து விசையின் திறனைக் குறித்து அறிந்து கொள்ளலாம்.


உரலி

https://phet.colorado.edu/en/simulation/forces-and-motion-basics

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்