Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வகைப்பாட்டின் வகைகள் - வகைப்பாட்டியல்

தாவரவியல் - வகைப்பாட்டின் வகைகள் - வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

வகைப்பாட்டின் வகைகள் - வகைப்பாட்டியல்

(1) செயற்கை வகைப்பாட்டு முறை (2) இயற்கை வகைப்பாட்டுமுறை (3) இனப்பரிணாம வழி வகைப்பாட்டுமுறை

வகைப்பாட்டின் வகைகள்:

தாவரத் தொகுப்புகள் மூன்று வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை

(1) செயற்கை வகைப்பாட்டு முறை

(2) இயற்கை வகைப்பாட்டுமுறை

(3) இனப்பரிணாம வழி வகைப்பாட்டுமுறை

ஆகியனவாகும்.


1. செயற்கை வகைப்பாட்டுமுறை (Artificial system of classification)



"வகைப்பாட்டியலின் தந்தை" என போற்றப்படும் கரோலஸ் லின்னேயஸ் (1707 - 1778) ஒரு சிறந்த ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர். இவர் 1753-ம் ஆண்டில் "ஸ்பீசிஸ் பிளாண்டாரம்" எனும் நூலில் செயற்கை முறை வகைப்பாட்டினை விளக்கினார். இதில் 7,300 சிற்றினங்களை விவரித்து 24 வகுப்புகளாகப் பட்டியலிட்டுள்ளார். இவர் தம் வகைப்பாட்டில் மகரந்தத்தாள்களின் எண்ணிக்கை, இணைவு, நீளம் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தினார். மேலும், சூலக இலைகளின் சிறப்புப் பண்புகளின் அடிப்படையில் வகுப்புகளைப் பலதுறைகளாகப் பிரித்தார். எனவே இவ் வகைப்பாடு "பாலின வழி வகைப்பாடு (Sexual system of classification)" என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வகைப்பாடு செயற்கை முறை கோட்பாடாக இருந்தாலும், எளிமையானதாகவும் தாவரங்களை எளிதில் அடையாளம் காண்பதற்கும் பெருமளவு உதவியதால் லின்னேயஸின் இறப்புக்குப் பின்னரும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்தது. நடைமுறையில் இருந்த பிறவகைப்பாடுகளைவிட இவ்வகைப்பாடு முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், பின்வரும் காரணங்களால் இது தொடர்ந்து பின்பற்றப்படவில்லை.

1. முற்றிலும் தொடர்பற்ற தாவரங்கள் ஒரே பிரிவின் கீழும், நெருங்கிய தொடர்புடைய தாவரங்கள் தனித்தனிப் பிரிவுகளின் கீழும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக a. ஒருவிதையிலைத் தாவரத்தொகுப்பைச் சேர்ந்த ஜிஞ்ஜிபெரேசி தாவரங்களும், இருவிதையிலைத் தாவர வகுப்பைச் சேர்ந்த அனகார்டியேசி தாவரங்களும், ஒரே ஒரு மகரந்தத்தாளைப் பெற்றிருப்பதால் மோனாண்டிரியா என்ற ஒரே வகுப்பின் கீழ் வகைப்பட்டுத்தப்பட்டுள்ளன.

b. மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை அடிப்படையில் ப்ரூனஸ் எனும் பேரினம் கேக்டஸ் குழுமத்துடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வகைப்பாட்டில் தாவரங்களை, அவற்றிற்கிடையே காணப்படும் இயற்கை அல்லது இனப்பரிணாம அடிப்படையில் வகைப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.


2. இயற்கை முறை வகைப்பாடு: (Natural System of Classification)


லின்னேயஸுக்கு பின் வந்த தாவரவியலாளர்கள் வகைப்பாட்டிற்குப் பாலினப் பண்புகளைவிட ஏனைய பண்புகளும் முக்கியமானவை என்பதை உணர்ந்தார்கள். எனவே மாற்றுவகைப்பாட்டிற்கான முயற்சி பிரான்ஸ் நாட்டில் தொடங்கியது. இதன் விளைவாக, தாவரங்களில் காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையில் இயற்கை முறையில் வகைப்படுத்தும் ஒரு அணுகுமுறை உருவாகி 1789-ஆம் ஆண்டில் அன்டோனின் லாரெண்ட் டி ஜெஸியுவால் முதன் முதலாக வழங்கப்பட்டது.

லின்னேயஸ் அவரது "ஸ்பீசிஸ் பிளாண்டாரம்" (1753) என்ற நூலில் மகரந்தத் தாள் மற்றும் பால்பண்புகளின் அடிப்படையில் 24 வகுப்புகளாக வகைப்படுத்தியுள்ளார்

பெந்தாம் மற்றும் ஹூக்கர் வகைப்பாடு

 

பரவலாகப் பின்பற்றப்பட்ட சிறந்த ஒரு இயற்கை முறை வகைப்பாடு ஜார்ஜ் பெந்தாம் (1800 – 1884) மற்றும் ஜோசப் டால்டன் ஹூக்கர் (1817 – 1911) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு தாவரவியல் வல்லுநர்களால் வழங்கப்பட்டது. இவ்வகைப்பாட்டை அவர்களுடைய ‘ஜெனிரா பிளாண்டாரம்’ (1862-1883) எனும் நூலில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர். அதில் விதைத் தாவரங்களை 202 குடும்பங்களாகத் தொகுத்து, 7569 பேரினங்களுக்கும், 97,205 சிற்றினங்களுக்கும் விளக்கம் தந்து இருவிதையிலைத் தாவரங்கள், திறந்தவிதைத்தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் என மூன்று வகுப்புகளில் வகைப்படுத்தினர்.

பெந்தாம் மற்றும் ஹூக்கர் வகைப்பாட்டின் சுருக்கம்

விதைத்தாவரங்கள், இருவிதையிலைத் தாவரங்கள், திறந்தவிதைத் தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் என மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வகுப்பு 1 - இருவிதையிலைத் தாவரங்கள்: விதைகள் இரண்டு விதையிலைகளையும், இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவையும், ஆணி வேர்த் தொகுப்பையும், நான்கு அல்லது ஐந்து அங்கமலர் தொகுப்பினையும் கொண்டுள்ள தாவரங்கள் இவ்வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகுப்பு அல்லி தனித்தவை, அல்லி இணைந்தவை, வேறுபாடற்ற பூவிதழ்க்குழுமம் என மூன்று துணை வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

துணை வகுப்பு 1: அல்லி தனித்தவை (polypetalae): தனித்த, இணையாத அல்லிகளைக் கொண்ட, ஈருறை மலர்கள் இத்துணைவகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது மேலும், பூத்தளக் குழுமம், பூத்தட்டு குழுமம், கோப்பை வடிவ பூத்தளக் குழுமம் என மூன்று வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


வரிசை (i)- பூத்தளக்குழுமம் (Thalamiflorae): வட்ட வடிவ அல்லது கூம்பு வடிவப் பூத்தளத்தையும், மேல்மட்டச் சூலகத்தையும் உடைய மலர்களைக் கொண்ட தாவரங்கள் இதில் அடங்கும். இது 6  துறைகளையும் 34 குடும்பங்களையும் கொண்டது.

வரிசை (ii) - பூத்தட்டுக் குழுமம் (Disciflorae): சூலகத்தின் கீழ்ப்புறத்தில் தெளிவான வட்டு போன்ற பூத்தள அமைப்பினையும், மேல்மட்டச் சூலகத்தையும் உடைய மலர்களைக் கொண்ட தாவரங்கள் இதில் அடங்கும். இது 4 துறைகளையும் 23 குடும்பங்களையும் கொண்டது.

வரிசை (iii) - கோப்பை வடிவ பூத்தளக் குழுமம் (Calyciflorae): கோப்பை வடிவப் பூத்தளத்தையும், மேல்மட்ட கீழ்மட்ட / இடைமட்ட சூலகத்தை உடைய மலர்கள் இதில் அடங்கும். இது 5 துறைகளையும் 27 குடும்பங்ளையும் கொண்டது.

துணை வகுப்பு 2: அல்லி இணைந்தவை (Gamopetalae): முழுமையாகவோ பகுதியாகவோ இணைந்த அல்லிகள், ஈருறை மலர்கள் கொண்ட தாவரங்கள் இதில் அடங்கும். இவ்வகுப்பு கீழ்மட்டச் சூலகக் குழுமம், பல்சூலக இலைக் குழுமம், இரு சூலிக இலைக் குழுமம் என மூன்று வரிசைகளைக் கொண்டது.

வரிசை (i) - கீழ்மட்டச் சூலகக் குழுமம் (Inferae): கீழ்மட்டச் சூலகத்தையுடைய சூலகக்கீழ் மலர்களைக் கொண்டது. கீழ்மட்டச் சூலகக் குழுமத்தில் 3 துறைகளும் 9 குடும்பங்களும் உள்ளன.

வரிசை (ii) - பல் சூலக இலைக் குழுமம் (Heteromerae): மேல்மட்டச் சூலகத்தையுடைய சூலக மேல் மலர்களையும், இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகளையும் உடைய மலர்களைக் கொண்டது. இதில் 3 துறைகளும் 12 குடும்பங்களும் உள்ளன.

வரிசை (iii) - இரு சூலக இலைக் குழுமம் (Bicarpellatae): மேல்மட்டச் சூலகமும், இரண்டு சூலிலைகளையுமுடைய மலர்களைக் கொண்டது. இதில் 4 துறைகளும் 24 குடும்பங்களும் உள்ளன.

துணை வகுப்பு 3: வேறுபாடற்ற பூவிதழ்க் குழுமம் (Monochlamydeae): அல்லி அற்ற அல்லது அல்லி - புல்லிவேறுபாடற்ற, முழுமையற்ற மலர்களைக் கொண்ட தாவரங்கள் இத்துணைவகுப்பில் இடம்பெற்றுள்ளன. இம்மலர்களில் புல்லி, அல்லி இதழ்கள் தெளிவாகக் காணப்படாததால் பூவிதழ் வட்டம் என அழைக்கப்படுகிறது. புல்லி - அல்லி வேறுபாடற்ற குழுமம் 8 வரிசைகளையும் 36 குடும்பங்களையும் கொண்டது. 

வகுப்பு II – திறந்த விதைக் குழுமம் (Gymnospermae): திறந்த விதைகளைக் கொண்ட தாவரங்கள் இதில் உள்ளன. இவ்வகுப்பில் சைக்கடேசி, கோனிஃபெரே, நீட்டேசி என மூன்று குடும்பங்கள் உள்ளன.

வகுப்பு III – ஒருவிதையிலைத் தாவரங்கள் (Monocotyledonae): விதைகள் ஒரு விதையிலையையும், சல்லிவேர் தொகுப்பையும் இலைகள் இணை நரம்பமைவையும், மூவங்க மலர்களையும் கொண்டதாவரங்கள் இவ்வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவிதையிலைத் தாவர வகுப்பு 7 வரிசைகளையும் 34 குடும்பங்களையும் கொண்டது.

பெந்தாம் மற்றும் ஹூக்கர் வகைப்பாடு காலனி ஆதிக்க நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு அந்நாடுகளின் உலர் தாவரச் சேமிப்புகளை வகைப்படுத்த நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்தது. உலகின் சில உலர்தாவர சேமிப்பு நிலையங்களில் இன்றளவும் தாவரங்களை அடையாளம் காணப் பின்வரும் காரணங்களால் இவ்வகைப்பாடு பின்பற்றப்பட்டு வருகின்றது.

• தாவரங்களின் விளக்கங்கள் மிகவும் துல்லியமாகவும் ஏற்புடையதாகவும் இருந்தன. ஏனென்றால் இது வெறும் ஒப்பீடுகளின் அடிப்படையில் அல்லாமல், தாவரங்களை நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்படுத்தி வகைப்படுத்தப்பட்டது.

• இவ்வகைப்பாடு பின்பற்றுவதற்கு எளிமையாகவும், தாவரங்களை இனங்கண்டறிய ஒரு திறவுகோலாகவும் உள்ளதால் சில ஹெர்பேரியங்களில் இவ்வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது

இது ஓர் இயற்கைமுறை வகைப்பாடாக இருந்தாலும் இவ்வகைப்பாட்டை ஒரு பரிணாம வகைப்பாடாகக் கருத இயலாது.


3. இனப்பரிணாம வழி வகைப்பாட்டு முறை: (Phylogenetic system of classification)


சார்லஸ் டார்வின் 1859-ல் வெளியிட்ட ”சிற்றினங்களின் தோற்றம்” எனும் நூல் இனப் பரிணாம உறவுவின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்த ஒரு தூண்டுதலாக அமைந்தது.


I. அடால்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் A பிரான்டில் வகைப்பாடு

ஆரம்பகால முழுத் தாவர உலகின் பரிணாம வகைப்பாடு இரண்டு ஜெர்மனிய தாவரவியலாளர்களாகிய அடால்ஃப் எங்ளர் (1844 - 1930) மற்றும் கார்ல் ஏ பிரான்டில் (1849 – 1893) ஆகியோரால் "டி நேச்சர்லிக்கன் ஃபிளான்ஸன் ஃபேமிலியன்" (1887 - 1915) எனும் நூலில் 23 வகுப்பு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. 


இந்த வகைப்பாட்டில் தாவர உலகம் 13 இருந்தது. உலகின் சில உலர்தாவர சேமிப்பு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 11 பிரிவுகளில் தாலோஃபைட்டுகளும், 12-வது பிரிவில் எம்பிரியோபைட்டா ஏசைபனோகேமாவும் (கருக்கள் கொண்ட, மகரந்தக் குழல்கள் அற்ற தாவரங்கள், பிரையோஃபைட்டுகள் மற்றும் டெரிடோஃபைட்டுகள்), 13வது பிரிவில் எம்பிரியோஃபைட்டா சைபனோகேமாவும் (கருக்கள், மகரந்தக் குழல்கள் கொண்ட தாவரங்கள்) நுண்ணிய நேரடி ஆய்விற்கு உட்படுத்தி வகைப்படுத்தப்பட்டிருந்தன. 

II. ஆர்தர் கிரான்கிவிஸ்ட் வகைப்பாட்டு முறை

ஆர்தர் கிரான்கிவிஸ்ட் (1919 - 1992) ஒரு சிறந்த அமெரிக்க வகைப்பாட்டியலாளர். இவர் உள்ளமைப்பியல், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தாவர வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான பூக்கும் தாவரங்களின் பரிணாம வகைப்பாட்டு முறையை முன்மொழிந்தார். 1968-ம் ஆண்டில் "பூக்கும் தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு" என்ற தலைப்பிலமைந்த புத்தகத்தில் அவர் தனது வகைப்பாட்டை அளித்தார். அவரது வகைப்பாடு சமகால வகைப்பாட்டியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிணாமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.


கிரான்கிவிஸ்ட் பூக்கும் தாவரங்களை இரண்டு முக்கிய வகுப்புகளாக மேக்னோலியாப்சிடா (= இருவிதையிலைத் தாவரங்கள்) மற்றும் லிலியாப்சிடா (= ஒருவிதையிலை தாவரங்கள்) என வகைப்படுத்தியுள்ளார். மக்னோலியாப்சிடா 6 துணை வகுப்புகள், 64 துறைகள், 320 குடும்பங்கள், 1,65,000 சிற்றினங்கள் கொண்டது. லிலியாப்ஸிடா 5 துணை வகுப்புகள், 19 துறைகள், 66 குடும்பங்கள் மற்றும் சுமார் 50,000 சிற்றினங்கள் கொண்டது.


கிரான்கிவிஸ்ட் வகைப்பாடு நீண்டகாலம் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அதன் இனப்பரிணாம உறவுமுறை அடிப்படை காரணமாகத்தாவரங்களை அடையாளம் காண்பதற்கும், உலர்தாவர நிலையங்களில் பின்பற்றுவதற்கும் பயனுள்ளதாக இல்லை.

 

4. மூடுவிதைதாவரங்களின் இனப்பரிணாமக்குழும வகைப்பாடு (Angiosperm Phylogeny Group Classification)


பூக்கும் தாவரங்களின் மிக அண்மைக்கால வகைப்பாடு இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் இனப்பரிணாம வழி தரவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. இக்குழும வகைப்பாட்டின் நான்கு பதிப்புகள் APG I, APG II, APG III & APG IV முறையே 1998, 2003, 2009, 2016 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பதிப்பும் முந்தைய பதிப்பிற்கு மேம்பட்டதாக உள்ளது. தாவரப் புற அமைப்பியல், உள்ளமைப்பியல், கருவியல், மகரந்தவியல், குரோமோசோமவியல், உட்கருவியல், தாவர வேதியியல், குறிப்பாகப் பசுங்கணிகத்திலுள்ள இரண்டு மரபணுக்களிலிருந்து (atpB மற்றும் rbcL) பெறப்பட்ட மூலக்கூறு தரவுகள், உட்கரு ரிபோசோம் 18s DNA போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒற்றைக்கால் வழிவந்த குழுவை (monophyletic group) ஏற்றுக்கொண்டனர். 

சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு APG IV (2016)-ல் 64 துறைகள் மற்றும் 416 குடும்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 416 குடும்பங்களில் 259 குடும்பங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

APG IV வகைப்பாட்டின் சுருக்க வரைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

உங்களுக்குத் தெரியுமா?

கியூ உட்படக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முக்கிய உலர் தாவர சேமிப்பு நிலையங்கள் தங்களுடைய சேகரிப்புகளின் வரிசையை APG முறைப்படி மாற்றி வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான தாவரக் குடும்பங்களின் உலகச் சரிபார்ப்புப் பட்டியல் (கியூவில் உள்ளது உட்பட) APG அமைப்புப்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவின் தாவரங்களின் சமீபத்திய புகைப்பட ஆய்வு APG III அமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், ஸ்டேஸ் எழுதிய பிரிட்டிஷ் தீவுகளின் நிலையான தாவரங்களின் பட்டியல் எனும் நூலின் சமீபத்திய பதிப்பானது, APG III அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

மூடுவிதை தாவரங்கள் மூன்று கிளைகளாகத் தொடக்ககால மூடுவிதை தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் மற்றும் உண்மை இருவிதையிலைத் தாவரங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூடுவிதை தாவரங்கள் 8 துறைகள் மற்றும் 26 குடும்பங்களாக (ANA கிளை + மக்னோலிட்ஸ் + குளோரான்தேல்ஸ்) கீழ்க்காணும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ANA வரிசை

அம்போரெல்லேல்ஸ்

N நிம்ஃபயேல்ஸ்

A ஸ்ட்ரோபெய்லியேல்ஸ்

• விதைகள் பொதுவாக இருவிதையிலையுடையவை.

• நறுமண எண்ணெய்கள் (ethereal oils) இருத்தல்.

• இலைகள் வலை நரம்பமைவுடையவை.

• மலரின் ஒவ்வொரு வட்டமும் பல பாகங்களைக் கொண்டிருத்தல் அல்லது மூன்றாக / மூன்றின் மடங்கில் காணப்படல்.

• மகரந்தக்தாள் அகன்ற மகரந்த கம்பிகளுடன் இருத்தல்.

• மகரந்தங்கள் நான்கு மகரந்தப் பைகள் பெற்றது.

• மகரந்தத்துக்கள் ஒருகுழியுடையது.

• சூலக இலைகள் தனித்திருத்தல்.

• கரு மிகச்சிறியது. 

ஒருவிதையிலைத் தாவரங்கள் 11 துறைகள், 77 குடும்பங்களாக (அடிப்படை ஒருவிதையிலைத் தாவரங்கள் + லிலியாயிட்ஸ் + கமெலினிட்ஸ்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

• விதைகள் ஒருவிதையிலையுடையவை.

• முதன்மை வேர் குறுகிய வாழ்வுடையது.

• ஒற்றை அடிபக்க முதன்மையிலை (prophyll).

• நறுமண எண்ணெய்கள் அரிதாகக் காணப்படல்.

• வாஸ்குலார் கற்றைகள் சிதறிக் காணப்படும் தண்டுகள்.

• இலைகள் தனித்தவை மற்றும் இணை நரம்பமைவுடையது.

• மலரின் பாகங்கள் மூன்றின் மடங்காக அமைந்திருத்தல்.

• பூவிதழ் வட்டம் பெரும்பாலும் இதழ்களையுடையது.

• மகரந்தத்துக்கள் ஒருகுழியுடையது.

• சூலகத்தண்டு பொதுவாக உள்ளீடற்றது.

• நுண்வித்தாக்கம் அடுத்தடுத்து நடைபெறும். 

உண்மை இருவிதையிலைத் தாவரங்கள் 45 துறைகள் மற்றும் 313 குடும்பங்களாக (ஆரம்பகால விரிவடைந்த உண்மை இருவிதையிலைத்தாவரங்கள் + சூப்பர் ரோசிட்ஸ் + சூப்பர் அஸ்டிரிட்ஸ்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.


• விதைகள் எப்பொழுதும் இருவிதையிலைகளுடையவை.

• கணுக்கள் மூன்று இடைவெளியுடன் மூன்று இலை இழுவையுடையது.

• இலைத்துளை அனோமோசைட்டிக்.

• நறுமண எண்ணெய் அரிதாக உள்ளது.

• கட்டைத்தன்மையுள்ள அல்லது மென்மையான தாவரங்கள்.

• இலைகள் தனியிலை அல்லது கூட்டிலை பொதுவாக வலை நரம்பமையுடையவை.

• மலரின் பாகங்கள் பெரும்பாலும் இரண்டின் மடங்கு, நான்கின் மடங்கு, ஐந்தின் மடங்காகக் காணப்படும்.

• நுண்வித்தாக்கம் ஒரே நேரத்தில் நடைபெறும். சூலகத்தண்டு திடமானது.

• மகரந்தத்துகள் முக்குழியுடையன.

APG வகைப்பாடு ஒரு வளர்ந்துவரும் வகைப்பாட்டு முறையாகும். பல்வேறு தாவரவியல் துறைகளிலிருந்து வெளிவரும் புதிய தரவுத் தொகுப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது இதில் மாற்றம் ஏற்படலாம். இது உலகெங்கிலும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வகைப்பாடு. மேலும் அனைத்து முன்னணி வகைப்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பயிற்சி வகைப்பாட்டியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்தியத் தாவரவியல் பாடத்திட்டத்தினுள் இன்னும் பரவலாக ஊடுருவ வேண்டியுள்ளது.

வகைப்படுத்துதல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள நமது அறிவின் நிலையை வெளிப்படுத்துகின்றது. புதிய தகவல்களைப் பெறும்போது இது தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கும். 


11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்