ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் - வேலூர் புரட்சி 1806 | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வேலூர் புரட்சி 1806

தென்தமிழகத்தின் பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்குவதற்கு முன்பாகவே கிழக்கிந்திய கம்பெனி 1792 இல் திப்பு வோடு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

வேலூர் புரட்சி 1806

தென்தமிழகத்தின் பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்குவதற்கு முன்பாகவே கிழக்கிந்திய கம்பெனி 1792 இல் திப்பு வோடு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 1799இல் நடந்த ஆங்கிலேய-மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது. 1798ஆம் ஆண்டு தஞ்சாவூரின் அரசர் அப்பகுதியின் இறையாண்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்து அதே ஆண்டு கப்பம் கட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டார். கட்டபொம்மன் எதிர்ப்பு (1799), மருது சகோதரர்களின் எதிர்ப்பு (1801) ஆகியவற்றை ஒடுக்கியப் பின்பு, பிரிட்டிஷார் ஆற்காட்டு நவாபை விசுவாசமற்றவர் என்று குற்றம் சுமத்தி அவர்மீது கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்தைத் திணித்தனர். 1801இல் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின்படி, ஆற்காட்டு நவாப் வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை அவற்றை நிர்வகிக்கும் அதிகாரத்தோடு ஒப்படைத்துவிட வேண்டும் என்றானது.


(அ) இந்திய வீரர்களின் மனக்குறை

ஆனாலும் எதிர்ப்பு அடங்கிவிடவில்லை. வெளியேற்றப்பட்ட சிற்றரசர்களும், நிலச்சுவான்தார்களும் கம்பெனி அரசுக்கு எதிராக எதிர்காலத் திட்டம் குறித்து நிதானமாக சிந்தித்துக்கொண்டே இருந்தார்கள். இதன் விளைவாக வெளிப்பட்டதே 1806ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும். புரட்சியின் இறுதி நிகழ்வு அந்நிய ஆட்சியை தூக்கி எறிவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரிட்டிஷாரின் இராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றியவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பது ஆகியவற்றை நினைத்து கடுமையான கோபத்துடனே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். தங்களின் சமூக மற்றும் சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறைவான மதிப்பளித்ததும், மேலும் அவர்களின் கோபத்தை வலுப்படுத்தியது. விவசாயப் பின்னணி கொண்ட வீரர்களின் வேளாண் சிக்கலும் அவர்களை மேலும் சிரமப்படுத்தியது. சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலக்குத்தகை முறையில் ஒரு நிலையற்ற தன்மைக் காணப்பட்டதாலும் 1805இல் பஞ்சம் ஏற்பட்டதாலும் பல சிப்பாய்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன. திப்புவின் மகன்களும் அவர்தம் குடும்பத்தினரும் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட வேளையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் அந்த வாய்ப்பு கூடிவந்தது. புரட்சி ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக தலைமைத்தளபதி (Commander - in - Chief) சர் ஜான் கிரடாக் வெளியிட்ட புதிய இராணுவ விதிமுறை அமைந்தது.

புதிய விதிமுறைகளின்படி, இந்திய வீரர்கள் சீருடையிலிருக்கும்போது சாதி அடையாளங்களையோ, காதணிகளையோ அணியக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் தாடையை முழுமையாகச்சவரம் செய்யவும் மீசையை ஒரே பாணியில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள். புதிய வகை தலைப்பாகை எரிகிற தீயில் எண்ணெய் சேர்ப்பது போலானது. மிகவும் ஆட்சேபனைக்குரிய செயலாகக் கருதப்பட்டது. தலைப்பாகையில் வைக்கப்படும் விலங்கு தோலினால் ஆன இலட்சினையாகும். புதிய தலைப்பாகையை அணிவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று இந்திய சிப்பாய்கள் போதுமான முன்னெச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கம்பெனி நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

 

(ஆ) புரட்சி வெடித்தல்

1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர். கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன் கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார். அடுத்ததாக இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார். கோட்டையைக் கடந்து சென்றுகொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார். சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது. ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள். அவர்களில் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் (Battalion) சேர்ந்தவர்களாவர்.

ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை

கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார். கேப்டன் யங்கின் தலைமையிலான குதிரைப் படைப்பிரிவுடன் காலை 9 மணியளவில் கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்தார். இதற்கிடையே புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர். போர்விதிமுறைகள் எதையும் பொருட்படுத்தாத ஜில்லஸ்பி வீரர்களின் புரட்சியை வன்மையாக ஒடுக்கினார். நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலப்படி, கோட்டையில் மட்டும் எண்ணூறு வீரர்கள் பிணமாகக் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியிலும், வேலூரிலும் அறுநூறு வீரர்கள் விசாரணையை எதிர்நோக்கி சிறையிலடைக்கப்பட்டார்கள்.

 

இ) புரட்சியின் பின்விளைவுகள்

நீதிமன்ற விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ஆறு நபர்கள் பீரங்கியில் கட்டிய நிலையில் சுடப்பட்டும், ஐந்து நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், எட்டு நபர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள். திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. கர்னல் ஜில்லஸ்பிக்கு 7,000 பகோடாக்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டது. எனினும் தலைமைத் தளபதி ஜான் கிரடாக்கும், உதவித் தளபதி (Adjutant General) அக்னியூவும், ஆளுநர் வில்லியம் பெண்டிங்கும் புரட்சி நடக்கக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டு அவர்களைப் பணி நீக்கம் செய்ததோடு, அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பியழைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.

 

ஈ) புரட்சியைப் பற்றிய மதிப்பீடு

வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது. சமீபகால ஆய்வுகளின் வழியாக நாம் அறிந்துகொள்வது யாதெனில் புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹுஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது. 1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை. 1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை. பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.


 

 

 

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 6 : ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்