நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் சுழற்சி | 6th Science : Term 3 Unit 2 : Water

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்

நீர் சுழற்சி

சூரியவெப்பத்தின் காரணமாக நீரானது ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியானது மேகமாக மாறுகிறது.

நீர் சுழற்சி

சூரியவெப்பத்தின் காரணமாக நீரானது ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்கிறது. வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியானது மேகமாக மாறுகிறது.

மேகங்களில் உள்ள நீரானது புவிக்கு மழை அல்லது பனி வடிவில் மீண்டும் வருகிறது. இந்த இயற்கை நிகழ்வின் மூலம் நீரானது தூய்மையாக்கப்படுகிறது.

இதனை நாம் நீர் சுழற்சி என்கிறோம்.இது ஒரு தொடர் நிகழ்வாகும். நீர் சுழற்சியானது மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அவை ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகும். இந்த நீர் சுழற்சியினை நாம் ஹைட்ராலாஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle) என்றும் அழைக்கிறோம்.


 

செயல்பாடு 4 : ஓர் ஈரத் துணியினை வெயிலில் உலர்த்தவும்.சிறிது நேரம் கழித்து உற்று நோக்கவும். துணியில் இருந்த ஈரம் எங்கு சென்றது?


நீரானது சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகி வளிமண்டலத்திற்குள் சென்றது.

ஆவியாதல் : கடல்கள், குளங்கள் மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படும் நீரானது சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகிறது.

ஆவி சுருங்குதல் : வளிமண்டலத்தில் ஆவியாதலின் காரணமாக நுழைந்த நீராவியானது காற்றில் மேலே செல்லச்செல்ல குளிர்ச்சியடைந்து மிக நுண்ணிய நீர்திவலைகளாக மாறி மேகங்களை வானில் உருவாக்குகின்றன.

மழைபொழிதல் : இலட்சக்கணக்கான மிக நுண்ணிய நீர்திவலைகள் ஒன்றோடொன்று நீர்திவலைகளாக மோதி பெரிய மாறுகின்றன. மேகங்களைச் சுற்றியுள்ள காற்றானது குளிர்ச்சியடையும்போது இந்த நீர் மழையாகவோ அல்லது பனியாகவோ புவியை வந்தடைகின்றது.


நீங்கள் நீராவிப்போக்கு என்பதனைப்பற்றி அறிந்திருக்கிறீர்களா?

தாவரங்களின் இலைத்துளைகள் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும்.

நீர் சுழற்சியின் காரணமாக இயற்கையில் எப்பொழுதும் நீர் மூன்று நிலைகளிலும் காணப்படுகிறது. ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் உள்ள நீரானது ஆவியாகி நீராவியினை உருவாக்குகின்றது. மழைநீரானது நீரின் திரவ வடிவமாகும். மலைச்சிகரங்களிலும், துருவங்களிலும் காணப்படும் பனிப்படிவுகள் மற்றும் பனிப்பாறைகளிலும் நீர் திண்ம வடிவில் காணப்படுகிறது.

இவ்வுலகம் முழுவதும் நீரினைப் பயன்படுத்தினாலும் நீரின் இம்மூன்று நிலைகளும் புவியில் காணப்படும் நீரின் அளவினை மாற்ற இயலாவண்ணம் நிலையாக வைத்துள்ளன.

நமது வளிமண்டலத்தில் நீராவி இருப்பதை நாம் எவ்வாறு அறியலாம்? பின்வரும் சோதனையினைச் செய்வோம்.

 

செயல்பாடு 5 : நீராவி நீராக மாறுதல்

ஒரு குவளையில் பாதியளவு நீரை எடுத்துக் கொள்ளவும். குவளையின் வெளிப்பகுதியினை ஒரு தூயதுணியினால் துடைக்கவும். நீரில் சிறிது பனிக் கட்டிகளைப் போடவும். ஓரிரு நிமிடங்கள் பொறுத்திருக்கவும். குவளையின் வெளிப்பகுதியினை உற்று நோக்கவும்.

குவளையின் வெளிப்பகுதியில் நீர்திவலைகள் எங்கிருந்து வந்தன?

பனிக்கட்டிகளைக் கொண்ட நீரின் குளிர்ந்த பகுதியானது அதனைச் சுற்றியுள்ள காற்றினை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் உருவாக்கியுள்ளது. நீர்திவலைகளை இதன் மூலம் வளிமண்டலத்தில் நீராவி உள்ளதனை நாம் அறியலாம்


6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்