Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் : பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

VIII. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.

• தமிழ்நாட்டில் பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

• முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 .கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பிற பீடபூமிகள்:

பாரமஹால் பீடபூமி:

• தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.

• இதன் உயரம் 350 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை.

• இப்பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.

கோயம்புத்தூர் பீடபூமி

• இப்பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

• இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை.

• மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியிலுருந்து பிரிக்கிறது.

மலையிடைப் பீடபூமி:

• நீலகிரிப் பகுதிகளில் பல மலையிடப் பீடபூமிகள் உள்ளன. அவற்றுள் சிகூர் பீடபூமியும் ஒன்றாகும்.

• மேற்கு தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பல பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளது.

 

2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.

• தஞ்சைத் தரணியின் தாகம் தீர்க்கும் ஆறாக காவிரி விளங்குகிறது

• இக்காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் உள்ள தலைக்காவிரி எனும் இடத்தில் உற்பத்தியாகிறது.

• நம் தமிழ்நாட்டில் 416 கி.மீ நீளத்திற்கு பாய்கின்றது.

• தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனேக்கல் என்னும் இடத்தின் நீர் வீழ்ச்சியாக உள்ளே நுழைந்து மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் வந்து சேர்கின்றது.

• இதன் துணையாறுகள் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளாகும்.

• மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து சமவெளிப் பகுதிக்குள் நுழைகின்றது.

• கரூர் அருகே இருக்கும் திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலது கரையில் இதன்  துணை ஆறுகள் அமராவதி, நொய்யல் இணைகின்றன.

• இந்த இடம் அகலமாக இருப்பதால் இது அகன்ற காவிரி எனப்படுகிறது.

• திருச்சிராப்பள்ளி அருகே இரண்டு கிளைகளாகப் பிரிந்து வடகிளை கொள்ளிடம் என்றும், தென்கிளை காவிரியாக தொடர்கின்றது.

• பின்னர் 16 கி.மீ சென்று இணைந்து ஒரு ஸ்ரீரங்கம் எனும் தீவை உருவாக்குகின்றது.

• அடுத்து இதன் குறுக்கே 'கிராண்ட் அணைக்கட்' என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

• பின்னர் காவிரி பல கிளைகளாகப் பிரிந்து தஞ்சாவூர் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல டெல்டாக்களை உருவாக்கி நெல் விளையும் பூமியாக உருமாறி 'தென்னிந்தியாவின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

• இறுதியாக கடலூருக்கு தெற்கே வங்கக் கடலில் கலக்கிறது.

 

3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்.

கோடை காலப் பண்புகள்:

• சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு, மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகின்றது.

• அவ்வாறு விழும்போது பூமத்திய ரேகையிலிருந்து வெப்ப நிலையானது படிப்படியாக அதிகரிக்கின்றது.

• ஆதலால் தமிழகம் கடகரேகைக்கு தென் பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.

• இந்த வெப்பநிலை 30° C லிருந்து 40° C வரை மாறுகின்றது.

• இப்பருவ காலத்தில் குறிப்பாக மே மாதம் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவ மழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகின்றது.

குளிர் காலப் பண்புகள்:

• ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே விழுகிறது.

• இக்காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் சாய்வான  சூரியக்கதிர்களை பெறுகின்றன.

• எனவே இக்காலங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகின்றது.

• தமிழக குளிர்கால வெப்பநிலை 15° C முதல் 25° C வரை மாறுபடுகிறது.

• நீலகிரியின் சில பள்ளத்தாக்கில் வெப்பம் 0° C ஆகவும் பதிவாகிறது.

• பொதுவாக இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.

 

4. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின் பரவல் விளக்குக.

தமிழ்நாட்டில் காணப்படும் மண்வகைகளை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். அவை. 1. வண்டல் மண் 2. கரிசல் மண் 3. செம்மண் 4. சரளை மண் மற்றும் 5. உவர் மண்.

வண்டல் மண்:

• வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன.

• தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

• சில உள் மாவட்டங்களின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிறிய அளவில் இவை காணப்படுகிறது.

கரிசல் மண்:

• தீப்பாறைகள் சிதைவடைவதன்மூலம் கரிசல் மண் உருவாகிறது. இது ரீகர் மண் என்றும் அழைக்கப்படுகிறது.

• இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது

• கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.

செம்மண்:

• தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.

• மாநிலத்தின் மத்திய மாவட்டங்களிலும், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலும் அதிகம் காணப்படுகின்றது.

சரளை மண்:

• சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இவை ஒரு வளமற்ற மண்ணாகும்.

• காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகிறது.

உவர் மண்:

• தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.

• வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர் மண் காணப்படுகிறது.

• டிசம்பர் 26, 2004இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.

• இதனால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.

 

5. புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.

அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள்

புயலுக்கு முன்னர்:

• வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல்.

• அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதிசெய்துகுறுஞ்செய்திகளைப் பெறுதல்.

• வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளல்.

• குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும், சரி செய்வதையும் உறுதிசெய்தல்.

• கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும்.

புயலுக்குப் பின்னர்

• புயல் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டால் மறு அறிவுரைகள் வரும் வரை அங்கேயே தங்கி இருத்தல் வேண்டும்.

• புயலுக்குப்பின் மின்சார கம்பிகளைத் தொடுவதையும், மின்சாரத்தை பயன்படுத்துவதையும் அறவே தவிர்த்தல் வேண்டும்.

• புயலுக்குப்பின் பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

• கட்டடங்களுக்கு அருகில் உள்ள கழிவுகளையும், விலங்குகளின் இறந்த உடல்களையும், அப்புறப்படுத்த வேண்டும்.

• இழப்பின் உண்மையான மதிப்பினையும், அளவினையும் உரிய  அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

 

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்