Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | உணவின் ஊட்டச்சத்துக்கள்

உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உணவின் ஊட்டச்சத்துக்கள் | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

உணவின் ஊட்டச்சத்துக்கள்

நமக்கு ஆற்றலைத் தருகின்ற, உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய வேதியியல் கூறுகள் உணவில் காணப்படுகின்றன. 1. கார்போஹைட்ரேட்டுகள் 2. புரதங்கள் 3. கொழுப்புகள் 4. வைட்டமின்கள் 5. தாது உப்புக்கள் 6. நீர்

உணவின் ஊட்டச்சத்துக்கள்

நமக்கு ஆற்றலைத் தருகின்ற, உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய வேதியியல் கூறுகள் உணவில் காணப்படுகின்றன. அவையே, ஊட்டச்சத்துகள் எனப்படுகின்றன. முக்கிய ஊட்டச்சத்துகள் ஆறு வகைப்படும்,

அவையாவன:

1. கார்போஹைட்ரேட்டுகள் 

2. புரதங்கள் 

3. கொழுப்புகள் 

4. வைட்டமின்கள் 

5. தாது உப்புக்கள் 

6. நீர்


 

1. கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச் சத்து)

கார்போஹைட்ரேட்டுக்கள் ஆற்றல் தரும் உணவுக்கூறுகள் ஆகும்.


கார்போஹைட்ரேட்டுக்களை சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் நார்ச் சத்து ஆகிய வடிவில் நாம் பெறுகிறோம்.


 

செயல்பாடு 3

நோக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள உணவில் ஸ்டார்ச் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளதாஎன சோதனை மூலம் அறிதல்.

உனக்கு என்ன தேவை?

வேக வைத்த உருளைக் கிழங்கு, சொட்டுக் குழாய், நீர்த்த அயோடின் கரைசல்.

எப்படி செய்வாய்?

வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக் கிழங்கின் மீது இரண்டு அல்லது மூன்று துளிகள் நீர்த்த அயோடின் கரைசலைச் சேர்க்கவும்.

நீ என்ன பார்க்கிறாய்?

உருளைக் கிழங்கு கருநீல நிறமாக மாறுகிறது.

நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?

அயோடின், ஸ்டார்ச்சுடன் வினைபுரிந்து ஸ்டார்ச் அயோடின் கூட்டுப் பொருளாக, அதாவது நீலம் கலந்த கருப்பு நிறமாக மாறுகிறது, இந்த கருநீல நிற உருவாக்கம் உணவில் ஸ்டார்ச் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.


 

2. கொழுப்புகள்

கொழுப்புஎன்பதும்ஆற்றல்தரும்ஓர் உணவு ஆகும். இது கார்போஹைட்ரேட்டைவிட அதிக ஆற்றலைத் தரக்கூடியது. வெண்ணெய், நெய், பால், பாலாடைக் கட்டி, பன்னீர், கொட்டைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவை கொழுப்புச் சத்து உள்ள சில முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும். இவை நமது உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, உடலைப் பாதுகாத்து உடல் செல்களையும் பாதுகாக்கின்றன.


 

செயல்பாடு 4

நோக்கம்

கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருளில் கொழுப்பு உள்ளதா என சோதனை மூலம் அறிதல்.

உனக்கு என்ன தேவை?

தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் மற்றும் ஏதாவது ஒரு காகிதம்.

எப்படிச் செய்வாய்?

தாளின் மேல் சிலதுளி தேங்காய் எண்ணெய்யை விடவும். பின்பு உனது விரலால் மெதுவாகத் தேய்க்கவும்.

நிலக்கடலையாக இருந்தால், அதை உடைத்து காகிதத்தின் மேல் தேய்க்கவும்.

என்ன பார்க்கிறாய்?

அந்தக் காகிதம் பிசுபிசுப்பாகவும், மறுபுறம் மங்கலாகத் தெரிவதாகவும் மாறுகிறது.

நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?

கொடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரி, கொழுப்பைக் கொண்டுள்ளது.

 

3. புரதங்கள்

உடல் வளர்ச்சி, செல்களைப் புதுப்பித்தல் மற்றும் செரிமானம் போன்ற பல்வேறுவிதமான உடற்செயல்களுக்கும் புரதங்கள் மிகவும் அவசியம். முட்டை, மீன், பால், கோழி, இறைச்சி, சோயாபீன்ஸ், கொட்டைகள், பருப்புக்கள் போன்றவற்றில் புரதச்சத்து உள்ளது. புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் ஆகும்.


அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.

 

செயல்பாடு 5

நோக்கம்

கொடுக்கப்பட்ட உணவில் புரதம் உள்ளதா என்று சோதித்து அறிதல்.

உனக்கு என்ன தேவை?

முட்டையின் வெள்ளைக் கரு, தாமிர சல்பேட் கரைசல், சோடியம் ஹைட்ராக்சைடு, சோதனைக் குழாய், புன்சன் அடுப்பு.

எப்படி செய்வது?

உணவு மாதிரியை சிறிதளவு (முட்டையின் வெள்ளைக் கரு) எடுத்து சோதனைக் குழாயில் போடவும்.

சோதனைக் குழாயில் சிறிதளவு நீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்ததாக சோதனைக் குழாயை சுமார் ஒரு நிமிடம் சூடுபடுத்தவும்.

சோதனைக் குழாய் குளிர்ந்தவுடன் இரண்டு துளிகள் தாமிர சல்பேட் கரைசலையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் சேர்க்கவும்.

நீ என்ன காண்கின்றாய்?

கொடுக்கப்பட்ட உணவு மாதிரி ஊதா நிறமாக மாறுகிறது.

நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?

கொடுக்கப்பட்ட உணவு மாதிரி ஊதா நிறமாக மாறுவது, அதில் புரதம் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.

 

4. வைட்டமின்கள்

உடலில் நடைபெறும் பல்வேறுபட்டஉயிர் வேதிவினைகளுக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. A, B, C, D, E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன. இவற்றுள் வைட்டமின் B மற்றும் வைட்டமின் C இரண்டும் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும். வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.



நெல்லிக்கனிகளில் ஆரஞ்சுப் பழங்களைவிட 20 மடங்கு, அதிக வைட்டமின் C காணப்படுகிறது.


 

சற்று யோசியுங்கள்

ஒரு பள்ளியில் மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தனர். ஒருசில மாணவர்களுக்கு உடல் நலக்குறைபாடு இருந்தது.

பிரியாவுக்கு பல் ஈறுகளில் இரத்தக் கசிவு இருந்தது.

ராஜாவால் குறைந்த ஒளியில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அருணின் கால்கள் வளைந்திருந்தன. இவற்றிற்கு என்ன காரணம் என்று உன்னால் யூகிக்க முடிகிறதா?

உண்மைக் கோப்பு

சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் களிம்புகள் (Sun Screen Lotion) தோலின் வைட்டமின் D உற்பத்தியை 95% குறைக்கிறது. எனவே, வைட்டமின் D குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.


செயல்பாடு 6

உங்கள் உணவை சத்துள்ளதாக மாற்றுங்கள்.

உனக்கு என்ன தேவை?

பாசிப்பயிறு, நீர், மெல்லிய வடிகட்டும் துணி.

எப்படி செய்வாய்?

பாசிப்பயிரை இரவு முழுவதும் நீரில் ஊரவைக்கவும்.

நீரை வடிகட்டி பாசிப்பயிரை எடுக்கவும். ஈரமான, லேசான துணியில் பாசிப்பயிரை வைத்துக் கட்டவும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.

துணி காயும் போது தண்ணீர் தெளிக்கவும்.

நீ என்ன பார்க்கிறாய்?

பாசிப் பயிறிலிருந்து வெள்ளைநிற முளைக் குருத்துகள் வருவதைப் பார்க்கலாம்.

நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?

முளைகட்டிய பாசிப்பயிரில் குறைந்த கலோரி உள்ளது. இதில் நார்ச்சத்தும், வைட்டமின் B யும் உள்ளன. இதில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவை உள்ளன. 

 

5. தாது உப்புகள்

தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும், உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவைப்படுகின்றன. கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை, பால், மீன் மற்றும் பழங்கள் போன்றவை தாதுஉப்புக்கள் நிறைந்த முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும். தாது உப்புகளும் பாதுகாப்பு உணவுகள் ஆகும்.


உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி இந்தியாவில்தான் உள்ளது. முருங்கைக் கீரையை சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

 

உண்மைக் கோப்பு

முருங்கைக் கீரையில்:

வைட்டமின் A

வைட்டமின் C

பொட்டாசியம்

கால்சியம்

இரும்புச் சத்து மற்றும்

புரதம்

ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் (Antioxidants) உள்ளது.


 

6. நீர்

நமது உடலை நலமுடன் பேணுவதற்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. நாம் தினந்தோறும் குறைந்தது 8 டம்ளர்கள் (2 லிட்டர்கள்) நீர் பருக வேண்டும்.


6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்