Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | அணுக்கருவின் கட்டமைப்பு

12 வது இயற்பியல் :அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

அணுக்கருவின் கட்டமைப்பு

அணுக்கரு ஒன்றிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் எனப்படும்- அதை Z என்ற குறியீட்டினால் அறியலாம். அணுக்கரு ஒன்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை N என்று குறிக்கப்படுகிறது. அணுக்கருவில் காணப்படும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண் எனப்படும். அது A என்று குறிக்கப்படுகிறது. எனவே, A = Z+N

அணுக்கருவின் கட்டமைப்பு

அணுவானது தன்னுள்ளே அணுக்கருவையும் அதனைச்சுற்றி எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளது. அணுக்கரு புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது. நியூட்ரான்கள் மின் நடுநிலைத் தன்மை கொண்டவை (q= 0); புரோட்டான்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை (q=+e) அவற்றின் மின்னூட்ட மதிப்பு எலக்ட்ரான்களின் மின்னூட்ட மதிப்புக்குச் (q=-e) சமமாக இருக்கும். அணுக்கரு ஒன்றிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் எனப்படும்- அதை Z என்ற குறியீட்டினால் அறியலாம். அணுக்கரு ஒன்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை N என்று குறிக்கப்படுகிறது. அணுக்கருவில் காணப்படும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண் எனப்படும். அது A என்று குறிக்கப்படுகிறது. எனவே, A = Z+N

அணுக்கருவின் இரண்டு கூறுகள், நியூட்ரான் மற்றும் புரோட்டான்கள், நியூக்ளியான்கள் எனும் பொதுப்பெயரினால் அழைக்கப்படுகின்றன. ஒரு புரோட்டானின் நிறை 1.6726x10-27 kg ஆகும். இது எலக்ட்ரானின் நிறையைப் போல் ஏறத்தாழ 1836 மடங்காகும். நியூட்ரானின் நிறை புரோட்டானின் நிறையை விட சற்றே அதிகமானது. அதாவது அதன் நிறை 1.6749x10-27 kg.

ஒரு தனிமத்தின் அணுக்கருவை குறிப்பதற்கு பின்வரும் குறிமுறையைப் பயன்படுத்துகிறோம்.

இங்கு X என்பது தனிமத்தின் வேதிக் குறியீடு, A என்பது நிறை எண் மற்றும் Z என்பது அணு எண். எடுத்துக்காட்டாக நைட்ரஜன் அணுக்கரு 157N என்று குறிப்பிடப்படுகிறது. இது நைட்ரஜன் அணுக்கருவில் 15 நியூக்ளியான்கள் உள்ளன என்பதை உணர்த்துகிறது. இதில் 7 புரோட்டான்கள் (Z = 7) மற்றும் 8 நியூட்ரான்கள் (N= A-Z = 8) உள்ளன. சில தருணங்களில், Z-ன் மதிப்பு தெரிந்த தனிமத்திற்கு கீழ் இலக்கம் Z ஆனது எழுதப்படாமல் தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக நைட்ரஜன் அணுக்கருவை 15N (நைட்ரஜன் பதினைந்து என்று கூற வேண்டும்) என்று கூறினால் போதுமானது.

அணுக்கருவில் நேர் மின்னூட்டம் உடைய புரோட்டான்களும் மின் நடுநிலைத் தன்மையுடைய நியூட்ரான்களும் உள்ளதால், அதன் நிகர மின்னூட்டம் நேர்க்குறி கொண்டது மற்றும் அதன் மின்னூட்ட மதிப்பு +Ze ஆகும். ஆனால், அணுவானது மின் நடுநிலைத் தன்மையுடையது. ஆதலால் அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணுக்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும்.
12 வது இயற்பியல் :அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்