அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விசை | 8th Science : Chapter 2 : Force and Pressure

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

விசை

கதவைத் திறத்தல், கால்பந்தை உதைத்தல், கேரம் விளையாட்டில் நாணயங்களைச் சுண்டுதல் போன்ற பல்வேறு செயல்களை நம் அன்றாட வாழ்வில் நாம் செய்கிறோம். இவற்றைப் போன்ற செயல்களைச் செய்வதற்கு ஒரு புறக்காரணி ஒன்று தேவைப்படுகிறது.

விசை

கதவைத் திறத்தல், கால்பந்தை உதைத்தல், கேரம் விளையாட்டில் நாணயங்களைச் சுண்டுதல் போன்ற பல்வேறு செயல்களை நம் அன்றாட வாழ்வில் நாம் செய்கிறோம். இவற்றைப் போன்ற செயல்களைச் செய்வதற்கு ஒரு புறக்காரணி ஒன்று தேவைப்படுகிறது. இந்தப் புறக்காரணியே விசை எனப்படும். விசையானது இயக்கத்திலுள்ள பொருளை ஓய்வு நிலைக்கோ அல்லது ஓய்வு நிலையிலுள்ள பொருளை இயக்கத்திற்கோ கொண்டு வர முடியும். ஒருசில பொருள்களின் உருவம் மற்றும் வடிவங்களையும் அதனால் மாற்ற முடியும்.

ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கநிலையை அல்லது இயங்கும் பொருளின் திசையை அல்லது பொருளின் வடிவத்தை மாற்றக்கூடிய புறக்காரணியே விசை என வரையறுக்கப்படுகிறது. எண்மதிப்பும், திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு வெக்டர் அளவு ஆகும். இது நியூட்டன் (N) என்ற அலகால் அளக்கப்படுகிறது.

 

1. விசையின் விளைவுகள்

ஒரு கிரிக்கெட் மட்டையாளர் பந்தை எதிர் கொள்வதை உற்றுநோக்குங்கள். கிரிக்கெட் பந்தை எல்லைக்கோட்டிற்குச் செலுத்தவேண்டுமெனில் அவர் பந்தின் மீது அதிக விசையைச் செயல்படுத்த வேண்டும். எனவே, ஒரு பொருளின்மீது செலுத்தப்படும் விசையின் அளவைப் பொருத்து அதன் விளைவும் இருக்கும்.

செயல்பாடு 1

ஒரு மரப்பலகையின் மீது கூர்மையான ஊசிகளை குறுக்கும் நெடுக்குமாக வரிசையாக அடுக்கி வைக்கவும். ஒரு பலூனில் காற்றை நிரப்பவும். ஊசிகளின் மேல் பலூனை வைத்து மெதுவாக அதன் மீது ஒரு சிறிய புத்தகத்தை வைக்கவும். பலூன் வெடிக்குமா? ஊசிகள் பலூனை வெடிக்கச் செய்யுமா?


ஒரே ஒரு ஊசியைக் கொண்டு பலூனின் மீது அழுத்தினாலே அது வெடித்துவிடும். ஆனால், இங்கு பல ஊசிகள் அழுத்தினாலும் அது வெடிக்கவில்லை. ஒரே ஒரு ஊசியானது சிறிய பரப்பின்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பல ஊசிகள் சேர்ந்து அதிக பரப்பில் குறைவான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இங்கு செயல்படுத்தப்படும் விசையானது அதிகமான புறப்பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுவதால் பலூன் வெடிப்பதில்லை.

இதன் மூலம், விசையின் விளைவானது அதன் எண் மதிப்பையும், அது செயல்படும் பரப்பையும் சார்ந்தது என்பது தெளிவாகிறது. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை உந்து விசை எனப்படும். இது நியூட்டன் என்ற அலகினால் அளவிடப்படுகிறது.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்