Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கற்கண்டு

அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி


தேனிசை அடடே, செல்வியா? வா! வா! வா! எப்படி இருக்கிறாய்?

செல்வி (கலகலவென நகைத்தவாறே) ! நன்றாக இருக்கிறேன். அத்தை எங்கே?

தேனிசை அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

(அப்போது தடதட வென அங்கே ஓடி வருகிறான் தேனிசையின் தம்பி மதியழகன்)

செல்வி மதி, ஏன் இப்படி படபடவென மூச்சு இரைக்க ஓடி வருகிறாய்? என்ன ஆயிற்று?

மதியழகன் அக்கா, அங்கே பாம்பு, பாம்பு......

தேனிசை மதி, விளையாடதே, அன்றும் இப்படித்தான் தீ, தீ, தீ என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்தாய். ஆனால், அப்படி எதுவும் இல்லை. போ, போ, போ இப்படியெல்லாம் பொய் சொல்லாதே.

மதியழகன் அக்கா, உண்மையாகத்தான் சொல்கிறேன். நீங்களே வந்து பாருங்கள்.

செல்வி தேனிசை, தம்பி திரும்பத் திரும்பச் சொல்வதைப் பார்த்தால் பொய் சொல்வதுபோல் தெரியவில்லையே, வா, வா, போய்ப் பார்க்கலாம்.

(அவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, அருகிலிருந்த மரத்தின்மீது பாம்பொன்று சரசரவென ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் உடல் பளபளவென வெயிலில் மின்னியது),

மேற்கண்ட உரையாடலில் சில சொற்கள் தடித்த எழுத்துகளில் உள்ளன. அவை என்னவென்று அறிந்துகொள்வோமா?

சில சொற்கள் எப்போதும் இரண்டாகவே வரும். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தால் பொருள் தரா. உரையாடலில் கலகல, தடதட, படபட, பளபள என வரும் சொற்கள். கலகல என்பதைக் கல எனத் தனியாகப் பிரித்தால் பொருள் இல்லை. அதனால், இம்மாதிரியான சொற்கள் எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வரும். ஆகவே, இவற்றை இரட்டைக்கிளவி என்பர்.

இரட்டை என்பது, இரண்டு. கிளவி என்பது, சொல். இரட்டைக் கிளவி ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, சினக்குறிப்பு போன்ற பலவகைக் குறிப்புகளை உணர்த்தும்,

சில சொற்கள் இரண்டாகவோ மூன்றாகவோ ஏன் நான்காகவோ அடுக்கி வரலாம். ஆனால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். உரையாடலில் வா வா வா, பாம்பு பாம்பு, தீ தீ தீ, போ போ போ, திரும்பத் திரும்ப போன்ற சொற்கள் வந்துள்ளன. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும். இவற்றை அடுக்குத்தொடர் என்பர்.

வா, வா, வா என மூன்றுமுறை அடுக்கிவரும் சொல்லை வா எனத் தனியே பிரித்தாலும் அஃது ஓரெழுத்து ஒருமொழியாய் வருகையைக் குறிக்கிறது. அடுக்குத்தொடர் அசைநிலை, விரைவு, வெகுளி, அச்சம், உவகை, அவலம், இசைநிறை முதலிய பொருள்களைக் குறித்து வரும்.

எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது, இரட்டைக்கிளவி.

ஒரு சொல்லே இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வருவது, அடுக்குத்தொடர்.

இரட்டைக்கிளவி

இரட்டைச் சொல்லாக வரும்

தனித்தனியே பிரித்தால் பொருள் தராது

இரண்டு முறைக்குமேல் அடுக்கி வராது

அடுக்குத்தொடர்

ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்.

தனித்தனியே பிரித்தாலும் பொருள் தரும்.

இரண்டுமுறைக்குமேல் அடுக்கி வரும்.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்