Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார் | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

பாடல்

தொழில் / வணிகம்

 

கற்றல் நோக்கங்கள்

உழைப்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல்

உழவுத்தொழிலே உலகத்தின் அச்சாணி எனப் புரிந்துகொள்ளுதல்

இயற்கை வேளாண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

செய்யும் தொழிலில் நேர்மையின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல்

அடுக்குத் தொடர்களையும் இரட்டைக் கிளவிகளையும் இடமறிந்து பயன்படுத்துதல்

 

உழவுப் பொங்கல்

பொங்குக பொங்கல் பொங்குகவே

புதுவனம் நிறைந்தரம் தங்குகவே

எங்கணும் யாவரும் இன்பமுற

ஏர்த்தொழில் ஒன்றே தெம்புதரும்

 

உணவுப் பொருள்கள் இல்லாமல்

உயிரோ டிருப்பது செல்லாது

பணமும் அதுதரும் நலனெல்லாம்

பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்

 

உழவுத் தொழில்தான் உணவுதரும்

உடையும் அதனால் அணியவரும்

பழகும் மற்றுள தொழில்யாவும்

பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்

 

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்

தானியம் ஒன்றே விருந்தாகும்

இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்

ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்

 

உழவே செல்வம் உண்டுபண்ணும்

உழைப்பே இன்பம் கொண்டுவரும்

உழவைத் தொழுதிட வருநாளே

உற்றஇப் பொங்கல் திருநாளாம்

 

ஏழையும் செல்வரும் இங்கிதமாய்

இசைந்துளம் களித்திடும் பொங்கலிது

வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி

வையகம் முழுதும் வாழியவே

- நாமக்கல் வெ. இராமலிங்கனார்

 

சொல்பொருள்

எங்கணும் எங்கும்

களித்து - மகிழ்ந்து

ஏர்த்தொழில் உழவுத்தொழில்

இசைந்து ஏற்றுக்கொண்டு

விழலாகும் - வீணாகும்

வையகம் உலகம்

பாடல் பொருள்

உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது. உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது. எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே. உணவுப்பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது. பயிர்கள்விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும். தங்கம், வெள்ளிபோன்றவற்றை நாம் உண்ணமுடியாது. உணவுப்பயிர்களேநமக்கு உணவாக அமையும். இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும். பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.

 

நூல் குறிப்பு

உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர், நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது. இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும். 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்றும் 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை. இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்