Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: நால்வகைக் குறுக்கங்கள்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: நால்வகைக் குறுக்கங்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

இலக்கணம்: நால்வகைக் குறுக்கங்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : இலக்கணம்: நால்வகைக் குறுக்கங்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கற்கண்டு 

நால்வகைக் குறுக்கங்கள்


ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

ஐகாரக்குறுக்கம்

ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஔகாரக்குறுக்கம்

ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஒளவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஒளகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

மகரக்குறுக்கம்

அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர். இச்சொற்களில் மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக் குறுக்கம்:

அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.


7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு