தாவர உலகம் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வாழிடம் | 6th Science : Term 1 Unit 4 : The Living World of Plants

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்

வாழிடம்

1. வாழிடத்தின் வகைகள் 2. தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்

மேலும் தெரிந்து கொள்ளுதல்


எதன் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்துகிறோம்?

1. பூவின் அடிப்படையில், தாவரங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை; பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள் ஆகும்.


2 விதை அமைந்திருக்கும் அடிப்படையில் தாவரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதைத் தாவரங்கள் விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள் - விதைகள் கனிகளில் புதைந்திருக்காது).



செயல்பாடு 3

ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவின் தலைவனாக உள்ள மாணவன்/மாணவி ஆசிரியரிடமிருந்து வேர், தண்டு, இலை மற்றும் பூக்கள் என எழுதப்பட்ட ஒரு காகிதத்துண்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆசிரியர் மாணவர்களை பள்ளி வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஒவ்வொரு குழுவும் தேர்வு செய்த தாவர பாகத்தைச் சேகரிக்க செய்யவேண்டும். மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தபின்னர் தன் குழு மாணவர்களோடு சேர்ந்து சேகரித்துவந்த வேர், தண்டு மற்றும் இலைகளைப் பற்றி கலந்துரையாடி ஒரு படத்தொகுப்பைத் தயாரிக்கவேண்டும். உதாரணமாக, மலரைத் தேர்வு செய்த குழுவினர் மலரின் பல்வேறு பாகங்களை உற்று நோக்கி படத்தொகுப்பைத் தயாரிக்கவும். இவ்வாறு ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் தயாரித்த படங்களை பிற பகிரவேண்டும்.

 

வாழிடம்


செயல்பாடு 4

இந்தக் கதையை உன் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கவும்

நான் ஒரு குரங்கு. ஒரு அழகான அடர்த்தியான காட்டில் என் அம்மா மற்றும் இரு சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் மரத்திற்கு மரம் தாவி, ஓடி விளையாடி மகிழ்ந்தோம். ஒருநாள் ஒரு மரத்தின் கீழே நான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன். அப்படியே உறங்கி விட்டேன். திடீரென்று சூரிய ஒளிபட்டு நான் எழுந்தேன். நான் கண்விழித்துப் பார்த்தபோது நான் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை. எல்லாமே மாறி இருந்தது. எல்லாமே அழிக்கப்பட்டிருந்தன. மரங்கள் இருந்த இடமெல்லாம் மரக்கட்டைகளாக இருந்ததை நான் பார்த்தேன். உலர்ந்த தரை, தெருக்கள் மற்றும் கட்டிடங்கள் வேறொன்றுமில்லை. அப்போது அங்கு சோகமாக நின்றிருந்த ஒரு மானைப் பார்த்தேன். "இங்கு இருந்த மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு என்ன நடந்தது?", என்று கேட்டேன். மனிதர்கள் அனைத்து மரங்களையும் வெட்டி விட்டதையும், அவற்றிற்குப் பதிலாக வேறு மரங்களை நடாததையும் மான் எனக்கு விளக்கிக் கூறியது. பின்னர், சென்று வருகிறேன் என மானிடம் கூறிவிட்டு நான் வந்துவிட்டேன். என் வீடு போய்விட்டது. என் குடும்பம் எங்கே எனத் தெரியாது. இரவும், பகலும் பசியிலும் தாகத்திலும் இருந்தேன். உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்திற்காக அலைந்தேன். நான் சென்ற இடமெல்லாம் மனிதர்கள் குச்சியைக் கொண்டும், கடுமையான வார்த்தைகளாலும் என்னை விரட்டினார்கள். எனது உடல் சோர்ந்து போனதை என்னால் உணர முடிந்தது. ஒருநாள் எனது நம்பிக்கையை இழந்து குளிர்ந்த, இருண்ட காட்டிற்குள் நான் நுழைந்தேன். அங்கு வந்தபோது ஏராளமான உணவு மற்றும் நீரைக் கண்டேன். காடு எனக்கு பாதுகாப்பாக இருந்தது. அங்கு மனிதர்கள் இடையூறு இல்லை.

மான் ஏன் வருத்தமாக இருந்தது?

மரத்தை வெட்டியது யார்?

குரங்கு வசிப்பதற்கு பாதுகாப்பான இடம் எது?


வாழிடம் என்றால் என்ன? ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடமே அதன் வாழிடம் ஆகும். கடலின் அடி மட்டத்தில் இருந்து, மலையின் உச்சி வரை தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படும் இடம் அவற்றின் வாழிடங்களாக உள்ளன.




1. வாழிடத்தின் வகைகள்

வாழிடங்களின் இரண்டு முக்கிய வகைகளை நாம் இப்போது படித்தறிவோம்


1. நீர் வாழிடம்

நாம் குளத்திற்குச் சென்று பார்வையிடும்போது சில தாவரங்கள் பார்க்கலாம். தாமரை நீரில் மிதந்து கொண்டிருப்பதைப் அப்படிப்பட்ட ஒரு தாவரம். அதன் இலைகள் நீரில் மிதந்துகொண்டிருக்கும். அதன் மீது ஒரு தவளை அமர்ந்திருக்கும். அது தாமரை மலரைச் சுற்றி அங்குமிங்கும் பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க தயார் நிலையில் இருக்கும். தாமரையின் தண்டானது நீரில் மூழ்கியும் அதன் வேர்கள் சேற்றில் புதைந்தும் காணப்படும். இது நீரில் காணப்படுவதால் இதனை நீர்வாழ்த் தாவரம் என அழைக்கலாமா?.


நீர்வாழிடம் என்பது நிரந்தரமாக நீர் சூழ்ந்த பகுதியையும், அவ்வப்போது நீர் சூழ்ந்த பகுதியையும் உள்ளடக்கியது. வாழிடங்கள் இருவகைப்படும். அவை நன்னீர் வாழிடம் மற்றும் கடல் நீர் வாழிடம்.


 

அ. நன்னீர் வாழிடம்

ஆறுகள், குளங்கள், குட்டைகள், மற்றும் ஏரிகள் இவையாவும் நன்னீர் வாழிடங்கள் ஆகும். ஆகாயத் தாமரை, அல்லி மற்றும் தாமரை ஆகியவை நன்னீரில் காணப்படும் தாவரங்களாகும். நீர்த்தாவரங்களின் வேர்கள் வளர்ச்சி குன்றியவை. தண்டிலும், இலைப் பகுதிகளிலும் காற்றறைகள் அதிகமாக இருப்பதால் இவை நீரில் எளிதில் மிதக்கின்றன.


தாமரையின் இலைக் காம்பில் உள்ள காற்று இடைவெளிகள் (Air Spaces)அவை நீரில் மிதக்க உதவுகின்றன.



ஆ. கடல் நீர் வாழிடம்

வானிலிருந்து பார்க்கும்போது பூமியானது நீலநிற பளிங்கு போலத் தோன்றும். ஏனெனில், அதன் மேற்பரப்பானது 70 சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. தாவரங்கள் கடல் நீரிலும் வாழ்கின்றன. பூமியின் மொத்த ஒளிச்சேர்க்கையில் சுமார் 40% கடல்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது.


உதாரணம்: கடல் பாசிகள், கடல் புற்கள், சதுப்பு நிலப்புற்கள் மற்றும் தாவர மிதவைகள் (தனித்து நீரில் மிதக்கும் பாசிகள்)

உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகும். இது 8,650 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இதன் நீளம் 2,525 கி.மீ.

 

2. நில வாழிடம்

காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள்  ஆகிய நிலப்பரப்புகளில் காணப்படும் வாழிடங்கள் நில வாழிடங்கள் எனப்படும். பண்ணைகள், நகரங்கள், ஆகிய மனிதர்களால் மாநகரங்கள் உருவாக்கப்பட்ட வாழிடங்களும் நில வாழிடங்களாகும். நில வாழிடங்கள் ஒரு கண்டத்தின் அளவிற்கு பெரியதாகவோ அல்லது தீவின் அளவிற்கு சிறியதாகவோ இருக்கலாம். உலகில் 28% நில வாழிடங்கள் உள்ளன.


உதாரணம்: பசுமைமாறாக் காடுகள், முட்புதர் காடுகள்.

நிலவாழிடங்கள் மூன்று வகைப்படும். அவை:

அ. காடுகள்

ஆ. புல்வெளிகள்,

இ. பாலைவனங்கள்.

 

470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ்த் தாவரங்கள், மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும். தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மலைக் காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில்பாதியை உற்பத்திசெய்கின்றன.

 

அ. காடுகள்

காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமான மரங்களைக் கொண்டுள்ளன. இவற்றை வெப்ப மண்டலக் காடுகள், குளிர் பிரதேசக் காடுகள் மற்றும் மலைக் காடுகள் என வகைப்படுத்தலாம். இங்கு ஆண்டு சராசரி மழை அளவு 25-200 செ.மீ ஆக இருக்கும்.



ஆ. புல்வெளி வாழிடம்

இவ்வகை வாழிடத்தில் புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியன முதல் மிக உயரமான புற்களைக் கொண்டுள்ளன. உதாரணம்: சவானா.



இ. பாலைவன வாழிடம்

நீரின் அளவு மிகக்குறைவாக உள்ள வாழிடம் பாலைவனம் எனப்படும். இவை பூமியின் மிகவும் வறண்ட பகுதிகள் ஆகும். இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 25 செ.மீக்கும் குறைவாக இருக்கும். பூமியின் நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதம் பாலைவனங்கள் உள்ளன பாலைவனத்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தாவரங்கள் நீரையும், கனிம உப்புக்களையும் சேமித்து வைத்திருக்கும் தடிமனான இலைகளைப் பெற்றுள்ளன. கள்ளித்

தாவரம் போன்ற தாவரங்கள் தண்டில் நீரைச் சேமித்து வைத்திருக்கின்றன. அதன் இலைகள் முட்களாக மாற்றமடைந்துள்ளன. இவை நன்கு வளர்ச்சியடைந்த நீளமான வேர்களைக் கொண்டுள்ளதால் மண்ணில் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன. பாலைவன வாழிடங்களின் வகைகள் பின்வருமாறு.

1. வெப்பமான வறண்ட பாலைவனங்கள்

2. மித வெப்பமான பாலைவனங்கள்

3. கடல் சார்ந்த பாலைவனங்கள்

4. குளிர் பாலைவனங்கள்

உதாரணம்: சப்பாத்திக் கள்ளி, அகேவ், சோற்றுக் கற்றாழை, பிரையோஃபில்லம்


மணல் குன்றுகளால் ஆன மிகப் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் இந்திய துணைக் கண்டத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதி வடமேற்கு இந்தியாவிலுள்ள ராஜஸ்தானிலும், மற்றொரு பகுதி கிழக்கு பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலும் காணப்படுகிறது.


செயல்பாடு 5

உனக்கு அருகில் உள்ள நாற்றுப் பண்ணைக்குச் சென்று ஏதேனும் பத்து வகையான தாவரங்களைத் தேர்வு செய்து அவற்றை ஏற்ற வாழிடத்தில் வளரச் செய்யவும்.

 

2. தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும்

தாவரங்கள் பல ஆண்டுகளாக அவை வாழும் வாழிடங்களில் தொடர்ந்து வாழ்வதற்கேற்ற வகையில் அவற்றில் காணப்படும் சிறப்பம்சங்களே தகவமைப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது வாழிடங்களில் வாழும் தாவரங்கள், அங்கு வாழ்வதற்கேற்ற குறிப்பிட்ட தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. இந்தப் பாடத்தில் பற்றுக் கம்பி, ஏறு கொடி, முட்கள் போன்ற சில தகவமைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

1. பற்றுக் கம்பி (ஏறு கொடிகள்)

பட்டாணி, பாகற்காய் போன்ற மெலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படும் பற்றி ஏறும் உறுப்பே பற்றுக்கம்பி ஆகும். ஒரு ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு தாவரங்கள் மேல் ஏறுவதற்கேதுவாக பற்றுக்கம்பி உள்ளது. உதாரணம்:

• இனிப்புப் பட்டாணி - சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன

• பாகற்காய் - கோணமொட்டு பற்றுக் கம்பிகளாக மாற்றமடைந்து, அத்தாவரம் மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.


 

வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம் மூங்கில் ஆகும்.



2. பின்னு கொடி

ஒருசில தாவரங்கள் நீண்ட மெலிந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. அவை தானாகவே நேராக நிலைத்து நிற்கும் தன்மையற்றவை. அவை ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு வளர்கின்றன. உதாரணம்: சங்குப் பூ. மல்லிகை.



3. முட்கள்

சங்குப் பூ சிலதாவரங்களின் இலைகள்பாதுகாப்பிற்கு உதவும் வகையில் முழுமையாகவோ அல்லது ஓரளவிற்கோ கூரிய முட்களாக அல்லது சிறிய முட்களாக மாறுகின்றன.

உதாரணம்:

.• அகேவ் (ரயில் கற்றாழை) - இந்த வகைக் கற்றாழையில் இலையின் நுனிப்பகுதி மற்றும் விளிம்புகள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.

.• சப்பாத்திக் கள்ளி - சப்பாத்திக் கள்ளியில் இலைகள் சிறுமுட்களாக மாறியுள்ளன.

.• காகிதப் பூ (போகெய்ன்வில்லா தண்டுப் பகுதியில் கூர்மையான முட்கள் காணப்படுகின்றன.


 

உயர் சிந்தனை வினா

கள்ளி வகைத் தாவரங்கள் பச்சை நிறத்தைக் கொண்டு ஒளிச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இத்தாவரத்தின் எந்தப் பகுதியில்ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது?

 

செயல்பாடு 6

களப்பயணம்

மாணவர் பெயர் :

தேதி இடம்

உற்று நோக்கிய தாவரங்களின் வகைகள்:

1. ஏறு கொடிகள்

2. பின்னு கொடிகள்

3. முட்களைக் கொண்ட தாவரங்கள்

இவ்வகைத் தாவரங்களில் காணப்படும் மாற்றுருக்களை அட்டவணைப்படுத்துக

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 4 : தாவர உலகம்