Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பிற எரிபொருள் வாயுக்கள்

அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பிற எரிபொருள் வாயுக்கள் | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

பிற எரிபொருள் வாயுக்கள்

இயற்கை வாயுவைத் தவிர மேலும் சில வாயுக்களும் எரிபொருளாகப் பயன்படுகின்றன. அவற்றுள் சில. உற்பத்தி வாயு, நிலக்கரி வாயு, உயிரி-வாயு மற்றும் நீர் வாயு.

பிற எரிபொருள் வாயுக்கள்

இயற்கை வாயுவைத் தவிர மேலும் சில வாயுக்களும் எரிபொருளாகப் பயன்படுகின்றன. அவற்றுள் சில. உற்பத்தி வாயு, நிலக்கரி வாயு, உயிரி-வாயு மற்றும் நீர் வாயு.


உற்பத்தி வாயு

உற்பத்தி வாயு என்பது கார்பன் மோனாக்சைடு வாயுவும் நைட்ரஜன் வாயுவும் கலந்த கலவையாகும். செஞ்சூடான கல்கரியின் மீது 1100 °c வெப்பநிலையில் நீராவி கலந்துள்ள காற்றினைச் செலுத்துவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது. இது எஃகு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது.


உற்பத்தி வாயு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இது அமெரிக்காவில்மரவாயு என்றும், இங்கிலாந்தில் உறிஞ்சு வாயு என்றும் அழைக்கப்படுகிறது.


நிலக்கரி வாயு

இது ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையாகும். நிலக்கரியைச் சிதைத்து வடிப்பதன் மூலம் இது பெறப்படுகிறது. சிதைத்து வடித்தல் என்பது காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்துவதாகும். இவ்வாயு எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் திறந்த வெப்ப உலையைச் சூடுபடுத்தப் பயன்படுகிறது. சில உலோகவியல் செயல்பாடுகளில் ஒடுக்கும் பொருளாகவும் இவ்வாயு பயன்படுகிறது



நீர் வாயு

இது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவையாகும். கல்கரியின் மீது 1௦௦௦°C வெப்பநிலையில் நீராவியைச் செலுத்தி இது உற்பத்தி செய்யப்படுகிறது.


இது தொகுப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய இது பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் இது பயன்படுகிறது.


உயிரி - வாயு

உயிரி - வாயு என்பது மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு வாயுக்களின் கலவையாகும். இவ்வாயு கரிமப் பொருள்களை உண்டுபண்ணும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைச் சிதைவடையச் செய்து உருவாக்கப்படுகிறது. காற்றில்லா (ஆக்சிஜன் சூழ்நிலையில் கரிமப் பொருள்கள் சிதைவடையும்பொழுது உயிரி - வாயு உருவாகிறது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்திற்கு ஒரு உதாரணம் ஆகும்.



செயல்பாடு 3

உன்னுடைய பகுதியில் உள்ள உயிரி-வாயு உற்பத்தி நிலையத்தை உன் ஆசிரியருடன் சென்று பார்வையிடவும். உயிரி-வாயு அங்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை உற்றுநோக்கு உயிரி - வாயுவின் பயன்களையும், அதன் நன்மைகளையும் பற்றி உன் நண்பர்களுடன் கலந்துரையாடுக. கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த நிலையங்கள் எவ்வகையில் பயன்படுகின்றன?

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்