Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள்

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள் (அ) கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859-1860 (ஆ) தக்காண கலவரங்கள் 1875

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் கிளர்ச்சிகள்

(அ) கருநீலச்சாய (இண்டிகோ) கிளர்ச்சி 1859-1860

செயற்கை நீலச்சாயம் உருவாக்கப்படும் முன் இயற்கையான கருநீலச்சாயம் உலகம் முழுவதும் இருந்த ஆடை தயாரிப்பாளர்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டது. பல ஐரோப்பியர்கள் இண்டிகோ பயிரிட இந்திய விவசாயிகளை பணியில் அமர்த்தினார்கள். பின்னர் அது சாயமாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சாயம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயிகள் இந்தப் பயிரை பயிரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆங்கிலேய முகவர்கள் பயிரிடுவோருக்கு நிலத்துக்கான வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதற்காக, ரொக்கப்பணத்தை முன்பணமாகக் கொடுத்து உதவினர். ஆனால் இந்த முன்பணம் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். உணவு தானியப் பயிர்களுக்குப் பதிலாக இண்டிகோ பயிரைப் பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு மிகக்குறைந்த விலையையே விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர். இந்த குறைந்த தொகையைக் கொண்டு தாங்கள் வாங்கிய முன்பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் கடனில் மூழ்கினர். எனினும், லாபம் கிடைக்காத நிலையிலும், மீண்டும் இண்டிகோ பயிரை பயிரிடும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். விவசாயிகளால் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவே இல்லை. தந்தை வாங்கிய கடன்கள் அவரது மகன் மீதும் சுமத்தப்பட்டன.

இண்டிகோ கிளர்ச்சி 1859ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சி ஒரு வேலைநிறுத்த வடிவில் தொடங்கியது. வங்காளத்தின் நடியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிடப்போவதில்லை என மறுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் இண்டிகோ பயிரிடப்பட்ட வங்காளத்தின் இதர மாவட்டங்களுக்கும் பரவியது. இந்தக் கிளர்ச்சி பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றனர். குடங்கள் மற்றும் உலோகத்தட்டுக்களை ஆயுதங்களாக ஏந்தியபடி பெண்களும் ஆடவரோடு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயப் பண்ணை கொடுமைகள் குறித்து கல்கத்தாவில் வாழ்ந்த அப்போதைய இந்திய பத்திரிக்கையாளர்கள் எழுதினார்கள். நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா எழுதினார். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களிடையே இண்டிகோ விவசாயிகள் குறித்த பிரச்சனைகளை கவனத்தில் கொண்டுவர இந்த நாடகம் பயன்பட்டது.


(ஆ) தக்காண கலவரங்கள் 1875

அதிக அளவிலான வரி விதிப்பு வேளாண்மையைப் பாதித்தது. பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தன. 1875ஆம் ஆண்டு மே மாதத்தில் தக்காணத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன் முதலாக வெடித்ததாகப் பதிவாகியுள்ளது. பூனா மற்றும் அகமதுநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 30 கிராமங்களில் இதே போன்ற கலவரங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகியது. குஜராத்தில் வட்டிக்குப் பணம் வழங்குவோரை குறிவைத்துதான் இந்த கலவரங்கள் பெரும்பாலும் அரங்கேறின. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் விவசாயிகள் நேரடியாக வருவாயை அரசுக்கு செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் புதிய சட்டப்படி எந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டதோ அந்த நிலத்தை எடுத்துக்கொண்டு ஏலம் விட்டு கடன் தொகையை எடுத்துக்கொள்ள கடன் வழங்கியோருக்கு அனுமதி கிடைத்திருந்தது. இதன் விளைவாக உழும் வர்க்கத்திடமிருந்து நிலம் உழாத வர்க்கத்திடம் கைமாறத் தொடங்கியது. கடன் என்னும் மாய் வலையில் சிக்கிய விவசாயிகள் நிலுவைத் தொகையைச் செலுத்த இயலாமல் பயிரிடுதலையும் விவசாயத்தையும் கைவிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்