Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு

பருவம் 3 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு | 5th Tamil : Term 3 Chapter 2 : Arm, thathuvam, sindhanai

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை

உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை : உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை

நீதியை நிலைநாட்டிய சிலம்பு


முன்கதை சுருக்கம்

பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வருகிறான் கோவலன். அங்கு அவன் செய்யாத குற்றத்துக்காக, மரணதண்டனை பெறுகிறான். ஆராயாமல்தீர்ப்பு அளித்ததாக அரசன் மீது குற்றம் சாட்டும் கண்ணகி, தன் காற்சிலம்பைக் கொண்டு, தன் கணவன் கள்வனல்லன் என்பதை உணர்த்துகிறாள். அரசனுக்கும் கண்ணகிக்கும் நடக்கும் உரையாடலே இங்குப் பாடமாக அமைந்துள்ளது.

வாயிற்காப்போன் : அரசே! அரசே! நம் அரண்மனை வாயிலின்முன், அழுத கண்களோடும் தலைவிரி கோலத்துடனும் ஒரு பெண் வந்து நிற்கிறாள்.

பாண்டிய மன்னர் : அப்படியா? அந்தப் பெண்ணிற்கு என்ன துயரமோ? கேட்டாயா?

வாயிற்காப்போன் : கேட்டேன், மன்னவா! அதைப்பற்றி உங்களிடம்தான் கூறவேண்டும் என்று சொல்கிறாள். அவள் உங்களிடம் நீதி கேட்டு வந்திருப்பதாகக் கூறுகிறாள்.

பாண்டிய மன்னர் : நீதி கேட்டு வந்திருக்கிறாளா? சரி, அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பு.

(ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்க, அரசவைக்குள் நுழைகிறாள், கண்ணகி.)

பாண்டிய மன்னர் : இளங்கொடிபோன்ற பெண்ணே! அழுத கண்களுடன் எம்மைக் காண வந்ததன் காரணம் என்ன? நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?

கண்ணகி : ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! என்னையா யாரென்று கேட்கிறாய்? சொல்கிறேன், கேள். உலகம் வியக்கும் வண்ணம் ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனைப் பற்றி நீ அறிவாயா? பார் போற்றும் பசுவை மக்கள் தெய்வமென வணங்க, அதன் கன்றைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற தன் மகனையும் அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றானே மனுநீதிச் சோழன், அவனைப் பற்றியும் அறிவாயா?


பாண்டிய மன்னர் : பெண்ணே, நான் கேட்ட வினாவுக்கு இன்னும் நீ விடை கூறவில்லை. அதைவிட்டுவிட்டு.... நீ வேறு எதையெதையோ கூறிக்கொண்டிருக்கிறாய்.

கண்ணகி : இழப்பின் அருமை தெரியாத மன்னனே! என் நிலை அறியாமல்தானே இப்படிப் பேசுகிறாய். நான் இதுவரை கூறிய பெருமைமிக்க சோழ மன்னர்கள் வாழ்ந்த புகார் நகரமே எனது ஊர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான்,

பாண்டிய மன்னர் : ஓ! இப்போது புரிகிறது. அந்தக் கோவலனின் மனைவியா நீ?

கண்ணகி : போதும் மன்னா, என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால், உன் ஊருக்கு வந்து, என் கால்சிலம்பை விற்க வந்த என் கணவனை அநியாயமாகக் கொன்றுவிட்டாயே, நீ செய்தது தகுமா?

பாண்டிய மன்னர் : பெண்ணே, போதும் நிறுத்து. கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று அஃது ஏற்புடையதே, அஃது அறநெறியும் ஆகும். இதை அனைவருமே அறிவார்களே, உனக்குத் தெரியாதா, என்ன?

கண்ணகி : அறநெறி தவறிய மன்னனே! தவறிழைத்தவர்களைத் தண்டித்தல் தகுதியுடைய மன்னனுக்கு உரியது என்பதை நானும் அறிவேன். ஆனால், நீ கூறுவதுபோல, என் கணவன் கள்வனல்லன், அவனிடம் இருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ, என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது.

பாண்டிய மன்னர் : பெண்ணே, நீ சொல்வது உண்மைதானா? உண்மையாயின் அரசிக்குரிய சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது. ஆன்றோர் நிறைந்த இந்த அவைதனிலே அனைவருக்கும் உண்மையை உணர்த்துகிறேன். யாரங்கே, கோவலனிடமிருந்து பெற்ற அச்சிலம்பை இங்குக் கொண்டு வா!

(சிலம்பைப் பெற்ற மன்னர், அதைக் கண்ணகியிடம் கொடுக்கிறார்)

பாண்டிய மன்னர் : பெண்ணே! இதோ, உன் கணவனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பு

(கண்ணகி, அச்சிலம்பைக் கையில் எடுக்கிறாள்.)

கண்ணகி : நீதி தவறாதவன் என்று உன்னைக் கூறிக்கொள்ளும் மன்னனே, ஒருதவறும் செய்யாத என் கணவனைக் கொன்றது, உன் அறநெறிக்கு இழுக்கு என்று இதோ மெய்ப்பிக்கிறேன். இங்கே பார்.

(கண்ணகி சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைக்கின்றாள்.அச்சிலம்பிலிருந்த மாணிக்கக் கல் ஒன்று, அரசனின் முகத்தில்பட்டுத் தெறித்து விழுகிறது.)

பாண்டிய மன்னர் : ஆ தவறிழைத்துவிட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை செய்தேனே! யானோ அரசன், யானே கள்வன். இதுவரை என் குலத்தில்எவரும் செய்யாத பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டேனே! இனிமேலும் யான் உயிரோடு இருத்தல் தகுமா? இனி எனக்கு வெண்கொற்றக் குடை எதற்கு? செங்கோல்தான் எதற்கு? என் வாழ்நாள் இன்றோடு முடிவதாக!

பாண்டிய மன்னர், தாம் தவறாக வழங்கிய தீர்ப்பால் உண்டான பழிச்சொல்லுக்கு அஞ்சி, அரியணையிலிருந்து தரைமீது வீழ்ந்து, இறந்துபடுகிறார்.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : அறம், தத்துவம், சிந்தனை