Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பாடச்சுருக்கம்: ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

பாடச்சுருக்கம்: ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்

ஆல்கேன்களில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஹேலஜன் அணுக்களை பதிலீடு செய்யும் போது பெறப்படும் சேர்மங்கள் ஹேலோ ஆல்கேன்கள் என அழைக்கப்படுகின்றன.

பாடச்சுருக்கம்

ஆல்கேன்களில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஹேலஜன் அணுக்களை பதிலீடு செய்யும் போது பெறப்படும் சேர்மங்கள் ஹேலோ ஆல்கேன்கள் என அழைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அரீன்களின் ஹைட்ரஜன் அணுக்கள் ஹேலஜன்களால் பதிலிடப்படுமாயின், உருவாகும் சேர்மங்கள் ஹேலோ அரீன்கள் எனப்படுகின்றன.

●Sp3 இனக்கலப்படைந்த கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹேலஜனைப் பொருத்து ஹேலோ ஆல்கேன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இச்சேர்மங்களில் கார்பனைக் காட்டிலும் ஹாலஜன்கள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மையினைப் பெற்றிருப்பதால் Cδ+-Xδ- பிணைப்பு முனைவுள்ளதாகிறது.

ஹேலோ ஆல்கேன்கள்

ஆல்கேன்கள், ஆல்கீன்கள் அல்லது ஆல்கஹால்களிலிருந்து ஹேலோ ஆல்கேன்களைப் பெறலாம். ஹேலோ ஆல்கேன்கள் அவற்றிற்கு இணையான ஹைட்ரோகார்பன்களைக் காட்டிலும் அதிக கொதிநிலையினைப் பெற்றுள்ளன.

ஹேலோ ஆல்கேன்கள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைகள் மற்றும் நீக்க வினைகளுக்கு உட்படுகின்றன. ஓரிணைய ஆல்கேன்களின் பதிலீட்டு வினை SN2 வினைவழிமுறைகளில் நடக்கிறது. வினைபடு பொருள் கைரல் தன்மையினைப் பெற்றிருப்பின் உருவாகும் விளை பொருள் திருப்பப்பட்ட புறவெளி வேதி அமைப்பினைப் (Inverted Configuration) பெற்றிருக்கும். மூவிணைய ஆல்கைல் ஹாலைடுகள் SN1 வினை வழிமுறையைப் பின்பற்றுகின்றன. இவ்வினை கார்பன் நேர் அயனி உருவாதல் வழி நிகழ்கிறது. வினைபடுபொருள் கைரல் தன்மையினைப் பெற்றிருப்பின் உருவாகும் விளைபொருள் ஒளிசுழற்றும் தன்மை அற்ற சுழிமாய்க் கலவையாகும்.

கரிம ஹாலஜன் சேர்மங்கள்

ஹேலோ ஆல்கேன்கள் உலோகங்களுடன் வினைப்பட்டு கிரிக்னார்டு வினைப்பொருள் போன்ற கரிம உலோகச் சேர்மங்களைத் தருகின்றன. இது Rδ- - Mgδ-+ X. என குறிப்பிடப்படுகின்றது. கிரிக்னார்டு வினைபொருள் பல்வேறு வகையான வினைப்பொருட்களுடன் வினைப்பட்டு ஆல்கஹால்கள், ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள், அமீன்கள் முதலிய ஏறத்தாழ அனைத்து வகை கரிம சேர்மங்களையும் தருகின்றன.

ஹேலோ அரீன்கள்

பென்சீன் டைய சோடியம் குளோரைடை சிதைவடையச் செய்வதன் மூலம் ஹேலோ அரீன்கள் பெறப்படுகின்றன. ஹேலோ அரீன்கள், ஹேலோ ஆல்கேன்களைக் காட்டிலும் அதிக நிலைப்புத் தன்மை உடையவை. ஹேலோ அரீன்களின் C-X பிணைப்பானது குட்டையானது மற்றும் வலிமையானது

வழக்கமான நிபந்தனைகளில் ஹேலோ அரீன்கள்

கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுவதில்லை, ஆனால் எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன. ஹேலஜன்களின் எலக்ட்ரான் கவரும் விளைவின் காரணமாக பென்சீன் வளையம் கிளர்வற்றதாகிறது. அதே நேரத்தில் உடனிசைவு விளைவின் காரணமாக இவை o மற்றும் p-ஆற்றுப்படுத்திகளாக செயல்படுகின்றன.

பல ஹாலஜன் சேர்மங்கள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹாலஜன் அணுக்களைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் பல ஹாலஜன் சேர்மங்கள் எனப்படுகின்றன. இவைகள் நமது அன்றாட வாழ்வில் பயனுள்ளதாக இருக்கும் போதிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவனவாக உள்ளன

குளோரோஃபார்ம் உணர்வு நீக்கியாக செயல்படவல்லது. ஆனால் இதன் நச்சுத்தன்மை விளைவின் காரணமாக, ஈதர் போன்ற பாதுகாப்பான உணர்வு நீக்கிகள் இதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன.

அயடோபார்ம் ஆனது அயோடினை வெளியேற்றும் இயல்பை பெற்றிருப்பதால் புரைத்தடுப்பானாகப் பயன்படுகிறது. எனினும் இதன் மணம் ஏற்கத்தக்கதாக இல்லாததால் இதற்கு மாற்றாக அயோடின் கலந்த பிற வேதிக்கலவைகள் பயன்படுத்தப்படுகிறது

கார்பன் டெட்ரா குளோரைடு தீயணைப்பானாகப்  பயன்படுகிறது. ஃப்ரீயான்கள் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகின்றன. இவ்விரு சேர்மங்களும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியனவையாகும்.

● DDTயானது சிறந்த பூச்சிக்கொல்லியாகும். எனினும் இதன் நீண்ட கால நச்சுத் தன்மையின் விளைவாக தற்போதைய காலக்கட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.


வரைபடம்

ஹேலோ ஆல்கேன்கள்



வரைபடம்

கிரிக்னார்ட் வினைபொருட்களின் தொகுப்புமுறை பயன்கள்


11 வது வேதியியல் : அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்