Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | துணைப்பாடம்: முடிவில் ஒரு தொடக்கம்

பருவம் 3 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: முடிவில் ஒரு தொடக்கம் | 6th Tamil : Term 3 Chapter 3 : Innuyir kapom

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்

துணைப்பாடம்: முடிவில் ஒரு தொடக்கம்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம் : துணைப்பாடம்: முடிவில் ஒரு தொடக்கம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

விரிவானம்

முடிவில் ஒரு தொடக்கம்


 

நுழையும்முன்

பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும் வள்ளல் தன்மை அன்று. நமது இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மையே. உறுப்புக் கொடை செய்வோம். மண்ணில் ஒருவரையாவது வாழ வைப்போம். இன்றே இந்தச் சூளுரை ஏற்போம். உறுப்புக் கொடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வை அறிவோம் வாருங்கள்.

 

பெங்களூரு

மாலை நேரம்

"அம்மா... என் தோழிகள் வந்து இருக்கிறார்கள். எங்களுடன் விளையாட வரமாட்டாயா? என்று கேட்கிறார்கள். அவர்களுடன் நான் விளையாடப் போகட்டுமா? " அம்மாவும் அப்பாவும் கண்கலங்குகின்றனர்.

"உன் உடல் நிலை சரியாகட்டும் கண்ணு. நீ சீக்கிரமே விளையாடப் போகலாம். சரியா?"

"சரிம்மா, எனக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசைதான். ஆனால் முன்பு போல் என்னால் ஓடியாட முடியவில்லை. மூச்சு விடவும் சிரமமாக உள்ளது" என்று தாயிடம் சொல்லிவிட்டு, பிறகு தோழிகளை அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.

 

திருக்கழுக்குன்றம்

மாலை நேரம்

"அம்மா என் நண்பர்கள் விளையாட அழைக்கிறார்கள். நான் விளையாடப் போகட்டுமா?" என்றான். "விளையாடிட்டுச் சீக்கிரமாக வந்துவிட வேண்டும்" என்று கூறிய அம்மாவிடம் "சரிம்மா" என்று கூறி நண்பர்களுடன் விளையாடத் தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றான்.

நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினான். நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்குப் புறப்பட்டான். நண்பர்களோடு விளையாடியதை மகிழ்வுடன் அசைபோட்டுக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான். நேரமாகிவிட்டதே; பெற்றோர் கவலைப்படுவார்களே என்னும் சிந்தனையுடன் வாகனத்தை ஓட்டினான்.

 

பெங்களூரு

"உங்கள் மகளின் இதயம் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே வருகிறது. இதயமாற்று அறுவைசிகிச்சை ஒன்றுதான் கடைசி நம்பிக்கை. அதற்கு முயற்சி செய்யுங்கள்" என்று மருத்துவர் கூறியது நினைவிற்கு வந்தது. எந்த வழியிலாவது தம் மகளின் இதயம் சரியாகிவிடாதா என்ற ஏக்கத்துடன், படுக்கையில் இருக்கும் தம் ஆசை மகளின் நிலை கண்டு பெற்றோர் உள்ளம் பதைத்தனர்.

கவலையோடு மகளின் படுக்கை அருகில் அமர்ந்திருந்த பெற்றோர் தம்மை அறியாமல் உறங்கி விட்டனர். திடீரெனக் கண்விழித்தனர். தங்கள் மகள் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

திருக்கழுக்குன்றம்

முன்னால் ஒரு சரக்குந்து சென்றுகொண்டு இருந்தது. அதில் இருந்த கம்பிகள்  வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. அந்தக் கம்பியால் தடுக்கப்பட்டு, தடுமாறிக் கீழே விழுந்தான் அவன். என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே மயக்கம் அடைந்தான். அருகிலிருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

பெங்களூரு

பெற்றோர் : எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே! ஏதாவது சொல்லுங்கள் டாக்டர். எங்கள் மகள் பிழைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர்: நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்களே? உங்கள் மகளுக்கு உடனடியாக இதயமாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் மகளைக் காப்பாற்ற முடியாது.

 

திருக்கழுக்குன்றம்

அவனது இதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருந்தது. வேறெந்த அசைவுமில்லை. சீராட்டிப் பாராட்டி வளர்த்த அன்பு மகனின் நிலைகண்டு பெற்றோர் கதறித் துடித்தனர். செய்வதறியாது தவித்தனர்.

'என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் இருவருமே மருத்துவர்கள். நிலைமையைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்! தலையில் கடுமையாக அடிபட்டிருக்கிறது. மூளை செயலிழந்து விட்டது. தீவிர சிகிச்சை அளித்தாலும் மூளை மீண்டும் செயல்படும் என்று சொல்ல முடியாது. இதயம் மட்டுமே இயங்குகிறது' என்றார் மருத்துவர்.

"டாக்டர்! எங்கள் மகனின் நிலைமை எங்களுக்குப் புரிகிறது. அவனைச் சாகவிட மாட்டோம். எங்கள் இதயம் போன்ற அவனை இழக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம்!"

 

பெங்களூரு

"டாக்டர்! எங்கள் மகளின் நிலைமை எங்களுக்குப் புரிகிறது. அவளைச் சாகவிட விரும்பவில்லை. எங்கள் இதயம் போன்ற அவளை இழக்க மாட்டோம். நாங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். எங்கள் இதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்! இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்! எங்கள் மகளுக்கு வாழ்வு கொடுங்கள்*

 

திருக்கழுக்குன்றம்

எங்கள் மகனின் இதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் இதயத்தை எடுத்துத் தேவைப்படும் யாருக்காவது பொருத்த தாங்கள் சம்மதிக்கிறோம். தயவுசெய்து உடனே செயலாற்றுங்கள். எங்கள் மகனுக்கு வாழ்வு கொடுங்கள். அவனைச் சாகவிட மாட்டோம். இவன் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்குங்கள்.

கதறலுடன் மயங்கி விழுந்தனர் பெற்றோர்.

மருத்துவக்குழுவினர் விரைவாகச் செயல்பட்டனர். அந்த இளைஞனின் இதயத்தைச் சிறுமிக்குப் பொருத்தினர். இதயம் இடம் மாறி நிலைத்தது; துடித்தது.


உறுப்புக்கொடையின் உயர்வினை அன்றுதான் உலகமே அறிந்தது; வியந்தது!

மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் - புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன். பிறந்த போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான். அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்