இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - முகலாயப் பேரரசு | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
அலகு - 2
முகலாயப் பேரரசு

கற்றலின் நோக்கங்கள்
• இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதையும், நிறுவப்பட்டதையும் அறிந்து கொள்ளுதல்
• ஆறு முக்கிய முகலாயப் பேரரசர்களின் பணிகளையும், சாதனைகளையும் பற்றித் தெரிந்து கொள்ளுதல்
• முகலாய ஆட்சியாளர்களின் நிர்வாக சமயக் கொள்கைகளைப்புரிந்து கொள்ளுதல்
• முகலாயரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்த அறிவினைப் பெறுதல்

அறிமுகம்
பாபருடைய வருகையுடன் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவின் குறுகிய கால ஆட்சி தவிர்த்து முகலாயர் ஆட்சி கி.பி (பொ.ஆ) 1526 முதல் 1707 வரை நடைபெற்றது. இந்த ஆண்டுகளில்தான் முகலாயப் பேரரசர்களின் புகழ் ஆசியா, ஐரோப்பா முழுவதிலும் பரவியது. மேற்கண்ட படத்தில் இடம்பெற்றுள்ள மிகச் சிறந்த ஆறு முகலாயப் பேரரசர்களுக்குப் பின்னர் பேரரசு சிதையத் தொடங்கியது.