Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | பட்டை அகலம் (Band width) பரப்பும் அமைப்பின் பட்டை அகலம்

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

பட்டை அகலம் (Band width) பரப்பும் அமைப்பின் பட்டை அகலம்

குரல், இசை, படம் போன்ற அடிக்கற்றை சைகைகள் அல்லது தகவல் சைகைகளின் அதிர்வெண் நெடுக்கம், பட்டை அகலம் எனப்படும். இந்த அடிக்கற்றை சைகைகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட அதிர்வெண்களைக் கொண்டுள்ளது.

பட்டை அகலம் (Band width)

குரல், இசை, படம் போன்ற அடிக்கற்றை சைகைகள் அல்லது தகவல் சைகைகளின் அதிர்வெண் நெடுக்கம், பட்டை அகலம் எனப்படும். இந்த அடிக்கற்றை சைகைகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட அதிர்வெண்களைக் கொண்டுள்ளது.

தகவல்தொடர்பு அமைப்பு வகையானது ஒரு கொடுக்கப்பட்ட அடிக்கற்றைசைகைக்கான அதிர்வெண் பட்டையின் இயல்பைச் சார்ந்து அமையும். சைகையின் மேற்பக்க மற்றும் அடிப்பக்க அதிர்வெண் எல்லைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பட்டை அகலம் தருகிறது. இதனை சைகையால் ஆக்கிரமிக்கப்பட்ட மின்காந்த நிறமாலையின் பகுதி எனவும் வரையறுக்கலாம். V1 மற்றும் V2 என்பன ஒரு சைகையின் அடிப்பக்க மற்றும் மேற்பக்க அதிர்வெண் எல்லைகள் எனில், பட்டை அகலம் = V2 - V1 ஆகும்.


பரப்பும் அமைப்பின் பட்டை அகலம் (Bandwidth of transmission system)

ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில், குறிப்பிட்ட தகவல் பகுதியைப் பரப்புவதற்குத் தேவையான அதிர்வெண்களின் நெடுக்கமானது அலைவரிசையின் பட்டை அகலம் (channel bandwidth) அல்லது பரப்பும் அமைப்பின் பட்டை அகலம் எனப்படும்.

இது பரப்பும் அமைப்பு பயன்படுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிறமாலையுடன் பொருந்தி உள்ளது. எடுத்துக்காட்டாக, வீச்சுப் பண்பேற்ற அமைப்புக்கு 5 kHz சைகையைப் பரப்புவதற்கு, தேவைப்படும் அலைவரிசையின் பட்டை அகலம் 10 kHz ஆகும். அதேசமயம் ஒரு ஒற்றை பக்க - பட்டை அமைப்புக்கு , அதே 5 kHz சைகையைப் பரப்புவதற்கு , தேவைப்படும் அலைவரிசையின் பட்டை அகலம் 5 kHz ஆகும். ஏனெனில் வீச்சுப் பண்பேற்றத்தில் அலைவரிசையின் அகலம், சைகை அதிர்வெண்ணைப்போல் இரு மடங்காகும். எனவே, இருக்கின்ற மின்காந்த நிறமாலை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அலைவரிசைகளை உள்ளடக்குவதற்கு அலை வரிசையின் பட்டை அகலத்தைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சில பயன்பாடுகளில், இதன் அடிப்படையிலேயே பண்பேற்றம் தேர்வு செய்யப்படுகிறது

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்