Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கட்டப் பண்பேற்றம் (PHASE MODULATION -PM)

நன்மைகள் ,பண்பேற்றப்பட்ட அலைவடிவ சமிக்ஞைகள் - கட்டப் பண்பேற்றம் (PHASE MODULATION -PM) | 12th Physics : UNIT 10b : Communication Systems

12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்

கட்டப் பண்பேற்றம் (PHASE MODULATION -PM)

கட்டப் பண்பேற்றத்தில், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை

கட்டப் பண்பேற்றம் (PHASE MODULATION -PM)

கட்டப் பண்பேற்றத்தில், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை (படம் 10.3). இந்தப் பண்பேற்றம் அதிர்வெண் பண்பேற்றப்பட்ட சைகைகளை உருவாக்கப் பயன்படுகிறது. இது அதிர்வெண் பண்பேற்றத்தைப் போன்றதே ஆகும். ஆனால் ஊர்தி அலையின் அதிர்வெண்ணை மாற்றுவதற்குப் பதிலாக இங்கு ஊர்தி அலையின் கட்டம் மாற்றப்படுகிறது.


படம் 10.3 கட்டப் பண்பேற்றம் (அ) ஊர்தி சைகை (ஆ ) அடிக்கற்றை சைகை (இ) கட்டப் பண்பேற்றப்பட்டசைகை

அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்தில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவுக்கு ஏற்றவாறு ஊர்தியின் கட்டம் மாறுகிறது. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் நேர்க்குறி திசையில் அதிகரிக்கும் போது பண்பேற்றப்பட்ட அலையின் கட்ட முன்னணியின் மதிப்பு அதிகரிக்கிறது. இதனால் ஊர்தி சைகை அமுக்கப்படுகிறது அல்லது அதன் அதிர்வெண் அதிகரிக்கிறது.

மாறாக, அடிக்கற்றை சைகையின் எதிர் அரைசுற்றில் ஊர்தி சைகையின் கட்டம் பின்தங்குகிறது. இதனால் ஊர்தி அலையானது நீட்டப்பட்டதைப் போல தோன்றுகிறது. எனவே, அதிர்வெண் பண்பேற்றப்பட்ட அலையைப் போன்றே கட்டப் பண்பேற்றப்பட்ட அலையும் அமுக்கங்கள் மற்றும் தளர்வுகளைக் கொண்டுள்ளது. சைகை மின்னழுத்தம் சுழியாக உள்ள போது (A, C மற்றும் E) ஊர்தி அதிர்வெண் மாறாமல் உள்ளது. கட்டப் பண்பேற்றத்திலும் ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படுகிறது. அதிர்வெண் மாற்றமானது (i) பண்பேற்றும் சைகையின் மின்னழுத்தம் மற்றும் (ii) சைகையின் அதிர்வெண் ஆகியவற்றைச் சார்ந்தது.

குறிப்பு

* சதுர வடிவ அலையானது  அடிக்கற்றை சைகையாக பயன் படுத்தப்பட்டால், பண்பேற்றப்பட்ட சைகையில் கட்ட தலைகீழ்மாற்றம் ஏற்படுகிறது.

* சதுர வடிவ பண்பேற்றும் சைகைக்கு, FM மற்றும் PM அலைகள் முழுவதும் மாறுபட்டதாக உள்ளன.


கட்டப் பண்பேற்றத்தின் நன்மைகள்

i) கட்டப் பண்பேற்றச் சைகையில் இருந்து உருவாக்கப்பட்ட FM சைகையானது மிகவும் நிலையானது.

ii) ஓய்வு நிலை அதிர்வெண் எனப்படும் மைய அதிர்வெண் மிக அதிக நிலைத்தன்மை கொண்டது.


குறிப்பு

FM மற்றும் PM ஒப்பிடுதல்

PM அலையானது FM அலையைப் போன்றதே ஆகும். பொதுவாக FMஐ விட, PM சிறிய பட்டை அகலத்தைப் பயன்படுத்துகிறது. வேறுவகையில் கூறினால், கொடுக்கப்பட்ட பட்டை அகலத்தில், PM இல் அதிக தகவலை அனுப்பலாம். எனவே, கொடுக்கப்பட்ட பட்டை அகலத்திற்கு கட்டப் பண்பேற்றம் அதிக பரப்பும் வேகத்தை அளிக்கிறது.


12 வது இயற்பியல் : அலகு 10b : தகவல்தொடர்பு அமைப்புகள்