ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - ஒலி மாசுபாடு | 8th Science : Chapter 6 : Sound

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

ஒலி மாசுபாடு

காதுக்கு மகிழ்ச்சிதராத எந்த ஒலியும் இரைச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது தேவையற்ற, சுரிச்சலூட்டும் மற்றும் சப்தமான ஒலி ஆகும்.

ஒலி மாசுபாடு

காதுக்கு மகிழ்ச்சிதராத எந்த ஒலியும் இரைச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது தேவையற்ற, சுரிச்சலூட்டும் மற்றும் சப்தமான ஒலி ஆகும். ஒழுங்கற்ற அதிர்வுகளால் இரைச்சல் உருவாகிறது. இரைச்சல் நமக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. பல்வேறு மூலங்களிலிருந்து வரும் உரத்த மற்றும் கடுமையான ஒலிகளால் சுற்றுச்சூழலில் உருவாகும் இடையூறு ஒலி மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது. பரபரப்பான சாலைகள், விமானங்கள், அரவை இயந்திரம் மற்றும் சலவை இயந்திரம் போன்ற மின் சாதனங்கள், சரியான அலைவரிசை தேர்வு செய்யப்படாத வானொலி ஆகியவை ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. விழாக்காலங்களில்  பயன்படுத்தப்படுகின்ற ஒலிப்பெருக்கிகள் மற்றும் வெடிகளும் ஒலிமாசுபாட்டை உண்டாக்குகின்றன. தொழிற்சாலைகளே மாசுபாட்டிற்கான முதன்மையான காரணமாகும். ஒலி மாசுபாடு தொழில்மயமாதல், நகரமயமாக்கல் மற்றும் நவீன நாகரிகத்தின் விளைவு ஆகும்.


1. ஒலி மாசுபாட்டால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்

ஒலி மாசுபாட்டால் ஏற்படும் சில உடல்நலப் பாதிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

• .இரைச்சலானது, எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

• நீண்ட காலத்திற்கு இரைச்சலைக் கேட்கும் போது ஒரு நபரின் தூக்க முறை மாறக்கூடும்.

• தொடர்ந்து இரைச்சலைக் கேட்பதால் செவிப்புலன் திறன் பாதிக்கப்படலாம். சில நேரங்களில், இது செவிப்புலன் இழப்பிற்கு வழிவகுக்கிறது.

• திடீரென அதிகப்படியான இரைச்சலைக் கேட்கும் போது மாரடைப்பு மற்றும் மயக்கம் ஏற்படக்கூடும். இது ஒருவரின் வேலையில் கவனமின்மையை ஏற்படுத்துகிறது. கூம்பு ஒலிப்பெருக்கிகள், ஒலிப்பெருக்கிகள் போன்றவற்றின் சத்தம், கவனமின்மையை ஏற்படுத்துகிறது.

• ஒலி மாசுபாடு ஒரு நபரின் மன அமைதியைப் பாதிக்கிறது. இது நவீன வாழ்வில் தற்போது காணப்படும் பதட்டங்களை அதிகரிக்கிறது. இந்த பதட்டங்கள் உயர் இரத்த அழுத்தம் அல்லது சட்டென கோபப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன.



2. ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்

ஒலி மாசுபாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாம் படித்தோம். அவற்றைக் குறைப்பது நமக்கு அவசியமாகிறது. பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒலி மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கலாம்.

• சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

• அனைத்து வாகனங்களும் ஒலியைக் குறைக்கும் சாதனங்களைக் (Silencer) கொண்டிருக்க வேண்டும்.

• வாகனம் ஓட்டும்போது அதிகப்படியாக ஒலி எழுப்பும் சாதனங்களைத் (Horn) தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும்.

• தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

• அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் குறைந்த ஒலியில் இயக்கப்படவேண்டும்.

• குடியிருப்புப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க வேண்டும்.

• மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகளைச் சுற்றி பசுமையான நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

• இரைச்சலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் காது பாதுகாப்பான்களை அணிய வேண்டும்.

• மரங்களை நடுவதற்கும், திரைச்சீலைகள் மற்றும் மேத்தைகள் போன்று ஓகியை உள்ளிழுக்கும் பொருள்களை தங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கும் மக்களை அறிவுறுத்த வேண்டும்.

 

3. கேட்கும் திறன் இழப்பு

உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுக்கு காது கேளாமைக் குறைபாடு இருக்கலாம். காது கேளாமையின் அறிகுறிகள் பின்வருமாறு.

• காது வலி

• காதில் மெழுகு அல்லது திரவம் இருப்பது போன்ற உணர்வு.

• காதுகளில் தொடர்ந்து ஒலிப்பது போன்ற உணர்வு

காது கேளாமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு.

• வயது முதிர்வு

• சிகிச்சையளிக்கப்படாத காதுத் தொற்று நோய்

• சில மருந்துகள்

• மரபணுக் கோளாறுகள்

• தலையில் பலத்த அடி

• இரைச்சல்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்