Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்

தாராபாரதி | பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால் | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

கவிதைப்பேழை

பாரதம் அன்றைய நாற்றங்கால்


 

நுழையும்முன்

நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு. இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே. தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றும் பாடலை அறிவோம் வாருங்கள்.


புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

 

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்

தேசம் உடுத்திய நூலாடை!

மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு

மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்)

 

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்

காவிரிக் கரையில் எதிரொலிக்க

கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்

கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்)

 

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்

காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!

மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்

கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்)

 

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)

 

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள்பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

 

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!*

- தாராபாரதி

 

சொல்லும் பொருளும்

மெய் - உண்மை

தேசம் - நாடு

 

பாடலின் பொருள்

பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. கானிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.

குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எவ்வாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்கனின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.

 

நூல் வெளி


தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது