Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பிரையோஃபைட்டா

தாவர உலகம் | அலகு 17 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பிரையோஃபைட்டா | 8th Science : Chapter 17 : Plant Kingdom

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்

பிரையோஃபைட்டா

பிரையோஃபைட்டா மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரங்களாகும். இவை கடத்தும் திசுக்களான சைலம் மற்றும் புளோயம் அற்ற, நிலத்தில் வளரக் கூடிய பூவாத் தாவரங்களாகும்.

பிரையோஃபைட்டா

பிரையோஃபைட்டா மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரங்களாகும். இவை கடத்தும் திசுக்களான சைலம் மற்றும் புளோயம் அற்ற, நிலத்தில் வளரக் கூடிய பூவாத் தாவரங்களாகும். இத்தாவரங்கள் நீரிலும், நிலத்திலும் வாழ்கின்றன. எனவே, இவை தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சிக்கு நீர் அவசியமாகும்.

பிரையோஃபைட்டுகளில் தெளிவான சந்ததி மாற்றம் காணப்படுகிறது. கேமீட்டோஃபைட் சந்ததி ஓங்குதன்மை கொண்டது. மேலும், ஸ்போரோஃபைட் சந்ததி கேமீட்டோஃபைட் சந்ததியைச் சார்ந்துள்ளது. கேமீட்டோஃபைட் தாவரமானது தாலஸ் தாள்(லிவர் வார்ட்ஸ்) அல்லது இலை (மாசஸ்) போன்றது. தாவரமானது ரைசாய்டு எனப்படும் வேரிகள் மூலம் வளர்தளத்துடன் நிலையாக ஊன்றப்படுகிறது.

பாலினப் பெருக்கம் ஊகேமஸ் முறையில் நடைபெறுகிறது. இவை நன்கு வளர்ச்சியடைந்த பாலின உறுப்புகளாகிய ஆந்திரிடியா மற்றும் ஆர்க்கிகோனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆண் இனப்பெருக்க உறுப்பான ஆந்திரிடியம் நீந்தும் ஆண் இன செல்லை உருவாக்குகிறது. பெண் இனப்பெருக்க உறுப்பான ஆர்க்கிகோனியம் முட்டையை உருவாக்குகிறது. நீரின் உதவியால் ஆண் இன செல் நீந்திச் சென்று ஆர்க்கிகோனியாவில் உள்ள முட்டையுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்குகிறது. கருமுட்டையானது ஸ்போரோஃபைட் சந்ததியின் முதல் செல் ஆகும். இது குன்றல் பகுப்படைந்து ஒற்றை மய (n) ஸ்போர்களை உருவாக்குகிறது. கேமீட்டோஃபைட் சந்ததியின் முதல் செல் ஸ்போர் ஆகும்.

 

1. பிரையோஃபைட்டாவின் வகைப்பாடு

பிரையோஃபைட்டா தாவரங்கள் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

1. ஹெபாட்டிக்கே (ஈரல் வடிவம்)

2. ஆந்தோசெரட்டே (கொம்பு வடிவம்)

3. மாஸ்கள்


ஹெபாட்டிக்கே (எ.கா. ரிக்சியா)

• இவை பிரையோஃபைட்டாவின் கீழ்நிலைத் தாவரங்களாகும். இவை மாஸ்களை (Moss) விட எளிமையான அமைப்புக் கொண்டவை.

• ஸ்போரோஃபைட் மிகவும் எளிமையானதும் குறுகிய நாள் வாழக் கூடியதுமாகும்.


ஆந்தோசெரட்டே (எ.கா. ஆந்தோசெரஸ்)

• கேமீட்டோஃபைட் வேறுபடுத்த முடியாத தாலஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் வேர் வளரிகள் ஒரு செல்லுடன் காணப்படுகின்றன. இவற்றில் கிளைகள் கிடையாது.

• புரோட்டோனீமா நிலை இவற்றில் காணப்படுவதில்லை.  ஸ்போரோஃபைட்டானது,  பாதம் (Foot) மற்றும் கேப்சூல் எனப்  பிரிக்கப்பட்டுள்ளது.


மாஸ்கள் (எ.கா. ஃபியூனேரியா)

• இவை பிரையோஃபைட்டாவில் உள்ள உயர்நிலைத் தாவரங்கள் கேமீட்டோஃபைட் தண்டு, இலை மற்றும் வேர் என வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ளது.

• புரோட்டோனீமா நிலை இதில் காணப்படுகிறது. ஸ்போரோஃபைட்டானது பாதம், சீட்டா மற்றும் கேப்சூல் எனப் பிரிக்கப்பட்டுள்ளது



2. பிரையோஃபைட்டின் பொருளாதார முக்கியத்துவம்

• இவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.

• ஸ்பேக்னம் என்னும் பூஞ்சை நீரை உறிஞ்சக்கூடியது. எனவே, இது பண்ணை நாற்றங்கால்களில் பயன்படுத்தப்படுகிறது.

• பீட் என்பது நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருளாகும். இது ஸ்பேக்னம் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.


செயல்பாடு 2

உனது வீட்டுக்கு அருகில் உள்ள நாற்றங்கால் பண்ணைக்குச் சென்று தோட்டக்கலையில் ஸ்பாக்னம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்து, குறிப்பெழுதுக.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 17 : தாவர உலகம்