உடலப் புற அமைப்பியல் - மொட்டுகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

மொட்டுகள்

செதில் இலைகள் சூழ்ந்த, பாதுகாக்கப்பட்ட வளரும் பகுதிகள் மொட்டுகளாகும்.

மொட்டுகள் (Buds)

செதில் இலைகள் சூழ்ந்த, பாதுகாக்கப்பட்ட வளரும் பகுதிகள் மொட்டுகளாகும். மொட்டுத் தோற்றுவியே மொட்டாக முதிர்கிறது. மொட்டில் கணுவிடைப்பகுதி நீட்சியடையாத குறுக்கப்பட்ட அச்சும், மூடிய இளம் இலைகள் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இந்த மொட்டுகள் வளர்ச்சியடையும் பொழுது கணுவிடைப் பகுதிகள் நீண்டு இலைகள் விரிவடைகின்றன. மொட்டின் வடிவமைப்பானது தண்டைப் போலவே இருப்பதனால் அவை பக்கக் கிளைகளாகவோ, நுனியில் மலராகவோ அல்லது மஞ்சரியாகவோ வளர்கின்றன. தோற்றத்தின் அடிப்படையில் மொட்டுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். (அ) உச்சி அல்லது நுனி மொட்டு (ஆ) பக்க அல்லது கக்க மொட்டு. பணியின் அடிப்படையில் மொட்டுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். (அ) உடல மொட்டு (ஆ) மலர் அல்லது இனப்பெருக்க மொட்டு.

1. உச்சி அல்லது நுனி மொட்டு: இம்மொட்டுகள் மையத்தண்டின் நுனியிலோ கிளைகளின் நுனிகளிலோ அமைந்திருக்கும்.

2. பக்க அல்லது கக்க மொட்டு: இவை இலைகளின் கக்கங்களில் தோன்றிகிளையாகவோ மலராகவோ வளர்ச்சியடையும்.

3. கக்க மேல் மொட்டு : இவை கக்கத்தின் மேல், கணுக்களின் மீது உருவாகும் மொட்டுகளாகும். எடுத்துக்காட்டு: சொலானம் அமெரிக்கானம்.

4. துணை மொட்டு: கக்க மொட்டின் பக்கவாட்டிலோ அதன் மேலோ தோன்றும் கூடுதல் மொட்டு துணை மொட்டாகும். எடுத்துக்காட்டு: சிட்ரஸ், டுராண்டா..

5. வேற்றிட மொட்டுகள்: தண்டைத் தவிர தாவரத்தின் மற்ற பாகங்களிலிருந்து தோன்றும் மொட்டுகள் வேற்றிட மொட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. வேர் மொட்டுகள் (Radical buds). எடுத்துக்காட்டு: மில்லிங்டோனியா (மரமல்லி), பெர்ஜீரா கோனிகியை (முரைய்யா கோனிகியை - கறிவேப்பிலை). இலை மொட்டுகள் (Foliar buds): எடுத்துக்காட்டு: பெகோனியா, பிரையோஃபில்லம். தண்டு மொட்டுகள் (Cauline buds): எடுத்துக்காட்டு: டயாஸ்கோரியா (வள்ளிக்கிழங்கு), அகேவ்

6. குமிழங்கள்: இனப்பெருக்கத்திற்காக உருமாற்றம் அடைந்த பெருத்த மொட்டுகள் குமிழங்களாகும். குமிழங்கள் தாய்ச் செடியிலிருந்து விடுபட்டு தரையில் விழுந்த பின் புதிய தாவரங்களாக வளர்வதின் மூலம் உடல் இனப்பெருக்கத்திற்கு (Vegetative reproduction) உதவுகின்றன. எடுத்துக்காட்டு: கற்றாழை மற்றும் அலியம் ஃபுரோலிஃபெரம்

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்