Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு

பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

கண்மணியே கண்ணுறங்கு


 

நுழையும்முன்

பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை. பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி; கேட்டாலும் மகிழ்ச்சி. ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கன் தமிழில் ஏராளமாக உள்ளன. தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்தாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.


ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

 

நந்தவனம் கண் திறந்து

நற்றமிழ்ப் பூ எடுத்து

பண்ணோடு பாட்டிசைத்துப்

பார் போற்ற வந்தாயோ!

 

தந்தத்திலே தொட்டில் கட்டித்

தங்கத்திலே பூ இழைத்துச்

செல்லமாய் வந்து உதித்த

சேரநாட்டு முத்தேனோ

 

வாழை இலை பரப்பி

வந்தாரைக் கை அமர்த்திச்

சுவையான விருந்து வைக்கும்

சோழநாட்டு முக்கனியோ!

 

குளிக்கக் குளம் வெட்டிக்

குலம்வாழ அணை கட்டிப்

பசியைப் போக்க வந்த

பாண்டிநாட்டு முத்தமிழோ!

 

கண்ணே கண்மணியே

கண்ணுறங்கு கண்ணுறங்கு!

 

சொல்லும் பொருளும்

நந்தவனம் - பூஞ்சோலை

பண் - இசை

பார் - உலகம்

இழைத்து - பதித்து

 

தொகைச்சொற்களின் விளக்கம்

முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்

முக்கனி - மா, பலா, வாழை

முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

 

பாடலின் பொருள்

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ! தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ! குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

 

நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்