Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வேர் அமைவின் வகைகள், பணிகள்

தாவரவியல் - வேர் அமைவின் வகைகள், பணிகள் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

வேர் அமைவின் வகைகள், பணிகள்

I. ஆணி வேர் அமைவு. II. வேற்றிடவேர் அமைவு

வேர் அமைவின் வகைகள் (Types of root system)




I. ஆணி வேர் அமைவு (Tap root system):

முளைவேரின் நேரடி நீட்சி முதல்நிலை வேராகிறது. இருவிதையிலைத் தாவரங்களில் உள்ளது போல் நிலைத்து தொடர்ந்து வளரும் முதல்நிலை வேர் ஆணி வேர் அமைவு என்று அழைக்கப்படுகிறது. ஆணி வேர் இத்தாவரங்களில் முக்கிய வேராக அமைகிறது. ஆணிவேர் பக்கவாட்டு வேர்களையும் அவற்றிலிருந்து கிளைக்கும் பல மெல்லிய வேர்களையும் உருவாக்குகிறது. பக்கவாட்டு வேர்களும் அவற்றின் கிளைகளும் சேர்ந்த தொகுதி இரண்டாம் நிலை வேர்கள் என்று அழைக்கப்படுகின்றது.


II. வேற்றிடவேர் அமைவு (Adventitious root system):

முளைவேர் அல்லாமல் தாவரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உருவாகும் வேர்களுக்கு வேற்றிட வேர் அமைவு என்று பெயர். இவ்வகை வேர்கள் தண்டின் அடிப்பகுதியிலிருந்தோ, கணுக்களிலிருந்தோ அல்லது கணுவிடைப் பகுதியிலிருந்தோ தோன்றும். எடுத்துக்காட்டு: மான்ஸ்டீரா டெலிஷியோசா (சீமை திப்பிலி), பைப்பர் நைக்ரம் (மிளகு).

ஒருவிதையிலைத் தாவரங்களின் முதல் நிலைவேர், குறுகிய காலமே வாழ்ந்து மடியும். பின்னர் தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்து பெரும்பாலும் பக்கவாட்டு வேர்கள் தோன்றுகின்றன. இவ்வேர்கள் பெரும்பாலும் ஒரே அளவில் கொத்தாக நூலிழைபோல் காணப்படும். இத்தகைய வேர் அமைவுக்கு சல்லி வேர் அமைவு (Fibrous root system) என்று பெயர். இவ்வேரமைவு பொதுவாகப் புற்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஒரைசா சட்டைவா (நெல்), எலுசின் கோரகானா (கேழ்வரகு).




வேரின் பணிகள்

(Functions of the root)

வேரானது இரண்டு வகையான பணிகளைச் செய்கிறது. அவை முறையே முதல் நிலைப் பணி, இரண்டாம்நிலைப் பணி.

முதல் நிலைப் பணி

1. நீரையும் கனிமங்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சுதல்.

2. தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துதல்.

இரண்டாம் நிலைப் பணி

சில தாவரங்களின் வேர்கள் முதல் நிலைப் பணிகளைத் தவிர வேறு சில பணிகளையும் செய்கின்றன. இவை இரண்டாம்நிலைப் பணிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்கு வேர்கள் உருமாற்றம் அடைகின்றன.

 

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்